Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புது நோட்டு இருக்கு...ஆனா இல்லை! ரிவர்ஸ் கியரில் ரிசர்வ் வங்கி 

ரெப்கோ, கூட்டுறவு வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் இருந்தும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை யாரும் மாற்ற முடியாது. ஏனெனில் அவைகள் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தேவைக்காக மக்கள் பரிதவிக்கின்றனர். வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் மற்றும் கருவூலங்களில் மட்டும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் அரசு, தனியார், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு, தபால் அலுவலகங்கள், கருவூலங்கள் ஆகியவற்றில் பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். இது தவிர வங்கிகள் என்ற பெயரில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகள், ரெப்கோ வங்கிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். 

இதுகுறித்து தாயகம் திரும்பியோர் அனைந்திந்திய நலச்சங்கத்தின் தலைவர் ஜீவன் கூறுகையில், "பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்காக தொடங்கப்பட்டது ரெப்கோ வங்கி. தென்னிந்தியாவில் 110 ரெப்கோ கிளைகளும், தமிழகத்தில் 80 கிளைகளும் உள்ளன. இந்த வங்கியில் தாயகம் திரும்பியோர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை ரெப்கோ வங்கிகளில் மாற்ற முடிவதில்லை. ஏனெனில் இது வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வரவில்லை என்று வங்கி தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. மேலும் பணத்தை பெறவும் காலதாமதப்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவும் முடியவில்லை. அதே நேரத்தில் நகைக்கடனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுகள் பெறுகிறார்கள். அதுதொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கின்றனர்" என்றார்.

இதுகுறித்து ரெப்கோ வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகசேரனிடம் கேட்டபோது, "வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் எங்கள் வங்கி வராததால் நாங்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க முடியாது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் நலன்கருதி பணத்தை வங்கியிலிருந்து பெற அனுமதிக்கிறோம்" என்றார். 
 
ரெப்கோ வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக வங்கிகள், நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். ஆனால் ரெப்கோ வங்கி உள்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. மேலும் தாயகம் திரும்பியவர்களுக்காக இந்த வங்கி தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 8000 கோடி ரூபாய் டெபாசிட்டாக இருக்கிறது" என்றனர். 

- எஸ்.மகேஷ்   

எடிட்டர் சாய்ஸ்

MUST READ