Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.டி.எம். இயந்திரத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி! இது கோவை ஸ்டைல்

கோவை : கோவையில் பணம் நிரப்பப்படாமல் காட்சியளிக்கும் ஏ.டி.எம். மையத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தை பெண்கள் நடத்தினர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும், இரு தினங்களுக்கு பின்னர் ஏ.டி.எம். மையங்களில் பண விநியோகம் நடக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் 10 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

500, 1000 ரூபாய் போன்ற பெருமதிப்பு கொண்ட நோட்டுகளே பெருமளவில் புழக்கத்தில் இருந்த நிலையில், 100 ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலும் பணமின்றியே ஏ.டி.எம். இயந்திரங்கள் இருக்கின்றன. இதனால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் செயல்படாத ஏ.டி.எம். மையங்கள், உயிரற்று கிடக்கிறது என்பதை சித்தரிக்கும் வகையில் கோவையில் பெண்கள் ஏ.டி.எம். மையத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர்.  கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம். மையத்துக்குச் சென்ற அகில இந்திய மாதர் சங்கத்தினைச் சேர்ந்த பெண்கள், ஏ.டி.எம். இயந்திரத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மத்திய அரசு போக்கினை கண்டிக்கும் வகையில் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அமிர்தம் கூறுகையில், "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் திண்டாடி வருகிறார்கள். எந்த முன் ஏற்பாடும் இல்லாமல் செயல்பட்டது, அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இந்த அஞ்சலி, ஒப்பாரி போராட்டத்தை நடத்தியுள்ளோம்," என்றார்.

- சே.சின்னதுரை,

படங்கள் : தி.விஜய்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ