Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'செல்லாத ரூபாய்'! சரிந்த தங்கம் விற்பனை!

               

ரூ.500, ரூ.1000 செல்லாது என்றும் அவற்றுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வாங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்ததின் எதிரொலியாக நாடு முழுவதும் தங்கம் விற்பனை வெகுவாகச் சரிந்துள்ளது என்று நகை வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரூபாய் 500,1000 ஆகியவை செல்லாது என்றும் அவற்றுக்குப் பதிலாக வங்கிகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். உடனடியாக இது இரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த 8-ம் தேதி இரவு 12 மணி வரை தங்கம் விற்பனை தாறுமாறாக எகிறியது. வழக்கமாக விற்கும் தங்கத்தைவிட அன்று சில மணிநேரங்களில் மட்டும் 600 மடங்கு கூடுதலாக விற்பனை நடந்துள்ளது.

அதிக பணத்தை வீடுகளில் வைத்திருந்த பெரும் பணக்காரர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை ஏராளமானோர் தங்களிடமிருந்த ரொக்கப் பணத்தைக்கொடுத்து தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கினர். இது குறித்து அகில இந்திய கற்கள் மற்றும் தங்கநகை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் அனந்தபத்மநாபன் செய்தியாளர்களுக்கு பேட்டியில், "நள்ளிரவு வரை நீடித்த தங்கநகை விற்பனையின் காரணமாக ஒரே நாளில் 600 மடங்கு வரை விற்பனை அதிகரித்தது. வாடிக்கையாளர்கள் பலரும் தொலைபேசியில் அழைத்து நகை வாங்குவதற்கு பெரும் தொகையை எடுத்து வரவிருக்கிறோம், பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டனர். செவ்வாய்க்கிழமை இரவு வரை பணம் பெறப்பட்டு நகை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், புதன்கிழமை முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படாது என்று நாங்கள் அறிவித்துவிட்டோம். தொலைபேசியில் அழைத்தவர்களிடமும் இதையே தெரிவித்தோம். கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மட்டுமே நகை வாங்குவதற்கு அனுமதித்தோம். இதன் காரணமாக புதன்கிழமை தங்கத்தின் விற்பனை வெகுவாகக் குறைந்தது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை தங்கத்தின் விற்பனை குறைவாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இருந்த இந்த நிலைமை அடுத்த நாளில் தலைகீழானது. பழைய 500,1000 ரூபாய் தாள்களை எந்த நகைக்கடையிலும் வாங்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே வாக்குவாதம் செய்த செய்திகள் ஊடகங்களில் வேகமாகப் பரவின. சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகரில் உள்ள பிரமாண்ட நகைக் கடைகளில் ஆர்வமாக நகைகள் வாங்க வந்தவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்களில்  திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு என்று நகைகள் வாங்க படியேறியவர்கள் தங்களிடம் இருந்த  பணம் செல்லாது என்று அறிந்ததும் நொடிந்து போயினர். அவர்கள் நகைக் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தோற்றுப்போய், தங்கள் விதியை நொந்துகொண்டு சென்றனர்.

மோடியின் ஒரு அறிவிப்பு  பொதுமக்களை எல்லா நிலைகளிலும் பாடாய்ப் படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் தங்கம் விற்பனை எப்படி இருக்கிறது என்று மெட்ராஸ் தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜெ சலானியிடம் கேட்டோம்.

           

அவர் கூறுகையில், "கடந்த ரெண்டு நாளாக தங்கம் மற்றும் நகைகள் விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கிறது. வழக்கமாக விற்கும் அளவில் 20% வரை தான் இரண்டு நாளாக விற்பனை ஆகிறது. இது இதுவரையில் இல்லாத சரிவு. நகைக்கடைகளில், இன்று இல்லாவிட்டால் நாளையும் விற்பனை நடக்கும். எப்படியும் மக்கள் நகைகள் வாங்குவார்கள். ஆனால், அவர்களின் நிலை இப்போது திண்டாட்டமாகவே இருக்கிறது. கையில் பணத்தோடு வந்து அவர்கள் திரும்பிச் செல்வது மிகவும் கஷ்டமான நிலை. சென்னையாவது பரவாயில்லை. பிற மாவட்ட நகரங்களில், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடும்ப விழாக்களுக்கு நகைகள் வாங்க வேண்டும் என்றால் எப்படி வாங்குவார்கள், அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால் எத்தனை திருமணங்கள் சிக்கலில் உள்ளனவோ என்று தெரியவில்லை. எதிர்பாராத நடவடிக்கை இது. இதனால் தங்கம் விற்பனை மிகவும் சரிவைக் கண்டுள்ளது." என்றார்.

தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே  இருக்கிறது. செவ்வாய் அன்று தங்கத்தின் விலை ரூபாய் 30,024 ஆக இருந்தது. ஆனால் அடுத்த நாள் 30,147 ரூபாயாக உயர்ந்தது. புதன் கிழமை தங்கம் சவரன் ரூபாய் 29,945 என்று விற்கப்பட்டது. வெள்ளி கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 31,711 ஆக ஏறியது.

-சி.தேவராஜன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ