Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மாவட்ட ஆட்சியராலேயே சட்டத்தை அமல்படுத்த முடிவதில்லை!' - சகாயம் வேதனை


மதுரை : "இந்த நாட்டில் ஊழல், சுரண்டல், பித்தலாட்டம் நடக்கிறது. இங்கு படித்தவர்கள் எல்லாம்  கோழையாகவும், சுயநலவாதியாகவும் இருக்கிறார்கள். ஒரு மாவட்ட ஆட்சியரால் இந்த சட்டத்தைக்கூட அமல்படுத்த முடியவில்லை," என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா மதுரையில் சோக்கோ அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் சகாயம் ஐ.ஏ.எஸ், வழக்கறிஞர் கோவிந்த் பன்சாரே, ஐ.ஐ.டி பேராசிரியர் ராம் புன் யானி, பேராசிரியர் அக்பர் அலி, முன்னாள் தேசிய மனித உரிமை ஆனையத்தின் டி.ஜி.பி சமன்லால், பத்திரிகையாளர் டீஸ்டா செடல்வாட், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் இணைப் பதிவாளர் ஏ.கே.பரசார் ஆகியோருக்கு  கிருஷ்ணய்யர் பெயரிலான விருதுகளை தமிழ்நாடு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் "24 ஆண்டுகள் பணியாற்றிய எனக்கு 23 முறை பணி மாறுதல் கிடைத்தது இதுவே எனக்கு கிடைத்த விருதாக நான் பார்க்கிறேன். நான் இந்த சமூகத்தை உளமாற நேசிக்கிறேன். இதுவே எனக்கு இந்த விருது பெற தகுதி. இந்த நாட்டில் சட்டத்தை அமல்படுத்துவது மிக கடினமான விஷயம்.

2009-ம் ஆண்டு நான் ஒரு தவறு செய்து விட்டேன். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, நாட்டின் முதுகெலும்பான கிராமத்தின் நிர்வாகத்தை நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த கிராமத்தில் தங்கி பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டேன். அது தான் நான் செய்த தவறு. அந்த கிராமத்தில் இல்லாமல் அந்த கிராம மக்களுக்கு உரிய நேரத்தில் பணியாற்ற முடியும்?.

ஆனால் இந்த சட்டத்தை என்னால் அமல்படுத்த முடியவில்லை. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மிக மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார்கள். இதை வீடியோவாக எடுத்து முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினேன். உடனடியாக என்னை இடமாற்றம் செய்து விட்டார்கள். ஒரு மாவட்ட ஆட்சியரால் இந்த சட்டத்தைக்கூட அமல்படுத்த முடியவில்லை. கிரானைட் மலைப்பக்கம் ஒதுங்கினால் சும்மா விடுவார்களா?

இந்த நாட்டில் ஊழல், சுரண்டல், பித்தலாட்டம் நடக்கிறது. இங்கு படித்தவர்கள் எல்லாம்  கோழையாகவும், சுயநலவாதியாகவும் இருக்கிறார்கள். இது மாற வேண்டும். ஊழலுக்கும், சுரண்டலுக்கும் எதிராக குரல் கொடுக்காமல் இளைஞர்கள் அமைதியாக தூங்குகிறார்கள். இது வேதனையாக இருக்கிறது. இளைஞர்கள் ஊழல், சுரண்டலை, அடிமைத்தனத்தை ஒழிக்க வீதியில் இறங்க வேண்டும்" என்று பேசினார்.

- சண்.சரவணக்குமார்,

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ