Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடுபொருளுக்கு பணமில்லை... கூட்டுறவில் குந்தாங்கூறு! கதிகலங்கி நிற்கும் விவசாயிகள்


திருச்சி : ஏற்கனவே கடுமையான நெருக்கடிகளில் இருந்து வரும் விவசாயிகள், ரூபாய் நோட்டு விவகாரத்தால் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வராதா காவிரி, கருகும் பயிர்கள் என ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளே விவசாயிகளை படுத்தி எடுத்து வந்த நிலையில், இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு விவசாயிகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது. விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை வாங்க முடியவில்லை. கூட்டுறவு சங்கத்தில் பணத்தட்டுப்பாடு, வேலையாட்கள் கூலி கொடுக்க முடியவில்லை என விவசாயத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு.

காவிரியில் தண்ணீர் வராததால் முதல் சாகுபடி வீணாய் போன நிலையில், அடுத்தடுத்து பிரச்னைகள் மட்டுமே வந்தால் என்ன தான் செய்ய முடியும் என தவிக்கிறார்கள் விவசாயிகள். தங்களுக்கு உள்ள பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவும் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன்  நம்மிடம் பேசினார். "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் முற்றிலுமாக முடங்கி போய்விட்டது. 4,474 கூட்டுறவு கடன் சங்கங்கள் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள்  மற்றும் அவற்றின்  813 கிளைகள் மூலம் பயிர் கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தும்  விவசாயிகள் உரங்கள் விதைகளுக்காக கடன் வசதி பெற முடியவில்லை.

இதனால் விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராம பொருளாதாரம் மொத்தமாக முடங்கி போய்விட்டது. வணிக வங்கிகள் மூலம் விவசாய கடன் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதனால் மத்திய அரசு மற்றும்  வணிக வங்கிகள்,  உடனடியாக விவசாய கடன்களை வழங்க வேண்டும்," என்றார்.

இது போக விவசாயிகள் இடுபொருட்களை பெற முடியவில்லை. விளை பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. விவசாயத்தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என ஏகப்பட்ட பிரச்னைகளால் விவசாயத்தொழில் முடங்கியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியம் என்பதை அரசு உணரட்டும்.

- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close