Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 ரூபாயில் என்ன வாங்கினார்? - தன் கதை சொல்லும் டேப் ரிக்கார்டர் தாத்தா!

சென்னை குரோம்பேட்டையின் பிஸியான இரயில்வே ஸ்டேஷன் சாலையின் மக்கள் நடமாட்டத்துக்கும், வாகன நெரிசலுக்குமிடையே கனசதுர வடிவிலான அந்த கடையை யாரும் கவனித்திருக்க முடியாதுதான். ஆனால் கடையில் தொடர்ந்து ஒளித்துக்கொண்டிருக்கும் மொழி வரையறை கடந்த ஏதோ ஒரு இசை அந்த கடையை சட்டென கவனிக்க வைத்துவிடும். 1971 தொடங்கி அந்த கடையின் அடையாளம் இசை மட்டும்தான்.

இருபத்திநான்கு மணி நேரமும் இசை மட்டுமே போதும் என்று நினைப்பவர்களுக்கு கூடாரம் போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் நந்தனார் படம் தொடங்கி வெளிவந்த மாஸ்டர் ரிக்கார்டுகளும், கேசட்டுகளும், விசிடிக்களும், டிவிடிக்களும், பாடல்களை ஒளிக்கச்செய்யும் காந்தி காலம் தொடங்கிய அனலாக் ப்ளேயர்கள் முதல் இன்று கடைசியாக அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பாட் ஜாக் வகையறா வரை தன் கடையில் வாங்கி வைத்துள்ளார். மேலும் இசையை பற்றி நாம் அறியாதவற்றையும் ஆராய்ந்து அறிந்துவைத்திருக்கிறார். போனி எம்-உடைய 'சன்னி சன்னி ஐ லவ் யு' பாடல்தான் 'ப்ரியா' படத்தில் ’டார்லிங் டார்லிங்’ பாடலாக வந்தது, 'டைட்டானிக்' படத்தின் இசை கூட 60களில் க்ராம்மி விருதுக்காகப் இசையமைக்கப்பட்ட ஒரு இசைக்கோர்வையிலிருந்து எடுக்கப்பட்டதுதான், என பல புதுப்புது தகவல்களைப் பகிர்கிறார்,  ‘இதையெல்லாம் தெரிஞ்சுக்கவும், வாங்கிவைக்கவும், கேட்கவும் படிப்பறிவு தேவையில்லை ஆழமான ஆர்வம் இருந்தாலே போதும்’ என்கிறார் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இந்த கடையின் உரிமையாளர் முஸ்தாக் அலி கான். 68 வயதான டேப் ரிக்கார்டர் தாத்தா ஆனால் அவர் விரும்பும் இசை அவரை இளமையகவே வைத்திருக்கிறது.

“இப்பலாம் யாருங்க பாட்டுக்காக பாட்டைக் கேட்கறாங்க. தூக்கம் வரவும் பொழுதுபோக்குகாகவும் மட்டும் கேட்கறாங்க, நாம ஆறாவது படிக்கும்போது எங்க தெருவுல அப்போ வெளிவர இருக்கற படத்தோட பாட்டை வண்டி கட்டி ரெக்கார்டுல போட்டு ஒலிக்க விட்டுட்டே போவாங்க. வண்டி பின்னாடியே துரத்திக்கிட்டு போய் முழு பாடலையும் கேட்போம். அப்படித் தொடங்கின ஆசைதான் இப்படி இந்த கடையா வளர்ந்து நிக்குது.

படிப்பு ஏறலை. கமுதிலேர்ந்து புறப்பட்டு மெட்ராஸுக்கு வந்தோம்.அப்போ ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய், 500 ரூபாய் சம்பாதிப்பது அவ்வளவு கஷ்டம். ஆனால் நான் சம்பாதித்துத் தங்கம் வாங்காமல்  முதன்முதலில் வெளிவந்த ஸ்பூல் ரிக்கார்டரை வாங்கினேன். 71ல் இந்தக் கடையைத் தொடங்கினேன் வீட்டுக்காக உழைக்காம இசைக்காக உழைத்தேன் ஆனால்  இசை என்னைக் கைவிடலை. என்னோட ஒரு மகள்  இரண்டு மகன்களையும் அதில்தான் படிக்கவைத்தேன். அவங்க இப்போ எஞ்சினியர் கேட்டரிங் என்று வாழ்க்கையில் செட்டிலாகிட்டாங்க. நான் இந்த இசையோடவே தங்கிட்டேன்” என்று சொல்லும் முஸ்தாக் அலிகான்  சோனி, பேனஸானிக் தொடங்கி நாம் சிறிதும் கேள்விப்பட்டிருக்க முடியாத ஐவா, வழக்கொழிந்து போன நேஷனல் என பல கம்பெனிகள் ஆரம்பகாலம் தொடங்கி அறிமுகப்படுத்திய ஆம்பிளிஃபையர், ரிக்கார்டர், கேசட் ப்ளேயர், வாக்மேன் என எல்லாவற்றையும் பழுது பார்த்துத் தருகிறார்.

“ஒவ்வொரு கம்பெனியோட அட்டவணை நம்ம கிட்ட இருக்கும் அதில் இருக்கும் படங்களை வெச்சு அந்த கம்பெனிகள் அறிமுகப்படுத்தும் கருவியில் இருக்கும் பார்ட்ஸையெல்லாம் பார்த்துப்பேன், அவ்வப்போது வாங்கி வரும் கருவிகளைப் பிரித்துப்பார்த்துக் கத்துப்பேன். ரிப்பேர் செய்யத் தெரியாமல் சில கருவிகளை இழந்திருக்கேன். 40 வருடகாலத்தில் இப்படி ஒவ்வொன்றாக தவறு செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் அதிகம். மற்றபடி நமக்கு எழுத்து கூட்டி படிக்க இன்று வரைக்கும் தெரியாது” என்று கூறிவிட்டு சிரிக்கிறார்.

1965ல் வெளிவந்த ’ஆனந்தி’ படத்தின் பாடல் ஒன்றின் கல் ரிக்கார்ட்டை  கையில் வைத்தபடியே பேசியவர், “இதில் இருக்கும் ஒலித் தெளிவு இன்றைக்கு வரும் mp3, mp4 வகை பாடல் ஃபார்மேட்டில் கிடைப்பது கஷ்டம். இப்போது வருவது எல்லாமே காபி ஃபார்மெட், அப்போது வெளிவந்தது மாஸ்டர் ஃபார்மெட், காப்பர் வைத்து ஒலியின் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்த மாதிரி அந்த தகடு ஒவ்வொன்றிலும் வடிவமைப்பார்கள். ஒவ்வொரு பாடலை உருவாக்குவதற்கும் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகும். ஆனால் இப்போது இரண்டு நிமிடங்களில் உருவாக்கிவிட முடிகிறது. கல் ரிக்கார்டுகள் அனலாக் ஒலிகள், கேசட்டுகள்  60 வருடகாலம் மனிதர்களை ஆட்டிப்படைத்தது. அதற்கு அடுத்து வந்த சிடி, டிவிடி, வீடியோ டெக், ப்ளேயர் போன்ற அத்தனை டிஜிட்டல் ஃபார்மெட்களும்  இரண்டு வருடங்கள்தான் தாக்கு பிடித்தன, வால்வ் மாடல் வகைகள்தான் நம்முடைய நாட்டு பருவநிலைக்குப் பொருந்தும். அந்த ரிக்கார்டிங்கில் வருவது டிரான்சிஸ்டர் மாடல்களில் வராது சீக்கிரம் சூடு பிடிச்சிடும், வெளிநாட்டுக்காரங்க வந்ததும் அதுதான் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.  இசையை ஈடுபாட்டோட கேட்காமல் அவசரத்துக்காக  கேட்க போய் நாமும் கண்டுக்காம விட்டுட்டோம்.  அதுதான் ப்ரியாவில் ‘டார்லிங் டார்லிங்’ என்ற பாடலாக வந்தது.  ஆனால் வால்வ் மாடல் ரிக்கார்டிங்  இப்போது மீண்டும் வரத் தொடங்கி இருக்கிறது. இசையமைப்பாளர்கள் பல லகரங்கள் செலவு செய்து மீண்டும் அதே அனலாக் பார்மெட்டுக்கே திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சமுதாயம் அழிந்து மற்றொரு சமுதாயம் வளருவது மாதிரிதான் இதுவும்” என்றார்.

இசை பற்றி இவ்வளவு தொழில்நுட்பம் தெரிந்து வைத்திருக்கிங்களே  சினிமா பக்கம் ஏன் போகலை என்றோம்? “ சினிமா வேறமாதிரி, இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ் எல்லாரும் நமக்கு நல்ல பழக்கம். இன்றைக்கு நம்மை நினைவில் இருக்கானு தெரியலை. ஆனால் சினிமாத் துறை நமக்குப் பிடிக்காது என்பதால் ஒதுங்கியே இருந்துட்டேன். ஆனால் ரீரிக்கார்டிங் ஆர்டிஸ்ட் ஜே.ஜே மாணிக்கம் என்று எனக்கொரு நண்பர் இருந்தார். ஒரு பக்கம் காது கேட்காது மற்றொரு காது மந்தமாகக் கேட்கும் ஆனால் ஒலியோட ஏற்ற இறக்கத்தை வீவ் மாணிட்டரில் வைத்தே ரீரிக்கார்டிங் கச்சிதமாக செய்வார். சினிமாவில் பெரும்பாலான யாருக்குமே இன்று அவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று எங்கே இருக்கார் என்றே தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தாலும் மறந்திருப்பாங்க. அவரைப் போன்று சினிமாவே மறந்துபோன சிலர்தான் இன்றைக்கு எனக்கும் சினிமாவுக்கும் இருக்கற பிணைப்பு” சொல்லிவிட்டு இருமத் தொடங்குகிறார்.

“எதாவது பேசத் தொடங்கினா இப்படிதான் எமோஷனாகிடுவேன்” என்று  கூறிவிட்டு முகத்தைத் துடைத்தபடி அவரே பேசத் தொடங்குகிறார், “இசையிலேயே உழைச்சேன், இதை கட்டி எழுப்பி எடுத்துக் கொண்டுவர பல காலம் எடுத்தது. பல சிக்கல்களை சந்திச்சேன். ஆனால் எனக்குப் பிறகு இவ்வளவு சேமிப்பையும் பொக்கிஷமாகப் பார்த்துக்க ஆட்கள் இல்லை. பிள்ளைகள் கடையை மூடிட்டு வர சொல்றாங்க. பாட்டு கேட்க கூட நேரமில்லை அவங்களுக்கு. ஆனால் ஒரு நாளைக்கு ரெண்டு பாட்டு கேட்டுட்டு ரெண்டு ரிக்கார்ட் மெஷினில் வேலைபார்த்தாதான் நமக்கு வாழ்க்கை ஓடும். அதனால் முடியாது என்று சொல்லிட்டேன்’ தீர்மானமாகப் பேசியவர் ஏதோ ஒரு வாடிக்கையாளர் பாடல்களை ரிக்கார்டு செய்வது பற்றிக் கேட்கவர நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

ஏதோ ஒன்றில் தனது அடையாளத்தைத் தேடிப் பயணப்படுபவர்கள் சராசரி வாழ்வுநிலைக்கும், சுயநிலைப்பாட்டுக்கும் இடையே சிக்கிக்கொள்வதுதான் முஸ்டாக் அலிகான் போன்ற நபர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகம் அழிந்து மற்றொன்று உருவானாலும் இவர்களைப் போன்றவர்கள் அதில் எஞ்சிக் கடந்துவருவார்கள் ஏனென்றால் இவர்கள் கூட்டுச்சமூகம் அல்ல, தனி அடையாளங்கள்!

-ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close