Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்த மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்களிடம் இருந்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது, கூட்டுறவு சங்கங்களுக்கு நேரடியாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வழங்க அனுமதி இல்லை என தெரிவித்துவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் பணப் புழக்கம் இல்லாமல் முடங்கியது. இந்த விவகாரத்தில் அரசின் பாராமுகத்தை கண்டித்து கடந்த 15-ம் தேதி முதல் கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, "ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு நேரடியாக பணத்தை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முடங்கியுள்ள கூட்டுறவு வங்கிகள் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

அதேபோல், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழநிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததின் காரணமாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்கள் பாதிக்கும் வகையில் விரல்களில் மை வைக்கவேண்டும் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு புதிய அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது நிலவி வரும் பணப்பற்றாக்குறை நிலையானது. தொடர்ந்து நீடித்தால், ஏழை நடுத்தர மக்களின் நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினார். மேலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக மாற்று வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

- செய்தி மற்றும் படங்கள்: க.சதீஷ்குமார்


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ