Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டில் ஒரு துப்பாக்கி நகரம்..! திகில் தென் மாவட்டங்கள்

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கள்ளத் துப்பாக்கிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பான விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எட்டாம் வகுப்பு வரை படித்த அத்தை மகனை தன்னுடைய சகோதரி காதலித்ததற்காக சட்ட கல்லூரி மாணவர் சிம்சன் என்பவர் துப்பாக்கியால் தனது அத்தை, மாமாவை சுட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சட்டக் கல்லூரி மாணவன் சிம்சனுக்கு துப்பாக்கி கொடுத்தது ஒரு வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வள்ளியூரை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷை போலீஸார் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் கள்ளத் துப்பாக்கிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை போலீஸார் களமிறங்கியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தூரில் அரசு பஸ்சுக்குள்ளேயே துப்பாக்கியால் சுட்டு கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தாலும் இவர்களுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்தது தொடர்பாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ராபர்ட் கென்னடி கைது செய்து செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வள்ளியூரில் துப்பாக்கியால் அத்தை, மாமா ஆகிய இருவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய  மாவட்டங்களிலும் கள்ளத் துப்பாக்கிகள் நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. வழக்கறிஞர்கள் மூலம் இந்த துப்பாக்கிகள் ரவுடிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும், வாடகைக்கும் துப்பாக்கிகள் கிடைப்பதாகவும் சொல்கின்றனர். இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்த போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கிகள் உரிமம் பெற்றுள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் யாருக்கெல்லாம் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டேன். அப்போது போலீஸ் கமிஷனராக கருணாசாகர் இருந்தார். முதலில் 7 துப்பாக்கிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்த பதிலில் திருப்தி இல்லை என்பதால் மேல்முறையீடு செய்தேன். அதற்கு 27 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதாக பதில் வந்தது. இதனால் உரிமம் வழங்குவதில் குளறுபடி இருப்பதால் இரண்டாவது முறையாக மீண்டும் மேல்முறையீடு செய்தேன். அப்போது 86 பேர் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 64 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டதாகவும் பதில் கிடைத்தது. 64 பேரில் 36 பேர் துப்பாக்கிகளை வாங்கியதாகவும் தெரிவிக்கபபட்டு இருந்தது. இதனால் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பினேன். அதன்பேரில் சிபிசிஐடி போலீஸ் டி.எஸ்.பி. கந்தசாமி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டதாகவும், அதற்காக குறிப்பிட்ட தொகை கைமாறியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர், மணிவண்ணன், விரிவான அறிக்கையை சமர்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பல உண்மைகள் உள்ளன. அந்த அறிக்கையை கேட்டு ஆர்.டி.ஐ. மூலம் போராடி வருகிறேன். நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நிலவும் கள்ளத் துப்பாக்கி நடமாட்டத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தென்மாவட்டங்களுக்கு உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரிலிருந்து கள்ளத் துப்பாக்கிகள் சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. வள்ளியூர் சம்பவத்தில் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் மூலம் 30,000 ரூபாய்க்கு இந்த துப்பாக்கி வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். துப்பாக்கி சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருக்கும் ஒரு நபர் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவரை பிடிக்க அங்கு தனிப்படை விரைந்துள்ளது. மேலும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் 7 கள்ளத் துப்பாக்கிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை பறிமுதல் செய்த பிறகே விவரம் தெரியவரும்" என்றார். 

நமது நிருபர் 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ