Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில்களையும் விட்டு வைக்காத ரூபாய் நோட்டு சர்ச்சை... உண்டியல்களை முன் கூட்டியே எண்ண அரசு உத்தரவு !

திருநெல்வேலி : கோயில் உண்டியல்களில் உள்ள காணிக்கைப் பணத்தை டிசம்பர் 30-ம் தேதிக்குள் எடுத்து எண்ணி முடித்துவிட வேண்டும் என தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அத்துடன், உண்டியல் எண்ணிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை டிசம்பர் இறுதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதியதாக 500, 2000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய கோயில்களின் உண்டியல் வருமானத்தை எண்ணி அதில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? என நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரம்மா, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

அதில், ’பிரதமரால் 9-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவில் உண்டியல் வருமானத்தை எடுத்து அதில் உள்ள பழைய கரன்சிகளை மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? அந்த கரன்சிகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் எதுவும் மத்திய அரசிடம் கோரப்பட்டு இருக்கிறதா? மத்திய அரசு கொடுத்த கால நிர்ணயத்துக்குப் பின்னர், உண்டியல் எண்ணப்படுமானால், அதில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது?

உரிய கால அவகாசத்துக்குப் பின்னர் உண்டியல் எண்ணப்படுமானால், அதில் உள்ள 100, 50, 20, 10, 5, 2, 1 போன்ற ரூபாய் நோட்டுகளை வசதியும் கோவிலில் செல்வாக்கும் பெற்றவர்கள் எடுத்துக் கொண்டு அவர்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளக்கூடுமே.  அதனால் கோயிலின் உண்டியலை உடனே எண்ண வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் எந்த தேதியில் உண்டியல் எண்ணுவதற்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது? ஒவ்வொரு கோயிலிலும் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே உண்டியல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ள சூழ்நிலை கருதி, முன்கூட்டியே எண்ணுவதற்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறதா?’ என 6 கேள்விகளை முன்வைத்து இருந்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக உத்தரவு ஒன்றை தமிழக இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரான வீரசண்முகமணி, இது தொடர்பாக விடுத்த சுற்றறிக்கையில், ’’மத்திய அரசால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து திருக்கோயில்களில் நிறுவப்பட்டுள்ள உண்டியல்கள் அனைத்தையும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் சட்டவிதிகளின்படி திறந்து கணக்கீடு செய்து வங்கியில் செலுத்த அனைத்து சார்நிலை அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்டியல் எண்ணி கணக்கிடும்போது, கிடைக்கப்பெறும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அந்தந்த திருக்கோயிகளின் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.. குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, வங்கிப் பரிமாற்றம் மூலம் மாற்றி தனிநபர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அவ்வாறு தனிநபர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார் ஏதும் வரப்பெற்றால், சம்பந்தப்பட்ட திருக்கோயிலின் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”” என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

கோயில்களின் உண்டியல் வசூல் குறித்து தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பிரம்மாவிடம் பேசினோம். ’’கோயில்களின் உண்டியல் எண்ணுவது தொடர்பாக அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுத்து இருக்குமானால் மகிழ்ச்சியே. அதே சமயம், தமிழகத்தின் முக்கிய கோயிகளான பழனி முருகன் கோயில், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை, திருச்செந்தூர், நெல்லையப்பர் உள்ளிட்ட பல கோயில்களின் உண்டியல் வருமானம் கோடிகளை தாண்டும்.

இது போன்ற கோயில்களின் அறங்காவலர்களாகவும் பக்த பேரவை நிர்வாகிகளாகவும் உள்ள வசதியும் செல்வாக்கும் படைத்தவர்கள், உண்டியல் வருமானத்தை பயன்படுத்தி தங்களுடைய கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதற்கு எந்த வகையிலும் அறநிலையத்துறை துணை போய்விடக் கூடாது. அதனால், உண்டியல் பணத்தை என்ணும்போது கண்காணிப்பு கேமரா மூலம் அதனைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்புக் கேமரா வசதி இல்லாத கோயில்களில் சிறப்பு ஏற்பாடாக வாடகை கேமரா மூலமாவது முழுவதையும் வீடியோ எடுக்க வேண்டும்.

மேலும், வருமானம் அதிகம் இருக்கும் கோயில்களில் வருவாய்த்துறை, நீதித்துறை, காவல்துறை உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, அத்தகைய பார்வையாளர்கள் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட வேண்டும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அறநிலையத்துறை ஆணையர் முன்வர வேண்டும். இல்லாவிட்டால், கறுப்புப் பணம் வைத்துள்ள செல்வாக்கு படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் கோயில் வருமானத்தை தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். கோயில்கள் மட்டும் அல்லாமல் சர்ச்சுகள், மசூதிகள் போன்றவற்றின் உண்டியல் பற்றியும் தமிழக அரசு கவனம் செலுத்தி கறுப்புப் பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ