Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மக்காஸ் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்....!’ - 500, 1000 ரூபாய் நோட்டும், சாமானியனும்!

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிச்சாலும் அறிவித்தார் மோடி, அதகளமாகிவிட்டது இந்தியா. அறிவித்த அடுத்த நொடியே அகதிகள் போல உணர ஆரம்பித்துவிட்டனர், நேற்றுவரை தேசிய கீதத்திற்கு விரைப்பாக எழுந்து நின்று சல்யுட் அடித்த நம்மவர்கள்.

'அடுத்த அண்ணா நகர் 'னு அறிவிக்கப்பட்டிருக்கிற நம்ம திருமிழிசைக்கு பக்கத்துல 2 பிளாட் வாங்கிப்போட்டவரையும்கூட ஒத்த நுாறு ரூபாய்க்காக பக்கத்து வீட்டின் கதவை தட்ட வெச்சிட்டது மோடியின் முன்னிரவு அறிவிப்பு. பல லட்சங்களை 'பல்க்' ஆக வைத்துக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டிருக்க ஒத்த 2 ஆயிரம் ரூபாயை கையிடுக்கில் வைத்துக்கொண்டு நம்மாட்கள் செய்கிற அளப்பரை கொஞ்சமல்ல, ஓவரோ ஓவர்.

கசகசவென சட்டை கசங்க வரிசையில் நின்று கவுன்டரில் புதிய கரன்சித் தாளை வாங்கிய அடுத்த நொடி .'போர்ப்ஸ்' வெளியிடும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றதைப்போல நம்ம ஆள் முகத்தில் ஒரு குஷி.

அந்த 2 ஆயிரத்தை பங்குபோட்டுக்கொள்ள மளிகை கடைக்காரர் முதல் லாண்டரி கடைக்காரர்வரை வீட்டு வாசலில் காத்திருப்பது வேறு கதை.

செல்பி எடு கொண்டாடு...

மோடி வித்தையால் 2 நாட்கள் பணத்தை காணாமல் தவித்தவர்கள் புதிய நோட்டை வாங்கியதும் செல்பி எடுத்து அதை கொண்டாடினார்கள். ஒரு சிலர் கவுன்டரில் இருந்த கேஷியரையும் உடன் நிற்க சொல்லி ரவசு செய்தனர். மறக்காமல் அதை தங்கள் முகநுாலிலும் பதிந்து, 2000 ரூபாய்த் தாளுடன் முகநுாலில் படம் எடுத்துப் போடாதவர்கள் இந்திய பிரஜைகளே கிடையாது என்பதுபோன்ற குற்ற உணர்ச்சியை வேறு ஏற்படுத்திவிட்டனர்.

தேர்தல் தினத்தில்  ஒற்றை விரலை காட்டி பல்லிளிக்கும் ஸ்டீரியோ டைப் குடிமகன்கள் போல நேற்று முழுவதும் முகநுாலில் இந்த 2000 ஆயிரம் ரூபாய் பிரகஸ்பதிகள்தான் .ஃபேக் ஐடி, நிஜமான ஐடி என எதிலும் நீக்கமற நிறைந்திருந்தார்கள். மிடில...இவர்களால் அன்றைய தினம் வரிசையில் நின்றும் புதிய தாள் கிடைக்காதவர்கள் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு அலுவலகத்தின் ஓசி வைஃயில் மீம்ஸ்களை போட்டு பணசாந்தி மன்னிக்கவும் மனசாந்தி அடைந்தனர்.

புதிய தாள்கள் விநியோகம் செய்யப்பட்ட அன்று காலை யார் யாரெல்லாம் புத்தம்புதுத் தாளுடன் அலுவலகம் வந்தார்களோ அவர்கள் எல்லாம் 'சொர்க்கம்' பட சிவாஜி போல சீன் போட்டார்கள். அண்ணாசாலையின் மத்தியில் இயங்கும் அந்த அலுவலகத்தில் மேனேஜருக்கும் கிளர்க்குக்கும் பலகாலமாக ஏழாம் பொருத்தம். இதுதான் சமயம் என்று தன் வங்கி நண்பர் மூலம் மோடியின் அதிகாரத்தையும் மீறி தன் மேனேஜருக்கு 8000 ஆயிரம் ரூபாய் மாற்றித்தந்தார் நம் நண்பர். இப்போது தெருமுக்கு டீக்கடையில் ஃபைவ் ஸ்டார் விளம்பரத்தில் வரும் சகோதரர்கள் போல ஒட்டியே திரிகின்றனராம் இருவரும். போத்தீஸ் மட்டுமல்ல; புது ரூபாய் நோட்டும் உறவை இணைக்கும் பாலம்தான்போல.

இன்னொருபுறம், 500,1000 ரூபாய்த்தாள்களோடு சேர்த்து ஹலோ என்ற வார்த்தையையும் மோடி செல்லாது என அறிவித்துவிட்டாரோ என சந்தேகம் வரும் அளவுக்கு கடந்த வியாழக்கிழமை போன் உரையாடல்கள் எல்லாமே 'மாத்திட்டியா' என்ற வார்த்தையில்தான் துவங்கியது. குழந்தை குட்டிகளைக்கூட அப்புறம்தான் விசாரிச்சார்கள். இழவு சொல்ல போன்போட்டாலும் இதே ரவுசுதான். இந்த முனையில் இருக்கிறவன்...“தாத்தா செத்துட்டாரு வந்துடுங்க”...மறுமுனையில இருக்கிறவன் சொல்றான்...பேங்குக்கு போய்ட்டுத்தான் வருவேன்..அதுவரை எடுக்காதீங்க”.

பல இடங்களில் ஏதோ தீவிரவாதிகள்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பதுபோல் ரகசிய வார்த்தைகளைப்போட்டு பேசி பயமுறுத்தினர் சிலர்.

தேனாம்பேட்டை சிக்னலில் நான் கேட்ட உரையாடலை கேட்டால் உங்களுக்கே அந்த சந்தேகம் வரும்...

“என்ன மாத்திட்டியா?”
“மாத்தலை”
 “நான் மாத்திட்டேன்...”
“எவ்வளவு தந்தாங்க...”
“நாலுதான்...”
“இங்க பேங்க் ல கூட்டம் அதிகமா இருக்கு அதான் திரும்ப வந்துட்டேன்”
“எங்க ஆபிஸ் பக்கத்துல ஒரு பேங்க் ல கூட்டம் அதிகமா இல்லை...இப்போ கிளம்பிவந்தா ஈஸியா வேலை முடிஞ்சிடும்...எல்லார்ட்டயும் சொல்லிட்டிருக்காத ரகசியமா வா..”
“உடனே வர்றேன்...”

அடேய் அடேய்....நாலு கிழிஞ்ச 500 ரூபாயை மாற்ற ஏதோ தீவிரவாத குழு உறுப்பினர் ரேஞ்சுக்கு பேசி ஏன்டா பில்டப் கொடுக்கிறீங்கன்னு கேட்க தோணிச்சி...ஆனா நாமளும் வங்கிக்கு போய் வரிசையில நிக்கனுமே வம்பு எதுக்குன்னு வந்துட்டேன்.

ஸ்பென்சர் சரவணபவனுக்கு அருகில் தன் கேர்ள் பிரண்டை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்த கல்லுாரி மாணவனிடம், “டேய் புதுநோட்டை மாத்தி வெச்சிருக்க இல்ல?...” என்றதோடு பர்ஸை எட்டிப்பார்த்தபின்னரே பைக்கில் ஏறி அமர்ந்தாள் தோழி....
என்னா ஒரு சூதானம்!

இப்படி ஒரு 2000 ரூபாய் தாளை வெச்சிட்டு நம்ம ஆள் பன்ற அலம்பல் தாங்கல...

பல குடும்பங்கள்ல பத்து வருடமா படுத்து கிடந்த தாத்தா பாட்டிகளையும்கூட பட்டி டிங்கரிங் பார்த்து கையில் வலது கையில் கோலும் இடது கையில் .ஃபார்மும் கொடுத்து வரிசையில் நிற்கவெச்சிட்டாங்க...சாகிற வயசில மோடி அவங்ககிட்ட திட்டு வாங்கனும்னு எழுதி வெச்சிருக்கு!... நாம என்ன சொல்றது?

500, 1000 ரூபாய்க்கு மோடி முடிவு விழா நடத்திய அன்று நம்ம ஆள் ஒருத்தன் விபரம் தெரியாமல் டாஸ்மாக் கடைக்கு போய் சரக்கு கேட்க அவன் விபரத்தை சொல்ல நம்மாள் குடியே முழ்கியதுபோன்ற தலையில் கைவைத்துக் கொண்டான். தள்ளாடி... மன்னிக்கவும் மன்றாடிக்கேட்டும் மனமிரங்கவில்லை அந்த கடைக்காரர். விரக்தியில், 'இந்த நாளை உன் டைரியில குறிச்சி வெச்சிக்கோ' என்று அண்ணாமலை ரஜினி போல அரற்றியபடி திரும்பிவந்துவிட்டான்.

மறுநாள் புதிய நோட்டை வாங்கியதும் அவன் சென்ற முதல் இடம் டாஸ்மாக்தான். அப்புறம் என்ன சரக்குக்கு மட்டுமல்ல பத்து ரூபாய் பொறிகடலைக்கு கூட “டேக் தட் 2000“ என கவுண்டமணி பாணியில் 2000 ரூபாய் நோட்டை நீட்டி அவன் செய்த அலம்பல்கள் அத்தனையும் பவர்ஸ்டார் எஃபெக்ட்.

வெகு சீக்கிரம் மோடிஜி 2000 போல 500, 100,50 ருபாய்களையும் அச்சிட்டு புழக்கத்தில் விடுவது சாலச் சிறந்தது. இல்லையென்றால் நம்ம மக்காஸ் கோவிலில் செருப்பு விடுவதற்கான கட்டணத்துக்குக் கூட 2000 ரூபாய்த்தாளைக் காட்டத் துவங்கிவிடுவான்.

ஏன்னா நாமெல்லாம் மேட் இன் இன்டியா!

- எஸ். கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close