Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டு விவகாரம் - மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த கூட்டுறவு சங்கங்கள்!

                 

ங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பலமணிநேரம் நீண்ட வரிசையில் நின்று, செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொது மக்களுக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.

கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெறாமல் உள்ளன.இதனால் அவற்றோடு நெருங்கிய பொருளாதார தொடர்புடைய ஏழை,எளிய,விவசாயப்பெருங்குடி மக்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டு உள்ளன.இது கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், சேவைகளையும் முடக்கிப்போட்டுள்ளது. எனவே, உடனடியாக மத்திய அரசு தமிழகம் முழுக்க இருக்கும் அனைத்துவகையான கூட்டுறவு சங்கங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போஸ்டர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் சங்க நிர்வாகிகள்.

இது தொடர்பாக, நம்மிடம் பேசிய தமிழ் நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தி ," நேற்று வரை தொடக்க வேளாண்மை மற்றும் இதர கூட்டுறவு சங்கங்களுக்குத்தான்  புதிய ரூபாய் நோட்டுகள் வராமல் இருந்தது. இன்று மத்திய கூட்டுறவு சங்கங்களுக்கும் பணம் இல்லை என்று  கூறிவிட்டது ஆர்பிஐ. இது பெரிய அளவிலான நெருக்கடியாக இருக்கிறது. இதனால் சங்கங்கள் முழுமையாக முடங்கியுள்ளது. நேற்று கூட பிரதமர் மோடி டெல்லியில் இது தொடர்பாக அவசர கூட்டம் நடத்தியுள்ளார்.

அதில், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கலாம், அங்கும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. உதாரணத்திற்கு கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் உரம்,ரேஷன் பொருட்கள் விற்கப்படுகின்றன.அங்கு இப்போது விற்பனை இல்லை. பண விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கிறது, மாநில அரசு ஒரு முடிவெடுக்கிறது.அதிகாரிகள் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். மொத்தத்தில் குழப்படியான நிலையில் இருக்கிறோம்.

இந்த நிலையில், கடந்த 12 ம் தேதி மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், சென்டரல் பேங்க்ல  புதியதாக ஒரு மிர்ரர் அக்கவுன்ட் ஆரம்பியுங்கள்.அதில் பணத்தைக்கட்டுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு அக்கவுன்ட் தொடங்க ஆதார் கார்டு வேண்டும். போட்டோ எடுக்கணும், போன் நம்பர் வேண்டும். இதெல்லாம் விவசாயிகளால் எளிதாக உடனே செய்ய முடியுமா? மத்திய கூட்டுறவு வங்கிகளை அவர்கள் எங்கே தேடி செல்வார்கள். இந்தச் சிக்கல் நீடிக்கிறது.

             

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்படவில்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் அங்கு எந்தவிதமான  பணப்பரிவர்த்தனையும் நடக்கவில்லை. கடந்த 9ம் தேதி முதல் நிலைதான்.பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சேலைகள் விற்கப்படவில்லை.நெசவாளர்களுக்கு சனிக்கிழமை வழங்கப்படும் கூலி முன்பணம் வழங்கப்படவில்லை.அரசுப்பள்ளிகளுக்கு யூனிபார்ம் தைக்கும் பெண்களுக்குக்  கூலி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் எங்களிடம் புதிய ரூபாய் நோட்டுகளை எதிர்பார்த்துவரும் பொதுமக்களுக்கு, உண்மை நிலையை விளக்கிக் கூறுகிறோம். ஆனால் அவர்களின் கோபம் எங்கள் மீது திரும்புவதைத் தடுக்க, விளக்கம் தரும் வகையில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், போஸ்டர்கள் ஒட்டியும் உள்ளோம்." என்று தெரிவித்தார்.

- சி.தேவராஜன்                               

எடிட்டர் சாய்ஸ்

MUST READ