Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கடுகு டப்பாவில் உள்ள பணத்தைதான் மோடி ஒழிக்கிறார்!’ ஸ்டாலின்

மதுரை : "கறுப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. உங்கள் கடுகு டப்பாவில் இருக்கும் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்," என தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் காட்டம் காட்டினார்.

ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற பொதுத்தேர்தலும், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதிகளின் இடைத்தேர்தலும் இன்னும் 4 தினங்களில் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் பரபரப்பை மீறி, 500,1000 ரூபாய் நோட்டு பிரச்னை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால், தேர்தல் பிரச்சாரத்திலும் ரூபாய் நோட்டு பிரச்னையே பெருமளவு எதிரொலிக்கிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 54 நாட்கள் ஆகிவிட்டது. இன்று அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் ,தஞ்சாவூர், அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் சொல்லி அவரது கையெழுத்துடன் அந்த அறிக்கை வந்திருக்கிறது. அந்த கையெழுத்து அவர் போட்டாரா? இல்லை யார் போட்டது?. சில தினங்களுக்கு முன்பு தேர்தல் கமிஷனுக்கு வேட்பாளர் வேட்பு மனுவுடன் கொடுக்கப்பட்ட மனுவில் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. கை ரேகை வைத்திருந்தார். அப்படியென்றால் இப்போது அவர் தான் கையெழுத்திட்டாரா? இல்லை அவர் திரைமறைவில் இருந்து யாராவது நபரால் இயக்கப்படுகிறாரா? இந்த திறைமறைவில் இருப்பது யார்? அவரை இயக்குவது யார்? அவர் விரைவில் வெளியே வருவார்!

அவர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் மீண்டு வர வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.ஏன் தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன் முதலில் அந்த அம்மையார் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று அறிக்கை விட்டார். மறு பிறவி எடுத்திருக்கிறேன் என்று சொல்லி அறிக்கை விட்டவர் கடந்த 5 நாட்களாக மக்கள் பிச்சை எடுப்பது போல, பல்வேறு  கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்து விட்டு வெறும் ஓட்டு மட்டும் கேட்டு அறிக்கை விட்டு இருக்கிறார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. ஆனால் கறுப்பு பணம் எங்கு இருக்கிறது? உலக நாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்றார் மோடி. ஆனால் 15 ரூபாய் கூட போடவில்லை. கறுப்பு பணத்தை ஒழிக்கவில்லை. இன்னும் கண்டெய்னரில் போன 570 கோடி என்னாச்சு என்ற விவரமே தெரியவில்லை.

கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கைகள் இல்லை. ஆனால் உங்கள் கடுகு டப்பாவில் இருக்கும் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி என்கிற பெண்மணி ஆள்கிறார். வரிசையில் நின்று பணம் எடுக்கும் மக்களைப்பற்றி கவலை கொண்டு ஓடிச்சென்று அவர்களின் இன்னல்களை கேட்டுக்கொள்கிறார்.ஆனால் இங்கு நிலைமை வேறு. முதல்வர் வேண்டாம் அவர் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் முதல்வரின் பொறுப்பை கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்கிறார்? இவ்வளவு நாட்களாக உங்களை வந்து பார்த்தாரா?

ஓ.பன்னீர்செல்வத்தை கவர்னர் தான் இயக்குகிறார். அவராவது மக்களைப்பற்றி கவலைப்பட வேண்டுமல்லவா? ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.எதுக்காக ஒரு செயல்படதா ஆட்சி?. அதை தூக்கி எறியுங்கள். அப்போது தான் அந்த அம்மையாரை திறைமறைவுக்கு பின்னாளில் இருந்து கொண்டு இயக்கும் நபர்கள் யார் என்று தெரியும். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார்.

- சண்.சரவணக்குமார்,

படங்கள் :  வி.சதிஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ