Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கார்டன் திரும்புவதை எப்போது உறுதி செய்வார் ஜெயலலிதா?!’  -தவிக்கும் அப்போலோ; கலங்கும் சசிகலா

 

ப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 55 நாட்களாக இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' முதல்வர் உடல்நிலையில் ஏற்ற, இறக்கம் இருப்பதால் கார்டன் திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய்த் தொற்றின் காரணமாக, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வாசலில் தொண்டர்களின் வழிபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால், நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டார் ஜெயலலிதா. ஆனாலும், நோய் எதிர்ப்பு மருந்துகளின் தாக்கத்தால் இன்னும் சில நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். “நுரையீரல் நோய்த் தொற்றின் தாக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்திலேயே, சிறுநீரகத் தொற்றுக்கும் ஆளானார். அதற்கேற்ப சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வந்தன. பலவிதமான உடல் உபாதைகளும் இருந்ததால், அதற்கேற்ப மருந்துகள் அளிக்கப்பட்டன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் அவ்வப்போது லண்டன் சென்று வந்தாலும், முதல்வர் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தற்போது சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்ட்டுகளின் சிகிச்சை தொடர்கிறது. அப்போலோ மருத்துவர்களே முதல்வரைக் கண்காணித்து வருகின்றனர்” என விவரிக்கும் கார்டன் ஊழியர்கள், 

“கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்தபடி, நவம்பர் 14 முதல் 16-ம் தேதிக்குள் எதாவது ஒரு நல்ல நேரத்தில், முதல்வர் கார்டன் திரும்பிவிடுவார் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தோம். அதற்கேற்ப, மருத்துவமனை நிர்வாகமும், ‘ வீடு திரும்புவதை முதல்வரே முடிவு செய்வார்’ என நம்பிக்கையோடு தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து இயற்கையாக சுவாசிக்கும் அளவுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ட்ரக்கியோஸ்டமி குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. ஒரு நோயாளி 72 மணி நேரம் இயற்கையான சுவாசத்தில் இருந்தால்தான், நார்மல் வார்டுக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். அதாவது, சிகிச்சை காலத்தில் 7 மணி நேரம், 9 மணி நேரம் எனப் படிப்படியாக செயற்கை சுவாசத்தைக் குறைத்து, சோதனை செய்வார்கள். அப்படியே 72 மணி நேரங்கள் இயற்கையாக சுவாசித்தால், நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். 

ஆனால், முதல்வர் இயற்கையாக சுவாசிப்பதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. மணிக்கொரு முறை செயற்கை சுவாசம், இயற்கை சுவாசம் என மாற்றி மாற்றி பரிசோதிக்கின்றனர். நோயின் தாக்கம் முழுமையாக குறைந்திருந்தால், இந்நேரம் இயற்கை சுவாசத்துக்கு திரும்பியிருப்பார். கை, கால்களில் கொடுக்கப்பட்டு வந்த பிஸியோதெரபி சிகிச்சைகள் நல்ல பலனைக் கொடுத்துள்ளன. இருப்பினும், முதல்வரின் உடல் இயங்கு முறைகளில் சில அசாதாரணங்கள் ஏற்படுகின்றன. ‘மீண்டும் மருத்துவமனைக்கு வராத வகையில் பூரண நலத்தோடு திரும்ப வேண்டும்’ என சசிகலா நினைக்கிறார். முதல்வர் படும் சிரமங்களால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. திரவ உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழலில் முதல்வர் கார்டன் திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம்” என்றார் விரிவாக. 

‘முதல்வர் வீடு திரும்ப வேண்டும்’ என்றுதான் அப்போலோ நிர்வாகம் விரும்புகிறது. மருத்துவமனையின் இயல்பான பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால், மிகுந்த பதற்றத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து இரண்டு முறை மீடியாக்களில் பேட்டி அளித்தார் அப்போலோ நிர்வாகி. தற்போதுள்ள சூழலில், ‘கார்டனில் வைத்தே முதல்வருக்கான சிகிச்சைகளைத் தொடரலாம்’ என சில மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ‘கார்டனில் இருந்தபோது கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால்தான், அப்போலோ கொண்டு வரப்பட்டார் முதல்வர். மீண்டும் ஓர் இக்கட்டான சூழலுக்கு இடம் அளித்துவிடக் கூடாது. மேலும் ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தாலும் பரவாயில்லை’ என உறுதியாகக் கூறிவிட்டார் சசிகலா. அதன்படியே மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் முதல்வர்’ என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.   

“தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதித் தேர்தல்களுக்கு, முதல்வரின் சார்பாகவே தொண்டர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இதுபோன்ற நடைமுறையை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சட்டமன்றத் தேர்தலிலும் பரிசோதித்துப் பார்த்தனர். இதுபோன்ற மனம் திறந்த மடல்களால் தொண்டர்கள் அதிக உற்சாகம் அடைகின்றனர் என கார்டன் வட்டாரம் உறுதியாக நம்புகிறது. தற்போது தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருந்தாலும், முதல்வர் அனுப்பியது போல ஒரு மடல் தயாரிக்கலாம் என நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை வட்டாரத்திலிருந்து, சசிகலாவிடம் எடுத்துச் சொல்ல, அதன்படியே தொண்டர்களுக்கு முதல்வர் எழுதியதாக ஓர் அறிக்கை வெளியானது. தேர்தலுக்கு முதல்நாளும் இதுபோன்ற ஓர் அறிக்கையை எதிர்பார்க்கலாம். அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருப்பதால், தலைமைச் செயலகத்தில் எந்தக் கோப்புகளும் நகரவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அமைச்சர்கள் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். இதனால் அரசு தொடர்பான அனைத்துப் பணிகளும் தேங்கியுள்ளன” என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ