Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று தொகுதிகளில் வெற்றி யாருக்கு?  -தி.மு.க.வை கலவரப்படுத்திய அ.தி.மு.க. 

ஞ்சை உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. ‘ அ.தி.மு.க அமைச்சர்களின் அசுர வேகத்தால் தி.மு.க.வினர் சுணங்கிப் போய் உள்ளனர். மூன்று தொகுதிகளும் நம்பிக்கை அளிக்கவில்லை’ என ஆதங்கப்படுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரது பிரசாரமும் இல்லாமல், தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. 'மூன்று தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்வோம்’ என நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வந்தார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். “குறிப்பாக, சட்டமன்றத்தில் தி.மு.க.வின் பலம் 92 ஆக உயர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், கள நிலவரம் சாதகமாக இல்லை” என குமுறலோடு பேசத் தொடங்கினார் தி.மு.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், 

“முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால், அ.தி.மு.க நிர்வாகிகள் தொடக்கத்தில் சரியாக தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக தேர்தல் பணிகளில் வேகமெடுத்துள்ளனர். ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரையில் தாராளமாக அளிக்கின்றனர். ‘வெற்றியைத் தேடித் தராவிட்டால் அமைச்சர் பதவி காலியாகிவிடும்’ என்பதால் சொந்தக் காசைப் போட்டு செலவு செய்கின்றனர். எங்கள் தரப்பில் ஓட்டுக்கு 500 ரூபாய் தந்து வருகிறோம். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் முன்பே ஏராளமாக செலவு செய்துவிட்டதால், தற்போது செலவு செய்ய யோசிக்கின்றனர். குறிப்பாக, அரவக்குறிச்சி கே.சி.பழனிச்சாமி குறிப்பிடும்படியாக தேர்தல் செலவைச் செய்யவில்லை. இதனால், தொண்டர்கள் மத்தியில் சுணக்கம் தென்பட்டுள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க அமைச்சர்களின் பணமழை அதிர வைக்கிறது. இரண்டு தரப்பிலும் விநியோகம் தொடர்வதால், தேர்தல் ஆணையத்தில் எந்த முறைகேடு புகாரும் செல்லவில்லை. 

இப்படி நடக்கலாம் என எதிர்பார்த்து, முதல்கட்டமாக வழக்கறிஞர் அணி கூட்டத்தையும் அடுத்து 15 மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தையும் நடத்தினார் ஸ்டாலின். தேர்தல் பணிகளில் எதிர்பாராத முன்னேற்றம் இல்லாததால், கடும் கோபத்தில் இருக்கிறார். இதைப் பற்றி நிர்வாகிகளிடம் பேசும்போது, ‘ மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கடந்தமுறை வாங்கிய ஓட்டுக்களைவிடவும், குறைவான ஓட்டுக்களை வாங்கினால் அமைதியாக இருக்க மாட்டேன். மாவட்டம், நகரம், ஒன்றியம் என பதவிகளைப் பறிப்பதற்கும் தயங்க மாட்டேன்’ என எச்சரித்தார் ஸ்டாலின். இதையடுத்து, விடிய விடிய ரோந்து செல்வதற்காக தனி டீம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க ரோந்தில் இருந்தால், பணம் விநியோகம் செய்ய ஆளுங்கட்சி தயங்கும் என்பதே காரணம். இருப்பினும், மூன்று தொகுதி தேர்தல் முடிவுகள், எங்களுக்கு சாதகமாக வருவது கடினம்தான்” என்றார் வேதனையோடு. 

“மூன்று தொகுதிகளிலும் மாநிலத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் குழுமிவிட்டனர். தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து, அதை நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. தொகுதி பொறுப்பாளர்கள் தொடங்கி மாவட்டம் வரையில் பல குழுக்கள் பணத்தை விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு, பணம் சென்று சேர்ந்துவிட்டதா என மூன்று கட்டங்களாக சோதனை செய்கிறார்கள். ஒவ்வொரு வாக்காளரும் திருப்திடையும் வகையில் பணம் கொடுக்கப்படுகிறது. மூன்று தொகுதி வெற்றியை முதல்வருக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என சசிகலா உத்தரவிட்டுள்ளதால், அமைச்சர்கள் கடுமையாக வேலை பார்க்கின்றனர். கடந்த தேர்தலைவிடவும், மூன்று தொகுதிகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி அடையும்” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

ரூபாய் நோட்டுகள் மாற்றம், அப்போலோவில் முதல்வர் எனப் பல பிரச்னைகள் இருந்தாலும், மூன்று தொகுதிகளில் பண விநியோகத்தில் எந்த சுணக்கமும் காட்டாமல் கதிகலக்குகின்றனர் ஆளுங்கட்சி அமைச்சர்கள். 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ