Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமவுன்ட் வேணுமா... அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுங்க...! அஞ்சலகங்களின் அடாவடி  (அதிர்ச்சி வீடியோ)

 'பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றால் எங்களிடம் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுங்க' என்று அடாவடியாக சென்னை அண்ணாசாலை அஞ்சலக ஊழியர்கள் தெரிவித்ததால்  மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ம் தேதி முதல் மக்கள் வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகிய இடங்களில் குவிந்து வருகின்றனர். முதலில் ஒரு நபருக்கு தினமும் 4000 ரூபாய் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து 4,500 ரூபாய் என்று மாற்றப்பட்டது. இருப்பினும் இதை சில வங்கிகள் பின்பற்றவில்லை.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் பழைய பணத்தை மாற்ற அக்கவுன்ட் ஓப்பன் பண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக நமக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வாடிக்கையாளர் போல அங்கு சென்றோம். அப்போது அங்குள்ள ஊழியர்கள், 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. எங்களது அஞ்சலகத்தில் அக்கவுன்ட் ஓப்பன் செய்த பிறகு பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். அதற்குரிய விண்ணப்ப படிவத்தையும் உடனடியாக கொடுத்தனர். நமக்கு முன்பு அங்கு சென்றவர்களிடமும் அதே பதிலை அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அக்கவுன்ட் ஓப்பன் செய்ய வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அக்கவுன்ட் ஓப்பன் செய்து விட்டு அதற்குரிய பாஸ் புத்தகம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து வழங்கப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.


 

 

வங்கி ஊழியர்களின் இந்த அதிரடி அறிவிப்பால், இன்று அண்ணாசாலை அஞ்சலகம் சென்றவர்கள் வேறுவழியின்றி சேமிப்பு கணக்குக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததைக் காண முடிந்தது. இந்த நிகழ்வுகளை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்தோம். அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் மட்டும்தான் இந்த நடவடிக்கையா இல்லை அனைத்து அஞ்சலகங்களிலும் உள்ளதா என்ற விசாரித்தோம். ஆனால்,  எல்லா இடங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுப்பதாக அஞ்சலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அஞ்சலக உயரதிகாரி வெங்கடேஷ்வரலுவிடம் தகவலைச் சொன்னோம். பணத்தை மாற்ற அக்கவுன்ட் ஓப்பன் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் பணப்பற்றாக்குறை காரணமாக இன்று காலையில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர், உடனடியாக அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் உயரதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதன்பிறகு அங்கு பணம் மாற்றி கொடுக்கப்பட்டது. 

இதுகுறித்து அஞ்சலக வட்டாரங்கள் கூறுகையில், "அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. இதனால் பணத்தை மாற்ற வருபவர்களிடம் 100 ரூபாய் கொடுத்து சேமிப்பு கணக்கு தொடங்க உயரதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டதன் பேரில் நாங்கள் கணக்கு தொடங்க மக்களிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள் சேமிப்பு கணக்கை தொடங்கி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில்  தலைமை அஞ்சலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் சேமிப்பு கணக்கைத் தொடங்கியதால் அனைவருக்கும் பாஸ் புத்தகம் வழங்க முடியவில்லை. அவர்களுக்கு விரைவில் பாஸ் புத்தகம் வழங்கப்படும்" என்றனர். 

எஸ்.மகேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ