Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவ்வளவு கஷ்டமாக இருந்தால் ஏழைகளுக்கு நீங்கள் உதவுங்கள்! - நடிகர் விஜய்க்கு பி.ஜே.பி அட்வைஸ்

‘‘நோக்கம் பெரியதாக இருக்கும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், நோக்கத்தை விட பாதிப்பு அதிகமாக இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. 20 சதவிகித மக்கள் செய்யும் தவறுக்கு 80 சதவிகித மக்கள் பாதிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது’’ என்று நவம்பர் 15-ம் தேதி நடிகர் விஜய் பேட்டி அளித்தார். அதை தமிழக காங்கிரஸ் வரவேற்றுள்ளது. பி.ஜே.பி கடுமையாகக் கண்டித்துள்ளது.  விஜய், பொதுவெளியில் வந்து ஏழை மக்களுக்கு உதவ அழைப்பு விடுத்துள்ளது தமிழக பிஜேபி

இனி, அந்த இரண்டு கட்சிகளின் ரியாக்ஷன்களை பார்ப்போம்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சொர்ணா சேதுராமன்: ‘‘கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க எடுத்த நடவடிக்கை இது என்று பிரதமர் மோடி சொல்லி வருகிறார். அந்த நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால், இப்போது நடிகர் விஜய் சொல்லி இருப்பது போல, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் படும் வேதனைகள், துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.  நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு 9-ம் தேதியில் இருந்து இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மாதச் சம்பளம் 5-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள்தான் போடுவார்கள். சம்பளத்தை எடுத்து வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், ரிக்‌ஷா வாடகை, மளிகை சாமான்கள் வாங்க முடியாமல் சாமானிய மக்கள் திண்டாடுகிறார்கள். கறுப்புப் பண முதலைகள் யாரையும் ஏ.டி.எம் களில் காண முடியவில்லை. பணம் தங்களது கணக்கில் இருந்தும் ஏ.டி.எம் ஒழுங்காக செயல்படாததால் பணத்தை எடுக்க முடியாமல் சாதாரண மக்கள் தவிக்கிறார்கள். கால்கடுக்க மணிக்கணக்கில் நின்றாலும் ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது. மருத்துவச் செலவு, திருமணம் என்று பல்வேறு அவசர காரியங்களுக்கு பணம் எடுக்க முடியாமல் அல்லல்படுகிறார்கள்

15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மொத்தம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 100 சதவிகித பணத்தில் 14 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் வாங்கும்போது ஏற்படும் பண நெருக்கடிகளை எப்படி எதிர் கொள்வது என்று முன்கூட்டிய திட்டமிடல் இல்லாததுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் மூல காரணம். இந்த பிரச்னைகள் எல்லாம் ஒருவாரம், இரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால், அது தொடர்கதையாகி இருக்கிறது. 500 கோடி ரூபாய் கள்ளப் பணத்தை முடக்க உழைக்கும் மக்களை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். கறுப்புப் பணம் எல்லாம் வைரம், தங்கங்களாக, வெளிநாடுகளில் முதலீடுகளாக வைக்கப்பட்டு இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை. பெரிய நிறுவனங்களின் வாராக் கடன்கள் மட்டுமே 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதை மீட்க வழியில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலின்போது, பி.ஜே.பி சொன்னது. ஒரு மாதத்தில் இதெல்லாம் நடக்கும் என்று சத்தியம் செய்தார்கள். ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கடந்தும் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. குறைந்தபட்சம் கறுப்பு பண முதலைகளின் பெயர்களையாவது வெளியிடலாம். அதையெல்லாம் செய்யாமல் ஏழை, எளிய, சாமானிய மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்றவும் முடியாமல், எடுக்கவும் முடியாமல் தவிக்கும் மக்களை காப்பாற்ற இனியாவது மோடி அரசு உருப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் கொட்டி இருக்கிறார். இதுதான் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலை என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று சொல்கிறார்.

பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ‘‘ஏழை, எளிய மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் இந்த நாட்டின் கவுரவம் மிக்க குடிமக்கள். அவர்களும் மற்றவர்களைப்போல இந்த நாட்டின் அனைத்து சவுகரியங்களையும் பயன்படுத்த உரிமை  இருக்கிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஏழை மக்களை, ஏழைகளாகவே வைத்துவிட்டார்கள். ஏழைகளின் வேதனை இனி துடைத்தெறியப்படும். அதற்காகத்தான் ‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல்’ என்று பல்வேறு திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்

‘பெயர்த்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்... அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொதுவெளியில் வந்து ஏழை எளிய மக்களின்  கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்னைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள நடவடிக்கையை நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்கு கிலி ஏற்பட்டுள்ளது’’ என்று பதில் சொன்னார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close