Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 பேரை கொலை செய்த 'சப்பாணி' மன நோயாளியா? சிறைத்துறை சிக்கல்

திருச்சி : திருச்சியில் 8 பேரை கொன்றதாக கைது செய்யப்பட்ட சப்பாணி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கைதானவர் மனநல நோயாளியாக இருக்கலாம் என சிறைத்துறை தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பகுதியில் 8 பேரை கொலை செய்த வழக்கில், சப்பாணி என்பவரை திருவெறும்பூர் போலீஸார் கைது செய்தனர். தங்க நகைக்காக இந்த கொலைகளை சப்பாணி செய்ததாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் கைதான சப்பாணி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் தன்னை தனிமைச்சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக திருச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சப்பாணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஷகிலா உத்தரவின் பேரில் சப்பாணியின் வழக்கறிஞர் பொன்முருகேசன் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஷகிலா, சப்பாணி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க சிறைத்துறை கண்காணிப்பாளர், மருத்துவருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மதன், சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் அன்பழகன், சிறை மருத்துவர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அப்போது, 'சப்பாணி மனநலம் பாதிக்கப்பட்ட நபராக நடந்துகொள்வதால், அவர் நலன்கருதியே அவரை தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். அவரை முழுமையாக பரிசோதனை செய்யவேண்டும். அதற்கான  வசதிகள்  சிறையில் இல்லை என்பதால், திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்திட அனுமதி  வழங்க வேண்டும்," என சிறைத்துறை அதிகாரிகள் கேட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். சப்பாணிக்கு மருத்துவ பரிசோதனை நடக்குமா என்பது அன்று தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. நகைக்காக கொலை நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சப்பாணிக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சி.ய.ஆனந்தகுமார்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ