Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டு விவகாரம், திமிறும் பிறமாநில முதல்வர்கள்...! என்ன செய்கிறது தமிழக அரசு...?

வியர்வை சிந்தி உழைத்து கூலியாகக் கிடைத்த பணத்துக்குப் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல், வங்கிகளின் முன்பு வரிசையில் நிற்கும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடுமையான முடிவு

நிதிஷ் குமார், பீகார் முதல்வர்; "500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை ஆதரிக்கின்றேன். வரவேற்கின்றேன். இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகாலத்துக்கு நீடித்திருக்கச் செய்யும். ஆரம்பத்தில் மக்களுக்கு சில சிமரங்களை ஏற்படுத்தலாம், எனினும் சாதகமான நிலையை ஏற்படுத்தும்"

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்; "ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது கடுமையான முடிவு. மேற்கு வங்கத்தின் சகோதரர்களும், சகோதரிகளும் மிகவும் ஏழைகள். வாரக்கூலியாகப் பெறும் 500 ரூபாயைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர்."

 

 

தோல்விகளில் இருந்து திசை திருப்புகிறார்

என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திரா முதல்வர்; "பிரதமருக்கு கடந்த மாதம் நான் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையிலேயே இப்போது 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். அதில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரு ஆண்டுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். இப்போது எடுக்கப்பட்டது ஒரு  தீர்க்கமான முடிவு."  

மாணிக் சர்கார், திரிபுரா முதல்வர்; "மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் வகையில் அரசியல் ஜிம்மிக் வேலையை மோடி செய்திருக்கிறார். வங்கி இல்லாத ஊர்களில் வசிப்பவர்கள், வங்கிக் கணக்குகள் இல்லாத மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், கறுப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி சொன்னார். அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அதை அவர் நிறைவேற்றவில்லை."


அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர்;" 500 ரூபாய், 1000ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதால் சட்டவிரோத பணத்தைத் தடை செய்து விட முடியாது. பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, அரசின் முடிவு பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் மிகப் பெரிய மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான வரிசையில் ரிக்‌ஷா ஓட்டுனர், குடும்பத் தலைவிகள், சிறுவணிகர்கள் ஆகியோர்தான் இருக்கின்றனர். இது கறுப்புப் பணத்துக்கு எதிராக நடந்த சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக் அல்ல. சாதாரண மனிதர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்"
பினராயி விஜயன், கேரள முதல்வர் ; "பழைய நோட்டுக்களை வாபஸ் பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே நெருங்கிய நபர்களுக்கு மட்டும் தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களைச் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்வதற்கும், மருந்துகள் வாங்குவதற்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக்கொள்ள மத்தியஅரசு வழி ஏற்படுத்தவேண்டும்."

சித்தராமைய்யா, கர்நாடகா முதல்வர்; "கூட்டுறவு வங்கிகள், தங்களது பணத்தேவைகளுக்காக வணிக வங்கிகளையே எதிர்பார்க்க வேண்டி உள்ளது. வழக்கமாக கூட்டுறவு வங்கிகளுக்கு 500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கடந்த 5 நாட்களாக 25 கோடி ரூபாய் மட்டுமே கூட்டுறவு வங்கிகளுக்குத் தரப்பட்டுள்ளது. இது 7 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகளை பாதித்துள்ளது. இதனால் சிறிய, நடுத்தர விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்."

இந்தச் சூழலில், ஜெயலலிதா அங்கு அஞ்சலி செலுத்தினார்; மூன்று தொகுதி தேர்தலில் அதிமுக வாக்களிக்க சொன்னார் என்று தான் அறிக்கை வெளியிடப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை புரிந்துகொள்ளமுடிகிறது.ஆனால், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள்?.என்ன செய்கிறது தமிழக அரசு...?

-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ