Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் பணச் சிக்கல் ஏற்பட்டிருக்காது: ராமதாஸ் 

ஒருநாள் இரவில் இனி ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு  அறிவித்ததால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் பணமற்ற பரம ஏழைகளாகி விட்டனர் என்று வேதனை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், புதிய தாள்களை அச்சடித்து வங்கிகளுக்கு அனுப்பிய பின்னர் மத்திய அரசு நடவடிக்கையை எடுத்திருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூபாய் தாள்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடும், அதனால் ஏற்படும் பல்வேறு வகையான பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது பொருளாதாரம் சார்ந்த சிக்கலாக மட்டுமின்றி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகவும் உருவெடுத்திருப்பதை மத்திய அரசு உணரவில்லை. மனித வாழ்வின் ஒரு மணி நேரம் கூட பணமின்றி கழியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், திடீரென ஒருநாள் இரவில் இனி ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு  அறிவித்ததால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் பணமற்ற பரம ஏழைகளாகி விட்டனர். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் எண்ணத்தையோ, அதற்காக அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையோ விமர்சிக்க விரும்பவில்லை. நாட்டின் பொருளாதார எதிர்காலம் கருதி அத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தேவையானவை தான். ஆனால், அத்தகைய செயல்களால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சென்னையில் வெளியில் அழைத்துவந்த குழந்தைகளுக்கு உணவு வாங்கித்தரக் கூட பணம் இல்லாமல், அவர்களை பசியுடன் அழைத்துச் சென்றதாக பல பெற்றோர் தெரிவித்துள்ளனர். கோவை சின்னியம்பாளையத்தில் பணம் எடுப்பதற்காக வங்கி முன் காத்திருந்தவர்கள் மீது மகிழுந்து மோதியதில் கருவுற்ற பெண், இரு குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே கோவை மாநகரின் கணபதி பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று பணத்தை மாற்றி, ரூ.4000 புதிய பணத்தை பெற்றுக் கொண்டு திரும்பிய இராஜேந்திரன் என்ற தொழிலாளி அந்த வளாகத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வங்கி ஊழியர்கள் வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்தாலும் கூட வங்கிகளில் பணம் தீர்ந்து விடுவதாலும், வேறு காரணங்களாலும் பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போகும்போது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இத்தகைய மோதல்கள் முற்றி சட்டம் - ஒழுங்கு சிக்கலாக உருவெடுக்கும் ஆபத்துள்ளது. மராட்டியம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்  ஏற்கெனவே சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் அருகில் உள்ள வங்கியில் பணத்தை மாற்றித் தருவது தொடர்பாக அதன் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வங்கி மீது மக்கள் கல்வீசித் தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பல இடங்களில் வாக்குவாதம் முற்றி வங்கிகள் சூறையாடப்பட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.17.54 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் தாள்களை புழக்கத்தில் விட்டுள்ளது. அவற்றில் 86 விழுக்காடு, அதாவது ரூ.14 லட்சத்து 73,360 கோடி 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களாகும். இவை தவிர மீதமுள்ள ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 80,640 கோடி மட்டுமே. 1000, 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில்,  சுமார் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. அதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள  ரூபாய் தாள்களை வைத்து சமாளிக்க முடியாது. இந்த உண்மையை மத்திய அரசு உணர்ந்து புதிய தாள்களை அச்சடித்து வங்கிகளுக்கு அனுப்பிய பின்னர் இந்நடவடிக்கையை எடுத்திருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது.

ஆனால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக இதை செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு காட்டிய வேகம் தான் மக்களை பாதிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகமுள்ள நிலையில், அதை குறைக்க மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரூபாய் தாள்கள் மாற்றமும், அதனால் ஏற்படும் விளைவுகளும் மத்திய அரசு சார்ந்தவை என்று கூறி மாநில அரசு ஒதுங்கிவிடக் கூடாது. மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட  சில நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சமாளிக்க முயன்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் மூலம் பொறுப்பற்ற அரசு என்பதை தமிழக அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. பணத்தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தீய விளைவுகளையும், சட்டம் -ஒழுங்கு சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும் வகையில் புதிய 2000, 500 ரூபாய் தாள்களையும், பழைய ரூ.100 தாள்களையும் வங்கிகளுக்கு அதிக அளவில் அனுப்ப மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close