Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ ஊழலுக்கு துணைபோகச் சொன்னாரா அமைச்சர்?’  -பதறும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர்

மீண்டும் ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறது கோவை பாரதியார் பல்கலைக்கழகம். பேராசிரியர் பணியிடங்களுக்கு வசூல், ஆளுநர் பிரதிநிதி நீக்கம் என பல்கலைக்கழகம் குறித்து வெளியாகும் தகவல்களால் கவலையில் ஆழ்ந்துள்ளனர் கல்வியாளர்கள். 

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் 136 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. இதற்கான நேர்காணல்கள் அனைத்தும் பெயரளவுக்கு நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர்.தமிழ்மணியிடம் பேசினோம். “ ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பேராசிரியர் பணியிடங்களுக்கு 40 லட்சம், இணை பேராசிரியர்களுக்கு 35 லட்சம், உதவிப் பேராசிரியர்களுக்கு 30 லட்சம் என துறைக்குத் தக்கவாறு வசூல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில், தேர்வுக் கமிட்டியில் ஆளுநர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி, துணைவேந்தர், துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால், தேர்வுக் கமிட்டியில் ஆளுநர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி மாற்றப்பட்டு, அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் மணிமேகலை நியமிக்கப்பட்டுள்ளார். ராமசாமி மீது இதுவரையில் எந்தப் புகார்களும் இல்லை. ஆனால், அரசு பிரதிதியாக நியமிக்கப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் மீதும் சில புகார்கள் உள்ளன. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மிகச் சரியாக செயல்படக் கூடியவர். பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், அவருக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் சொல்கின்றனர். ஆளுநர் நேரடியாகத் தலையிட்டால் மட்டுமே, நேர்மையான முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்கிறார்.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியிடம் பேசினோம். 

ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தகவல்கள் வெளிவருகிறதே? 

“ இப்படியெல்லாம் ஏன் தகவல்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. விளம்பரம் செய்யப்பட்ட நாளில் இருந்தே, ‘ பணியிடங்களை நிரப்பக் கூடாது’ எனச் சிலர் செயல்படுகின்றனர். தேசிய அளவில் 14-வது இடத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் இருக்கிறது. மாநில அளவில் முதலிடத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்களது தகுதியை மேம்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை மேம்படுத்துவது என்பது மிக முக்கியமானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தில் ஐம்பது பேராசிரியர்களுக்கும் மேல் ஓய்வு பெற்றுவிட்டார்கள். இந்தப் பதவிகள் அனைத்தும் பல்கலைக்கழகம் தொடங்கியபோது நிரப்பப்பட்டவை. இவற்றை உரிய காலத்துக்குள் நிரப்பவில்லையென்றால், தரக் கட்டுப்பாட்டில் பின்னுக்குத் தள்ளப்படுவோம். நாக் கமிட்டியின் விதிமுறைகளில் ஒன்று, ‘ காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்’ என்பது. எனவே, முறைகேட்டுக்கு இடம் அளிக்காத வகையில் நேர்காணலுக்கு வருபவர்களுக்கு உரிய அவகாசமும் அளித்து வருகிறோம். நேர்காணலுக்கு வருபவர்களில் சிலர், பி.எச்டி இல்லாமல் நெட் உள்ளிட்ட தகுதிகளோடு வருகின்றனர். ஆசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியில்லாதவர்கள் வரும்போது, அவர்கள் வெளியில் சென்று எதாவது சொல்லத்தான் செய்வார்கள். எந்தவித முறைகேடும் நடக்கவில்லை”.

கவர்னர் நாமினியாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ராமசாமி ஏன் நீக்கப்பட்டார்? 

“ ஆளுநர் அலுவலகம் அவரை ஒவ்வொருமுறை நியமிக்கும்போதும், ‘ என்னை நியமனம் செய்துள்ளீர்கள். நான் செல்லட்டுமா?’ எனக் கேட்கும் நிலையில்தான் அவரது கண்டிஷன் இருந்தது. பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கமிட்டியை நியமிக்கும்போது, ‘ஆளுநர் நாமினியை தெரிவியுங்கள்’ என கவர்னர் அலுவலகத்துக்கும் அரசு நாமினி குறித்து அரசுக்கும் கடிதம் அனுப்பினோம். அப்படித்தான் துணைவேந்தர்கள் மணிமேகலையும் சுவாமிநாதனும் வந்தார்கள். யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து, நான் முடிவு செய்ய முடியாது. ஆளுநர் அலுவலகம்தான் முடிவு செய்யும். என்னைப் பொறுத்தவரையில், இந்தப் பல்கலைக்கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நன்றாக செயல்பட வேண்டும் என ஆசைப்படும்போதுதான் விமர்சனம் வருகிறது. ஆசிரியர் தேர்வில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிப்படியே செயல்படுகிறோம். அதனால்தான், சிறந்த உயர்கல்வியை வழங்கும் நிறுவனமாக, மத்திய அரசின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறோம்”. 

அதற்காக, ஒவ்வொரு பணியிடத்துக்கும் 40 லட்சம் ரூபாய் வரையில் விலை பேசப்படுவது சரிதானா? 

“ இதற்கு நான் என்ன பதில் சொல்வது? பொத்தாம் பொதுவாக பேசிவிட்டுச் சிலர் செல்கின்றனர். எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்த்தால் எப்படி? அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது”.

பேராசிரியர் பணியிடம் நிரப்புவது குறித்து, அமைச்சர் ஒருவர் நீண்ட பட்டியலை கொடுத்ததாகவும் உங்களை நேரடியாக அழைத்து அழுத்தம் கொடுத்ததாகவும் சொல்கின்றனரே? 

“ நான் துணைவேந்தர் ஆக நியமிக்கப்பட்ட நேரத்தில், அமைச்சரை சென்று சந்திக்கவில்லை. அப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. முதல்வரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற முடியவில்லை. பேராசிரியர் பணிடத்தைப் பொறுத்தவரையில், அமைச்சர் தரப்பில் இருந்தும் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இங்குள்ள சிலர் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு, ‘ அமைச்சர் சொன்னார்’ என வதந்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம்”.

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ