Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஜல்லிக்கட்டு நடத்த அதிமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை’ மு.க.ஸ்டாலின் காட்டம்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டாகவும், தமிழர் கலாசாரத்தின் அடையாளமாகவும் தொன்று தொட்டு திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம் 'ஜல்லிக்கட்டு ஒரு நிகழ்ச்சிதான். மதம் தொடர்பானது அல்ல' என்று கூறி இந்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தியைப் படிக்கும்போது, ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர் கலாசாரத்தின் ஓர் அங்கம் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆணித்தரமாக எடுத்துக் கூற அதிமுக அரசு தவறிவிட்டது என்பதைத் தான் இது வெளிப்படுத்துகிறது. இன்று, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாக தமிழர்களின் கலாசாரத்துடனும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையுடனும் பிண்ணிப் பிணைந்துள்ள இந்த வீர விளையாட்டு பற்றிய முக்கிய குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள் போன்றவற்றை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வைத்து வாதாட அதிமுக அரசு முற்றிலும் தவறி விட்டது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2009-ம் ஆண்டு 'ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம்' நிறைவேற்றி, அந்த சட்டத்தின் கீழ் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி சாதனைப் படைத்ததை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், அந்த விளையாட்டில் பங்கேற்கும் இளைஞர்களும் நன்கு அறிவர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து வழங்கிய தீர்ப்பில், 'ஏற்கெனவே மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் இருப்பதால் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் அரசியல் சட்டப் பிரிவு 254(1)க்கு விரோதமானது', என்றுதான் தீர்ப்பளித்ததே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவே கூடாது என்று கூறவில்லை என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணை வந்தபோது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் சிறப்பு அம்சங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு சுட்டிக்காட்டத் தவறியது போல், இப்போது தமிழக மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்திருக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் வரலாற்று ஆதாரங்களையும் அதிமுக அரசு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு எடுத்து வைக்கவில்லை. ஆகவேதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு ஆரம்பம் முதலாகவே ஆர்வத்துடனும், அக்கறையுடனும் கையாளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
வருகின்ற பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பது இளைஞர்களிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்களும் 'நிச்சயம் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்' என்று தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்கள். ஆனால் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ளதாகத் தெரியவில்லை. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் கூட ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏற்ற வகையில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இல்லை. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என்றும், அதற்கு இங்குள்ள அதிமுக அரசும் மகிழ்ச்சியுடன் துணை போகிறது என்றும் மக்கள் எண்ணுகிறார்கள்.

ஆகவே மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உரிய சட்டத்தை இந்த குளிர் காலக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஏற்கெனவே கழக ஆட்சியில் கடந்த 2009-ல் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்கிறது. அந்த சட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்பட்டால் அதையும் சேர்த்து, புதிய ஜல்லிக்கட்டு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியோ அல்லது ஏற்கெனவே இருக்கின்ற விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்தோ வருகின்ற தைப் பொங்கலன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி இங்குள்ள அதிமுக அரசும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. மத்திய அமைச்சர்களும் இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து, தமிழர்களின் எண்ணம் ஈடேற உறுதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close