Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும்!

 

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி  வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் மீது சிங்களப்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் இரு மீனவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களப்படையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை அருகில் இந்திய எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த சிங்களப்படை சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாத நிலையில், எந்தவிதமான ஆத்திரமூட்டும் நிகழ்வுகளும் நடக்காத நிலையில் சிங்களப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் ஏதோ சதி இருப்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.


1980-ம் ஆண்டுகளின் தொடக்கம் முதல் 2011-ம் ஆண்டு வரை சிங்களப்படையினர் நடத்திய தாக்குதலில் 800 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சுடு நடத்தப்படுவதில்லை. மாறாக, தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. கைது செய்யப்படும் மீனவர்களை 3 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யும் போதிலும், அவர்களின் படகுகளை திருப்பித்தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. இன்றைய நிலையில் கூட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிங்கள அரசின் பாதுகாப்பில் உள்ளன. அவற்றை விடுவிக்க இலங்கை அரசு மறுக்கிறது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள்  இடையிலான பேச்சுக்கள் கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடைபெற்றன. இந்த பேச்சுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, 'தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாலும் அவர்கள் மீது இனி எந்த தாக்குதலும் நடத்தப்படாது' என்று உறுதி அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற மீனவர்கள் பிரச்னைக்கான இந்திய - இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்திலும் இதே நிலைப்பாட்டை இலங்கை அமைச்சர் தெரிவித்தார். மேலும், இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பது, மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிப்பது  ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாட்டு அமைச்சர்களும் முடிவு செய்தனர்.

மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதற்காக இரு நாட்டு அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காகவே, இலங்கை அமைச்சரின் வாக்குறுதியையும் மீறி தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தோன்றுகிறது. பாகிஸ்தானைப் போலவே சிங்கள ராணுவமும் பேரினவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்ட நிலையில், மீனவர்கள் பிரச்னை தீரக்கூடாது என்பதற்காக இலங்கை கடற்படையினர் இவ்வாறு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதல் இந்திய அரசின் இறையான்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தகைய தாக்குதல்கள் தொடர அனுமதிக்கப்பட்டால் அது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து இந்தியாவின்  கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இத்தாக்குதலுக்கு காரணமான இலங்கை சிங்களப்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இண்டர்போல் உதவியுடன் கைது செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களைப் படையினரின் தாக்குதலில் காயமடைந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் மீனவர்கள் அரவிந்த், தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close