Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘நான் 'ஸ்லோ ரீடர்... ஏன் தெரியுமா?’ விஜயகாந்த் விளக்கம்

தஞ்சாவூர் : "நான் மத்தவங்க மாதிரி எழுதி வச்சு படிக்கறதில்லை. என மனசுல என்ன தோணுதோ, அதைத்தான் பேசுறேன். நான்  ஒரு  'ஸ்லோ ரீடர்'. நான்  பேச நினைப்பதை எடிட் பண்ணித்தான் பேசுவேன்," என தஞ்சாவூர் பிரசாரக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கான தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலையொட்டி, நேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசாரப்பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுகையில், "இந்த தொகுதியில நிறைய பிரச்னைகள் இருக்கிறது. பொதுக்கூட்டத்துக்கு வரும்போது இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை நான் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் மத்தவங்க மாதிரி எழுதி வச்சு படிக்கறதில்லை. என மனசுல என்ன தோணுதோ, அதைத்தான் பேசுறேன். சிலர் சொல்றாங்க. மேடை நாகரீகம் வேணும்னு. நான் என்ன காசு கொடுத்தா மேடை நாகரீகத்தை கற்றுக்கொண்டேன். நான்  ஒரு  'ஸ்லோ ரீடர்' நான்  பேச நினைப்பதை எடிட் பண்ணித்தான் பேசுவேன். நான் நிறைய நினைத்துக்கொண்டு வருவேன் ஆனால் பேசும்போதும் எடிட் செய்துதான் பேசுவேன்.

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். மத்திய அரசு செல்லாது என அறிவித்துள்ள பணத்தை உங்களிடம் கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள். நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். 'நாங்க பணம் கொடுக்கலை'னு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சத்தியபிரமாணம் செய்து கொடுக்க முடியுமா? நான் செய்துகொடுக்க முடியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதை என்னால் சத்தியபிரமாணம் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வருடத்திற்கு 900 கோடி மணல் குவாரியில் சம்பாதிக்கிறார்கள். அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும் இது தான் நிலைமை. எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். நாங்க மோசமானவங்க," என எச்சரித்து பேச்சை முடித்தார் விஜயகாந்த்.

 

 

முன்னதாக கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க.வின் இளைஞரணி செயலாளர் சுதீஷ், "இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர் ஒருவர் வந்து கேப்டனிடம் காசு கேட்டார். அப்போது தன்னிடம் இருந்த ரூ.500 நோட்டு செல்லாது என்பதால் அதை மாற்றி 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தவர் நம்முடைய கேப்டன். ஒரு தொண்டனுக்கு போய் சேரும் காசாக இருந்தாலும் அது செல்லாமல் இருக்கக்கூடாது என்று நினைப்பவர் விஜயகாந்த்," என்றார்.

- ஏ. ராம்
வீடியோ: கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ