Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை ஏ.டி.எம் களில் என்ன நடக்கின்றன? ஸ்பாட் விசிட்

 

 

ற்போதைய நிலையில் சென்னை போன்ற நகரங்களில் நாலு பேர் எங்காவது வரிசையாக நின்று கொண்டு இருந்தாலே ஏ டி எம் வாசலில்தான் நிற்கிறார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து எங்கு பார்த்தாலும் பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

அரசின் புதிய அறிவிப்புகள், தீயாக பரவும் வதந்திகள், அன்றாட வேலைகளோடு வங்கிக்கு சென்று தங்கள் கையிருப்பில் உள்ள பழைய தாள்களை  மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், வங்கி கணக்கில் பணம் நிறைய இருக்க சாப்பாட்டுக்கும் போக்குவரத்து செலவுக்கும் கூட வழி இல்லாமல் தவிக்கும் அவலம் என பலதரப்பு மக்களையும் மனதளவில் கடுமையாக பாதித்திருக்கிறது புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு.    

சென்னை

 
சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் வாசலில்  7 செக்கியூரிட்டிகள் நின்று கொண்டு இருக்கிறார்கள். வங்கிக்குள் நுழைய முற்படும் ஒவ்வொருவரையும் நிறுத்தி அந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா என விசாரித்து விட்டு அதில் பணம் டெபாசிட் செய்ய வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

 

சில இடங்களில் வங்கி ஊழியர்கள் ஏ டி எம்களில் பணத்தை நிரப்பிவிட்டு வெளியேறிய பிறகு, அந்த ஏடிஎம் காவலர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், எண் கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கும் முதலில் அழைத்து "பணம் போடப்பட்டிருக்கிறது, சீக்கிரமா வந்து எடுத்துக்கங்க" என தகவல் சொல்வதோடு அதற்கான டிப்ஸையும் வாங்கிக் கொள்கிறார்களாம். ஏ டி எம்மில் பணம் இருந்தாலுமே இல்லை என சொல்லும் அவலமும் நிகழ்கிறது.   

இன்னொரு பக்கம், ஏ.டி.எம் வரிசையில் நின்றவர்களைத் தாண்டி பணம் நிரப்புபவருடன் வந்த கன்மேனிடம் பேச்சு கொடுத்தோம். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர் இங்கு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ‘தினம்தினம் கட்டுக்கட்டா பணத்துக்கு காவல் நிக்கறேன். கையில் பத்து ரூபாய் கூட இல்லைங்க’ என்று சோகமாகப் புலம்பிவிட்டுச் சென்றார்.

அரசுப் பேருந்துகளிலோ நீங்கள் 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்தாலும், 10 ரூபாய் நோட்டை சேஞ்சாக கொடுப்பதில்லை. 5 ரூபாய் காயின்களைப் பொறுக்கிக் கொடுக்கின்றார்கள் கண்டக்டர்கள். கைகளில் பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் கூட அதைக் கொடுப்பதில்லை என்கிறார் பயணி ஒருவர்.

இன்னொரு பக்கம், வங்கிகளில் பணம் மாற்ற நிற்கும் நீண்ட வரிசையிலேயே வந்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா?’ என்று கூச்சமே படாமல் கேள்வி எழுப்புகின்றனர் சில தனியார் வங்கி எக்ஸிக்யூடிவ்கள்.  சில வங்கிகளிலோ பணம் மாற்றுபவர்களிடம் அங்கும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி மூளைச்சலவையும் நடைபெறுகிறது.  

வங்கி

த்திராஜ் கல்லூரி அருகே இருக்கும் இந்தியன் வங்கி கிளை ஒன்றின் வாசலில் வரிசையில் நின்றவாறு..,

"இந்தப் புது ரூபாய் நோட்டுகள் பத்தின அறிவிப்பு வெளியானதலிருந்து பேங்குக்கும், ஏ டி எம்களுக்கும் போய் வருவதே பெரிய வேலையா இருக்கு. அதிலும் முதல்ல பணம் இருக்கும் ஏ டி எம் மெஷின் எங்க இருக்குனு கண்டுபிடிக்கணும். அங்க ஒன்னு வேலை செய்யுது சீக்கிரம் போங்கன்னு யாராச்சும் சொல்லிட்டு போவாங்க. வேகமா போய் பார்த்தா பணம் தீர்ந்திருக்கும். அப்படியே பணம் இருந்தாலும் ஏற்கெனவே வரிசையில நிர்க்குறவங்களோட கடைசியா நின்னு பணம் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு
போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது சார்" என வேதனையுடன் சொல்கிறார் முதியவர் ஒருவர்.   

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் ஏ டி எம் மெஷினில் இரண்டு லட்சம் ரூபாய் நிரப்பப்படுகிறது என்றால், வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் 4, 5  கார்டுகளை எடுத்துச் சென்று பணம் எடுத்துவிடுகிறார்கள். ரொம்ப சிக்கலான நிலையில் அவசரத்துக்கு பணம் எடுக்க வந்தவர்கள் வெகுநேரம் வரிசையில் நின்றுவிட்டு பணத்தை எடுக்க முடியாமல் விரக்தியோடு திரும்பிச் செல்லும் நிலையும் இருக்கிறது.

வங்கி ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் "நீங்க ஏற்கெனவே 4000 ரூபாயை எடுத்து விட்டீர்கள், இனி எடுக்க இயலாது" எனச் சொல்லியிருக்கிறார். உடனே அந்த இளைஞர் தன் கையிலிருந்த படிவங்களை கிழித்து எறிந்து, கோவத்தில் கத்திவிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். அதே வங்கியில் ஒரு பெண் புதியதாக வெளியிடபட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து "100 ரூபாய் நோட்டுகள் தான் வேண்டும் " என அழுத சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இப்படி ஒரு குழப்பமான
மனநிலையை பலரிடமும் பார்க்க முடிகிறது. வெளியில் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டாலும் எல்லோருக்குள்ளுமே சிறிய பதற்றம் நிறைந்திருக்கிறது.

கறுப்புப் பண ஒழிப்பு , பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதையெல்லாம் தாண்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத உறுதியான சேவைகளும் ஒரு நாட்டிற்கு தேவை தானே...!?

- க.பாலாஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close