Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜல்லிக்கட்டு கதிதான், சிப்பெட்டுக்கும்!'  -அச்சம் விதைக்கும் மத்திய அரசின் மௌனம்

சென்னை சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவு குறித்து உத்தரவு எதுவும் வராததால், அச்சத்தில் ஆழ்ந்துள்ளன தொழிற்சங்கங்கள். ' அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. இதன் பின்னணியில் மறைமுக வேலைகள் நடக்கலாம்' எனவும் அதிர வைக்கின்றனர் ஊழியர்கள். 

தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் சிப்பெட். கடந்த 1968-ம் ஆண்டு முதல் இன்று வரையில் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம் இது. இதன்கீழ் நாடு முழுவதும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் பொறியியல் உள்பட பல பிரிவுகளில் படித்து வருகின்றனர். கிண்டியில் இயங்கும் சிப்பெட் தலைமையகத்தில் ஆப்ரேட்டர் பயிற்சி வகுப்புகள், தர பரிசோதனை மையங்கள் என மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்த ஊழியர்களின் சம்பளம் உள்பட அனைத்து தேவைகளுக்கும் அரசின் கைகளை எதிர்பாராமல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சியில் இறங்கியது மத்திய அரசு. ' காவிரி விவகாரத்தால் கொந்தளித்த கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் ஆனந்தகுமார், டெல்லிக்கு சிப்பெட்டை மாற்றும் முடிவை எடுத்தார்' என அதிர வைத்தனர் ஊழியர்கள். இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதி, சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒருகட்டத்தில், ' சிப்பெட்டை இடம் மாற்ற மாட்டோம். அதற்குப் பதில் மண்டல தலைமை அலுவலகங்களை உருவாக்குவோம். எங்களால் ஒரு சிப்பெட் அல்ல, நூறு சிப்பெட்டை உருவாக்க முடியும்' எனப் பேட்டி அளித்தார் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார். இந்தப் பேட்டியால் ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ' தமிழ்நாட்டில் இருந்து தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் மண்டல தலைமை அலுவலகங்களை உருவாக்குவோம் என அமைச்சர் சொல்கிறார். இப்படியொரு சம்பவம் நடந்தால், சிப்பெட்டின் மீதான தமிழகத்தின் பிடி நழுவிவிடும்' எனக் கொந்தளித்தனர். இதுகுறித்து மத்திய அரசின் நிலையும் அதிகாரபூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை. 

" மத்திய அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக எந்தவித பதிலும் வரவில்லை. சிப்பெட் தலைமையகத்தை மாற்றுவது குறித்து, கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ' 60 நாட்களுக்குள் மாற்ற வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர். வருகிற 22-ம் தேதியோடு 60 நாள் கெடு முடிவடைகிறது. அதற்குள், ' சிப்பெட்டை மாற்ற வேண்டியதில்லை' என அறிவிப்பு வெளியிட வேண்டும். கடந்த வாரம் சிப்பெட்டின் இயக்குநர் ஜெனரல் எஸ்.கே.நாயக்கை சந்தித்துப் பேசியபோது, ' அரசின் முடிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது' எனத் தெரிவித்தார். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையில் என்ன நடக்கப் போகிறது என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை. அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு செய்வோம். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு எப்படிச் செயல்பட்டதோ, அதைப் போலவே, சிப்பெட் விவகாரமும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது" என்கிறார் சிப்பெட் தொழிற்சங்கங்களின் ஐக்கிய முன்னணியின் தலைவர் நீலகண்டன். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ