Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு கருணாநிதி, திருநாவுக்கரசர் இரங்கல்

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் இரங்கல் செய்தியில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து, தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் அவரது காலடி படாத ஊர்களே இல்லை; அவரது இலட்சிய முழக்கம் எதிரொலிக்காத இடங்களே இல்லை என்று வியந்து போற்றும் அளவுக்கு அரும்பணி ஆற்றிய, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் அன்புத் துணைவியார், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள் நேற்று மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றபோது, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி, அதற்குப் பின் தி.மு.கழகம் ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற நேரத்திலும் சரி, அம்மையார் அவர்கள் திறம்பட அரசுப் பணி ஆற்றியவர்; என்றைக்கும் திராவிட இயக்க உணர்வோடு இயங்கியவர். அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் உடலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழக மக்களால் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றி அழைக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் முன்னணித் தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன். அவர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமது வாழ்க்கையின் இறுதிவரை பொது வாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர் அவர்' என்று  தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்