Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலை ஒத்தி வைத்தும் பலன் இல்லை... தஞ்சையில் கரன்சி மழை!


தஞ்சாவூர் : வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுப்பதாக ஒத்தி வைக்கப்பட்ட தஞ்சை தொகுதியில், தற்போது அதை விட பல மடங்கு கூடுதலாக வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்படுகிறது என காரணம் சொல்லித்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம். ஆனால் பணம் கொடுத்ததாகவோ, அதிகளவில் பணத்தை புழக்கத்தில் விட்டதாகவோ யார் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பின்னர் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், முன்னரை விட, இப்போது இன்னும் அதிகளவில் இந்த தொகுதிகளில் பணம் விளையாட ஆரம்பித்திருத்திருக்கிறது.

தஞ்சை தொகுதியில் கோடி கோடியாய் புரள்கிறது பணம். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் வாக்காளர்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த மூவர் கைதாகியுள்ளனர்.  இவர்களிடம் இருந்து 6.50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் பணம் கொடுப்பதில் தங்கு தடைகள் எதுவுமில்லை. வாக்காளர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம். "பூத்வாரியாக வேலை பார்க்கும் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு நாளுக்கு முன்னரே பணம் வந்துவிட்டது. நேற்று காலை 6 மணி முதல் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வீட்டில் உள்ள வாக்காளர் பூத் சிலிப்பை வாங்கி செக் செய்து,  ஒரு வீட்டுக்கு ரூ.2000 வீதம் பழைய 500  ரூபாய் நோட்டுகளை கொடுத்திருக்கிறோம்.  தேர்தல் 19-ம் தேதி என்பதால் 17-ம் தேதி வரை பண விநியோகம் நடக்கும். அ.தி.மு.க., தி.மு.க. நடுநிலையாளர்கள் என மூன்றாக பிரித்து பணம் விநியோகிக்கப்படுகிறது. இதில் அ.தி.மு.க.வினரை விட தி.மு.க., நடுநிலையாளர்களுக்கு கூடுதலாக பணம் வினியோகிக்கப்படுகிறது.

மொத்தம் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுகளில் மிகப்பெரும்பான்மையானோருக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்கும் தொகை 50 கோடியைத் தாண்டும். அவ்வளவும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள். அவர்கள் வங்கியில் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம். நாங்கள் அதை ஓட்டாக மாற்றிக்கொள்வோம். பணம் வாங்கியவர்களின் பெயர் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் இருக்கும். அவர்கள் தேர்தல் அன்று போன் செய்து ஓட்டு போட்டதை உறுதி செய்து கொள்வார்கள். ஓட்டு போடும் அன்று தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படும்," என்றனர்.

அ.தி.மு.க. போல, ஓட்டுக்கு 2000, 3000 என கொடுக்காவிட்டாலும், தி.மு.க. தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. ஓட்டுக்கு ரூ.500, சில இடங்களில் மட்டும் ஓட்டுக்கு ரூ.1000 என வழங்கியுள்ளாதாக சொல்கின்றன தி.மு.க. வட்டாரங்கள்.
இதே நிலை தான் அரவக்குறிச்சி தொகுதியிலும். வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்படுகிறது என்பதற்காகத்தான் தேர்தலை ஒத்திவைத்ததாக சொன்னது தேர்தல் ஆணையம். இப்போது அதை விட பல மடங்கு கூடுதலாக பட்டுவாடா நடக்கிறது. தேர்தல் அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கின்றனர்.

- ஏ. ராம்,

படங்கள் : கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ