Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணம் எங்கு போகிறது?-மருத்துவர் ராமதாஸ் பதில்

கறுப்புப் பணம்

‘‘சுவிட்சர்லாந்தில் இருந்து மொரீசியஸ் சென்று... அங்கிருந்து பங்குச்சந்தைக்கு கறுப்புப் பணம் வருகிறது’’ என்றார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

‘முறையான விசாரணை வேண்டும்!’’

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக திருச்சி வந்த ராமதாஸ், இன்று காலை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘‘அ.தி.மு.க-வின் ஊழல் பற்றி முன்பே, புள்ளிவிவரத்தோடு பழைய ஆளுநரிடம் 18 விதமான ஊழல் பட்டியலை பா.ம.க கொடுத்திருந்தது. அதை, அவர் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டார். தற்போது வந்திருக்கும் ஆளுநர் நீதியரசராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். தமிழகத்தில் உழவுக் கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. விவசாயத்துக்குப் பயன்படும் பவர் டிரில்லர் எனும் கருவியை தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி உதவியுடன் வழங்குவார்கள். இதன்மூலம், இதுவரை இந்திய தயாரிப்புகளான காம்போ வி.எஸ்.டி உள்ளிட்ட நிறுவன கருவிகளையே விவசாயிகள் வாங்கிவந்தார்கள். ஆனால், சமீபகாலமாக சீனா கருவிகளை வாங்கினால்தான் மானியம் வழங்கப்படும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். இதில், திருச்சியில் இயங்கும் கவி அக்ரோ என்கிற  நிறுவனமும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிராந்தி நிறுவனமும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துகொடுக்கிறார்கள். இவை தரமான கருவிகள் இல்லை. இப்படிப்பட்ட பொருட்களை வழங்கியதில்  44 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதில், 38 கோடி ரூபாய் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கும், அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சென்றுள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை வேண்டும்.

‘‘கடன் சுமை அதிகரிப்பு!’’

அ.தி.மு.க., 2011-லிருந்து இதுவரை 66 மாதங்கள் ஆட்சியில் இருந்துள்ளது. அது என்ன சாதனை செய்தது? மின் துறையில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் தொடர் ஊழல். இதை, புள்ளிவிவரத்துடன் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும், தமிழகத்தில் 88 லட்சம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொரு நபரின் மீதும் 69,444 ரூபாய் கடன் சுமை அதிகரித்துள்ளது. 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதேபோல் தி.மு.க., நாணயத்தின் அடுத்த பக்கம். இந்த இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. அரவக்குறிச்சி, தஞ்சை உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா வெகு விமரிசையாக நடக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் வெளிப்படையாகக் கொள்ளை அடித்தன. தன்மானத்தை விலை பேசுகிற தேர்தலாக இது அமைந்திருக்கிறது.  

‘‘வெள்ளை அறிக்கை வேண்டும்!’’

காவிரி விவகாரத்தில், இரு திராவிடக் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. இதை, தடுக்க வேண்டும். அதோடு, தற்கொலைக்கு உரிய நிவாரணமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், தொழிலாளருக்கு 25,000 ரூபாயும் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பச்சைத் துண்டு சங்கங்கள் சில, அவ்வப்போது விளம்பரத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்கின்றன. அவர்களுக்கு விவசாயத்தின் மீது அக்கறையில்லை. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட வேண்டும். இன்று தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும். இந்த நடப்பாண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீதித்துறையே நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது. இது நல்ல நிர்வாகத்துக்கான அடையாளம் அல்ல. 

கறுப்புப் பணம்

‘‘கறுப்புப் பணம் வெளியே வரும்!’’ 

1,000, 500 ரூபாய் தொடர்பாக தமிழ்நாட்டு மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். பி.ஜே.பி., தேர்தலின்போது ரூ.15 லட்சம் தொகையை ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் செலுத்துவேன் எனக் கூறியது. இதுவரை அதை நிறைவேற்றவில்லை. அவர்கள் கறுப்புப் பணம் வெளியே வரும் என எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக கறுப்புப் பணம், சுவிட்சர்லாந்தில் இருந்து மொரீசியஸ் சென்று... அங்கிருந்து பங்குச்சந்தைக்கு வந்துபோகிறது.. இந்த மாற்றத்தால் எவ்வளவு வந்தது என்பதை காலம்தான் பதில் சொல்லும். இன்னும் நிறைய திட்டமிட்டு வங்கிகள் இரவு பகலாகக்கூட பணம் கொடுத்திருக்கலாம். கொடுக்கும் பணத்தை 4,000 என்பதை 10,000 ஆக உயர்த்தியிருக்கலாம்.

‘‘தேர்தலைப் புறக்கணிக்கலாம்!’’

அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில், மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்துவது பற்றி ஸ்டாலின் சொன்ன கருத்தைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. மணல் கொள்ளையடிப்பதற்கு ஏஜென்டாக இருந்த கே.சி.பி-தான் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு எதிராக வாக்களிக்க விரும்பாத மக்கள் தேர்தலை திருப்பரங்குன்றம் தொகுதியில் புறக்கணிக்கலாம். 

தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கொள்கையைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டன. தே.மு.தி.க ரசிகர்களைக் கொண்ட விசிறி கட்சி. இவைகள் கட்சிகளே இல்லை. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க-வோடு எப்போதும் கூட்டணி இல்லை. வைகோ உள்ளிட்ட உதிரிக் கட்சிகள் கட்சிகளே இல்லை. 6 பூஜ்யங்களைச் சேர்த்தாலும் பூஜ்யம்தானே. அந்தக் கட்சிகள் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிடவில்லை எனில், கட்சிகள் காணாமல் போகும். அவைகளால் என்ன புண்ணியம்? பா.ம.க மட்டும்தான் கட்சி’’ என்றபடி புறப்பட்டுச் சென்றார். 

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ