Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீங்கள் அழைத்து, நாங்கள் வந்தோம்!'  -திருமாவுக்கு சிக்னல் காட்டிய தி.மு.க.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்த பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களைவிட தி.மு.க, காங்கிரஸ் முகங்களே அதிகம் தென்பட்டன. ' மதச்சார்பற்ற அணியைக் கட்டமைப்பதற்கான தொடக்க மேடையாகவே நேற்றைய நாள் அமைந்தது' என உற்சாகப்படுகின்றனர் வி.சி.க நிர்வாகிகள். 

காவிரி விவகாரம் தொடர்பாக, தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். ஆனால், வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் எதிர்ப்பு காட்டியதால், வி.சி.க பங்கேற்கவில்லை. ' கூட்டணியின் மற்ற தலைவர்கள், எந்த முடிவை எடுத்தாலும் தங்கள் கட்சிக்குள் கூடி விவாதிக்கின்றனர். நாங்கள் எடுக்கும் முடிவுகளை விவாதிப்பதற்குக்கூட அவகாசம் கொடுப்பதில்லை. எங்கள் மீது பிற கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன' என ஆதங்கப்பட்டனர் வி.சி.க நிர்வாகிகள். இந்நிலையில், நேற்று காமராஜர் அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாட்டில், தி.மு.க, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் குழுமிவிட்டனர். வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

" திருமா ஒருங்கிணைக்க நினைத்த உண்மையான மதச் சார்பற்ற கூட்டணி என்பது இதுதான். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ' இதுபோன்ற அணியைக் கட்டமைக்க வேண்டியது அவசியமான ஒன்று' என்ற கருத்தியலை திருமா முன்வைத்தார். இதைக் கூட்டணியின் இதர தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் சரியான நேரத்துக்காக காத்திருந்தார். நேற்று ஓர் அற்புதமான தொடக்கமாக அமைந்துவிட்டது" என விவரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர், தொடர்ந்து, " பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்துவது என்ற முடிவை எடுத்த பிறகு, தி.மு.கவின் முன்னணித் தலைவர்களை அழைப்பது என முடிவு செய்தோம். மூன்று தொகுதி தேர்தல்களில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் பிஸியாக இருந்ததால், கனிமொழிக்கு அழைப்பு விடுத்தோம். அவர் இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசி, ஒப்புதல் வாங்கிவிட்டு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரை சந்திக்கச் சென்றோம். புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத் தேர்தலில் நாராயணசாமிக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். அந்த அடிப்படையில் அவரும் மறுப்பு சொல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். 

கூட்டத்தில் பேசிய கனிமொழி, ' நாங்கள் உங்களை அழைத்தோம். அப்போது நீங்கள் வரவில்லை. இப்போது நீங்கள், எங்களை அழைத்தீர்கள். நாங்கள் வந்துவிட்டோம்' என உற்சாகப்படுத்தினார். அதேபோல், திருநாவுக்கரசர் பேசும்போதும், ' இது ஒரு முக்கியமான மேடை. மக்கள் பிரச்னைகளில் இந்த அணி ஒன்று திரண்டு போராட வேண்டும்' எனப் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய திருமாவும், ' தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்கு சில காரணங்கள் உள்ளன. பொதுப் பிரச்னைகளில் நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்' என்பதை வலியுறுத்தினார்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான மனநிலையில், ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், அந்தக் கட்சிகளின் சார்பில் நல்லகண்ணு, மல்லை சத்யா, டில்லி பாபு உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். மக்கள் நலக் கூட்டணியின் இதர மூன்று தலைவர்களும் பங்கேற்கவில்லை. மதச் சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் முயற்சியின் தொடக்கப் புள்ளியாகத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்த விரும்பினார் திருமா. நாங்கள் எதிர்பார்த்த வகையில் நிகழ்ச்சி வெற்றிகரமாகவே நடந்து முடிந்தது. இந்த அணிக்குள் வைகோவும் இடதுசாரிகளும் வருவார்களா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார் விரிவாகவே.  

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டின் மூலமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான மேடைக்கு தொடக்கப் புள்ளி வைத்துவிட்டார் திருமா. அடுத்தகட்ட காட்சிகளுக்காக காத்திருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள். 

-ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close