Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளத்தை அச்சுறுத்தும் டிசம்பர் டென்ஷன்! -எச்சரிக்கும் சூழல் ஆய்வாளர்கள்

கூடங்குளம் அணுஉலையில் புதிய எரிபொருள்களை நிரப்பும் பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்க இருக்கின்றன. ' இந்தக் காலகட்டங்களில் அதிகப்படியான கதிரியக்கத் தனிமங்கள் வெளியேறும். இதுகுறித்து விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் அணுஉலை நிர்வாகத்தினர் ஈடுபட வேண்டும்' என வேண்டுகோள் வைக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் கவனத்துக்கு திறந்த மடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. புதிய எரிபொருள் நிரப்பப்படும்போது ஏற்படும் அபாயங்கள்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கை ஆகியவை குறித்து விரிவாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் எழுதிய மடலை, காணொளி காட்சியாகவும் மாற்றியிருக்கிறார் மருத்துவர் ரமேஷ். " கூடங்குளம் முதல் அணு உலையில் புதிய யுரேனியம் எரிபொருள்களை நிரப்பும் பணி டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. கிட்டத்தட்ட எரிந்து முடிந்த 56 எரிபொருள்கள் வெளியே எடுக்கப்பட இருக்கிறது. அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான எரிபொருள்கள் அணு உலைக்குள் ஏற்றப்பட உள்ளது. இந்தக் காலகட்டத்தில், கூடங்குளம் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்" என மிகுந்த கவலையோடு விவரிக்கின்றனர் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தினர். தொடர்ந்து நம்மிடம், 

"அணுஉலைகள் சாதாரணமாக இயங்கும்போது ட்ரைட்டியம், செனான், ஆர்கான், கார்பன் 14 மற்றும் அயோடின் 131 ஆகிய கதிரியக்கத் தனிமங்கள் அணு உலைகளின் புகைபோக்கிகள் வழியாக வானத்தில் கலக்கின்றன. அணுக் கதிரியக்கத்தை ஆய்வு செய்யும் ஐ.நா சபையின் விஞ்ஞானிகள் குழுவானது, ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள ஒவ்வொரு அணு உலைகளும் வெளியிடும் கதிரியக்கத் தனிமங்களின் அளவை வெளியிட்டு வருகின்றன. ' ஒவ்வொரு நாளும் இந்த உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு குறித்து வெளியிட வேண்டும்' என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். ஆனால், அந்தத் தரவுகள் இதுரையில் வெளியிடவில்லை. 

ஆனால், 2011 செப்டம்பர் மாதம் ஜெர்மன் நாட்டின் பவேரியா பகுதியில் செயல்படும் குன்றமிங்ஞன் அணு உலையில் புதிய எரிபொருள் ஏற்றும் பணி நடந்தபோது, ' வெளியாகும்  கதிரியக்கத் தனிமங்களின் அளவை வெளியிட வேண்டும்' என அந்நாட்டின் பசுமை அமைப்பினர் குரல் கொடுத்தனர். இதையடுத்து, முதல்முறையாக வெளியேறிய கதிரியக்கத் தனிமங்களின் அளவு வெளியிடப்பட்டது. சாதாரண காலகட்டங்களில் அணுஉலைகளில் இருந்து கனமீட்டர் ஒன்றுக்கு 2 லட்சம் பெக்குரல் அளவுக்கு கதிரியக்கத் தனிமங்கள் வெளியேறுகின்றன. ஆனால், புதிய எரிபொருள்கள் ஏற்றும் காலகட்டத்தில் 14 லட்சம் பெக்குரல் அளவுக்குத் தனிமங்கள் வெளியேறுகின்றன என்ற அதிர்ச்சிகர உண்மை வெளி உலகுக்குத் தெரியவந்தது. அணுஉலைகளில் இருந்து வெளியேறும் கதிரியக்கத் தனிமங்களைவிட, எரிபொருள் நிரப்பும் காலகட்டத்தில் மூன்றில் இரண்டு மடங்கு தனிமங்கள் வெளியேறுகின்றன என்பதை அறிய முடிந்தது. 

எரிபொருள் நிரப்பும் காலகட்டத்தில், அணுஉலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது நல்லது. இந்தக் காலகட்டத்தில், கதிரியக்கத் தனிமங்களால் சிசுக்கள் பாதிக்கப்படுகின்றன. ' பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்; பிற இடங்களில் பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் 2.2 மடங்கு அதிகம்' என்று டாக்டர்.அயர்ன் பேர்லி என்பரால் எழுதப்பட்ட சமீபத்திய ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. கல்பாக்கம் அணுஉலைகளில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் வாழும் மக்களிடம், தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் மலட்டுத்தன்மை, மனவளர்ச்சிக் குறைவு, புற்றுநோய் தாக்கம் அதிகம் என அணுசக்தி துறைக்காக ஆய்வு செய்த டாக்டர் மஞ்சுளா தத்தா தெரிவிக்கிறார். கல்பாக்கம் பகுதிகளைச் சுற்றிலும் உள்ள மற்ற இடங்களைக் காட்டிலும் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் என மருத்துவர் புகழேந்தி மற்றும் பத்மநாபன் ஆகியோர் ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. 

1995-ல் இருந்து 2014 மார்ச் வரையில் இந்தியாவில் 19 அணுசக்தி மையங்களின் அருகில் வசிப்பவர்களில், இறந்து போன 3,887 நபர்களில் 2,600 பேர் பலவகையான புற்றுநோய்களால்தான் இறந்தார்கள் என பாபா அணுகக்தி ஆராய்ச்சி மையம் கூறுகிறது. இந்தத் தகவல்கூட ஆர்.டி.ஐ மூலம் மட்டுமே தெரியவந்தது. இதனால் புற்றுநோய் மருத்துவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு முன்பு 2015 ஜுலை மாதம் கூடங்குளத்தில் யுரேனிய எரிபொருள்கள் முதல்முறையாக மாற்றப்பட்டன. அப்போது சுற்றியுள்ள பகுதி மக்களிடம், கூடங்குளம் நிர்வாகம் எந்தவித விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தவில்லை. சாதாரண நாட்களில் அணுஉலைகளில் இருந்து வெளியேறும் கதிரியக்கத் தனிமங்கள் புகைக் குழாய்கள் மூலம் மட்டுமே வெளியேறுகின்றன. புதிதாக எரிபொருள் மாற்றப்படும்போது, கதிரியக்கத் தனிமங்கள் அணுஉலைக்குள் வெளியேறுவது தவிர்க்க முடியாது. இந்தப் பணியின்போது அணு உலைக்குள் பணிபுரிபவர்களும் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை. இந்தக் காலகட்டத்தில் புகைக் கூண்டுகளில் அதிக அளவில் கதிரியக்கம் வெளியேறுகிறது. 

 

 

இவை அனைத்தும் 36 மணிநேர காலகட்டத்தில்தான் நிகழ்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த நேரத்தில் கூடங்குளத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்கு அணுசக்தித் துறையினர் தெரிவிக்க வேண்டும். அந்த இரண்டு நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது அல்லது தொலைவில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுவிட வேண்டும். அதுபோல, அந்த இரண்டு நாட்களுக்கு சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதும் அவசியம். சுற்றியுள்ள பகுதிகளில் டோசி மீட்டர் கருவிகளை பொருத்தி, அதிக அளவு கதிரியக்கம் வெளியேறினால் அவற்றை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய அந்த இரண்டு நாட்கள் குறித்து, முறையான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் அணுசக்தித் துறை அதிகாரிகள் ஈடுபடுவார்களா?" என ஆதங்கத்தோடு பேசி முடித்தனர். 

-ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close