Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ரூ.60 கோடி சொத்துக்களை காப்பாற்றுவாரா மோடி?'  -மீனவர்களை மிரட்டும் வடகிழக்குப் பருவமழை

மிழக மீனவர்களின் பிரச்னை நாள்தோறும் நீண்டுகொண்டே செல்கிறது. ' இரு நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. வடகிழக்குப் பருவமழை பெய்வதற்குள்ளாவது, மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட வேண்டும்' என ஆதங்கப்படுகிறார் பேராசிரியர்.ஜவாஹிருல்லா. 

மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா மற்றும் இலங்கை நாடுகளிடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், மீனவர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. " தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் நலனுக்காக, நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை" எனக் கொந்தளிக்கிறார் ராமநாதபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர்.ஜவாஹிருல்லா.

மேலும், " நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாம்பன் பகுதியில் 'கடல் தாமரைப் போராட்டம்' நடத்தியது பா.ஜ.க. அப்போது பேசிய பா.ஜ.க மூத்த தலைவரும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், 'மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத் துறை அமைச்சகம் உருவாக்குவதோடு, கச்சத்தீவு மீட்கப்பட்டு, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்றார். ' மீனவர் பிரச்னைக்கு தொழில்நுட்ப முறையில் தீர்வு காணப்படும்' எனவும் அறிவித்தார் நரேந்திர மோடி. 
 
ஆனால், மத்தியில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது பா.ஜ.க அரசு. மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. டெல்லியில் நடைபெற்ற மீனவர் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையிலும், இலங்கை அரசுக்கு சாதகமாகவே மத்திய அரசு முடிவுகளை அறிவித்துள்ளது. இதனால் மீனவ மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதைவிடக் கொடுமை, பேச்சுவார்த்தையின்போது இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசும் போது, ' தமிழக மீனவர்களை கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும்' என அறிவித்திருக்கிறார். இதற்கு எவ்வித எதிர்ப்பையும் மத்திய அரசு காட்டவில்லை. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறை பிடிக்கப்படும்போதும், உதவிக்காக மத்திய அமைச்சர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைதான் உள்ளது. தற்போது எங்களுடைய கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். இந்திய மீனவர்களின் 115 படகுகள், கடந்த 20 மாதங்களாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை மூலம் படகுகள் விடுவிக்கப்படும் என்று மீனவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். 

ஆனால், ' இரு நாட்டு அதிகாரிகள் கூட்டு செயல்பாட்டுக்குக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி கூட்டம் நடைபெறும்' என்றும், அந்தக் கூட்டத்தில், ' படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்' என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், மீனவர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். நடுத்தர மீனவர்களின் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வீணாகிப் போவதை பற்றி மோடி அரசுக்கு கவலையில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இரு நாட்டு கூட்டு ஆணையத்தின் கூட்டங்களின்போது எடுக்கப்படாத முடிவுகளை வெளியுறவுத் துறை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளின் கூட்டுக் குழுவில் எப்படி எடுக்க முடியும்?

பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லாமல், இலங்கை அரசு காலம் கடத்துகிறது. அதற்கு இந்திய அரசு துணை போகக் கூடாது. மீனவர்களுக்கு இடத்தை அறியும் தொலைத் தொடர்பு சாதனம் வழங்குவது, இருநாட்டு கூட்டு ரோந்துக்கு ஏற்பாடு செய்வது போன்ற முடிவுகள் அனைத்தும், மீனவர்களை வஞ்சிக்கும் தந்திர நடவடிக்கைகளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள் விடுவிக்கப்படவில்லை என்றால், அந்த படகுகள் அனைத்தும் பழுதாகிவிடும். படகுகளின் மரக்கட்டைகள்கூட மிஞ்சாது. எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்கிறார் குமுறலோடு. 

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ