Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக், அரசு பஸ் டிப்போக்களில் 500 ரூபாய் நோட்டுகளாக மாறிய 100 ரூபாய்!


தர்மபுரி : டாஸ்மாக், அரசு பஸ் டிப்போக்களில் கலெக்‌ஷன் ஆன ரூ.100 மற்றும் அதற்கு கீழ் உள்ள தொகைகளுக்கு மாறாக வங்கியில் ரூ.500, 1000 நோட்டுகளாக கட்டப்பட்டுள்ளன. இது கறுப்புப் பணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 8-ம் தேதி  இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி கொடுத்த அறிவிப்பு இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்த அறிவிப்பால் கையில் 500 ரூபாயை வைத்துக்கொண்டு காபி குடிக்க கூட வழியில்லாமல் தவித்தவர்கள் பலர்.  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தின் பல இடங்களில் 500 ரூபாய்க்கு 100 ரூபாய் வீதத்தில் கமிஷன் பார்த்தார்கள். இந்நிலையில் அரசு டிப்போக்கள், டாஸ்மாக்களில்  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படாமல் சில்லறை வசூலிக்கப்பட்டது. ஆனால் வங்கியில் செலுத்தும் போது இவை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக மாறிப்போயுள்ளன.

8-ம் தேதி அறிவிப்பு வந்தபிறகு 9,10-ம் தேதிகளில் அரசு நிறுவனங்களான போக்குவரத்துக்கழகம், டாஸ்மாக்குகளில் கூட 500,1000 ரூபாய் நோட்டுகள் பெறப்படவில்லை. ஆனால், அந்த இரண்டு நாட்கள் கலெக்‌ஷன்களாக பெரும்பாலான இடங்களில் அவர்கள் வங்கியில் செலுத்தியது அத்தனையும் 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் என்கிறார்கள் அரசு போக்குவரத்து, டாஸ்மாக் ஊழியர்கள்.

இதுகுறித்து பேசிய தருமபுரியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் ஒருவர் “தருமபுரி கோட்டத்துல மொத்தம் 16 கிளைகள் இருக்கு. ஒரு கிளையில் ஒரு நாளைக்கு சராசரியா 7 லட்சத்திலிருந்து 8-லட்சம் கலெக்‌ஷன் ஆகும். 500, 1000 செல்லாதுனு அறிவிப்பு வந்ததுமே,  500, 1000 ரூபாய் நோட்டுக்களை கட்டாயம் வாங்க கூடாதுனு எங்களுக்கு ஆர்டர் போட்டுட்டாங்க. பல பாஸஞ்சர்ஸ சில்லரை இல்லனு ஏத்தாம கூட போனோம். பாவம் பலபேர் ரொம்ப  தவிச்சுபோயிட்டாங்க, எங்களுக்கே மனசு கேக்கல. அப்படி, கலெக்‌ஷன் பண்ணி கொடுத்த 100 ரூபாய் நோட்டுகள் எங்க போனுச்சுனு தெரியலை. டெப்போவுல இருந்து கலெக்‌ஷன் தொகையாக பேங்க்ல கட்டுனது எல்லாமே 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும்தான். இப்படி பல இடங்கள்ல நடந்ததா சொல்றாங்க. அந்த சில்லரை எங்க போனுச்சினே தெரியலை சார் என்கிறார் விரக்தியாக.

பொம்மிடியிலிருந்து பேசிய முபாரக், “பொம்மிடியில் உள்ள ஒயின்ஷாப்பில் ஒரு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கூட வாங்கவில்லை. நான் கூட 500 ரூபாயோடு குவாட்டர் வாங்க போனேன். ஆனால், நூறு ரூபாய்க்கு மட்டும்தான் தரமுடியும்னு சேல்ஸ்மேன் கறாரா சொல்லிட்டாப்புல. எல்லாருமே நூறு ரூபாயாத்தான்  கொடுத்து வாங்குனாங்க. பணம் மாத்துறத்துக்காக நேத்து பேங்குக்கு போனேன். அந்த ஒயின்ஷாப் சேல்ஸ்மேன் கலெக்‌ஷன் பணம் கட்டுறதுக்கு வந்துருந்தாரு. அவர் கையில பாத்தா எல்லாம் வெறும் 500, 1000 ரூபாய் நோட்டுதான். அவர்கிட்ட கேட்டா, 'அண்ணே அதிகாரிங்க கொடுக்குறாங்க நான் கட்டுறேன்' என்கிறார். அப்ப அந்த பணமெல்லாம் எங்க போச்சு என தெரியவில்லை," என்றார்.

எத்தனை அரசு டிப்போக்கள், டாஸ்மாக் கடைகளில் இப்படி சில்லறை மாறியதோ தெரியவில்லை.

-எம்.புண்ணியமூர்த்தி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ