Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தங்கம் இருக்கு வாங்கத்தான் ஆளில்லை'! வெறிச்சோடிய நகைக்கடைகள்

           

ந்தியா முழுக்க செல்லாத 500,1000 ரூபாய் தாள்களை மாற்ற பொதுமக்கள் அலையலையாய் வங்கிகளை முற்றுகையிடுவதால், தங்க நகை ஷோரூம்களில் வியாபாரம் கடும் சரிவில் இருப்பதாகப் புலம்புகிறார்கள் நகைக்கடை அதிபர்கள்.

கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500,ரூ.1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு மாற்றாக வங்கிகளில் புதிய ரூ.2000 நோட்டுகளை மக்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அன்று நள்ளிரவு 12 மணி வரை இந்தியாமுழுக்க 600 மடங்கு அளவிற்கு தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள்,வைர நகைகள் விற்பனை ஆயின. ஆனால் அடுத்த நாள் காலை முதல் இன்று வரையில் தங்கம் விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது என்கிறார்கள் நகைக்கடை அதிபர்கள்.

நகைக்கடைகளில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை என்பதால், அவற்றைச் சேமித்து வைத்திருந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.மணப்பெண்கள் வீட்டார் சீர் வரிசை,நகைகள் கொடுக்கமுடியாமல் திணறுகிறார்கள். பல இடங்களில் கல்யாண வீடுகள் கலவர வீடுகளாக மாறிவிட்டன. பலரின் திருமண நிகழ்வுகள் தள்ளியும்போயுள்ளன.

ரூபாய் பிரச்னை 10 நாளைக் கடந்தும் தீரவில்லை என்பதால் சென்னை,மதுரை,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள நகைக்கடைகளின் விற்பனை நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.மாலை 7 மணிக்கே பல இடங்களில் நகை ஷோரூம்கள் மூடப்படுகிற நிலைமை இருக்கிறது.இந்நிலையில்,தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.22,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.2,830க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.2,984க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல்,வெள்ளியும் கிராமுக்கு 80 காசு குறைந்து ரூ.43.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.770 குறைந்து ரூ.40,825க்கு விற்பனை செய்யப்படுகிறது.        

வரலாறு காணாத இந்த வணிகச் சரிவு குறித்து மெட்ராஸ் தங்க நகை மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜெ சலானியிடம் கேட்டோம். அவர் கூறுகையில்,"சென்னை மட்டுமில்லை, கோவை,மதுரை சேலம் என்று தமிழ் நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலும் நகைகள் விற்பனைக்  குறைந்துள்ளது.கடைகளின் விற்பனை நேரம் சராசரியாக 3 முதல் 5 மணிநேரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும்  மாலை 7 மணிக்கே கடைகள் அடைக்கப்படுகின்றன.20% அளவுக்கே நகை விற்பனை நடந்துவருகிறது.வாடிக்கையாளர்கள் யாரும் ரொக்கப் பணம் எடுத்துவர முடியாத சூழல் இருப்பதால் வியாபாரம் பெரிய அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்துள்ளது.கிரெடிட் கார்டுகள்,டெபிட் கார்டுகள் மூலமே நகை வியாபாரம்  நடக்கிறது.அதுவும் குறிப்பிட்ட தொகைக்குத்தான்.பான் கார்டு அவசியம் என்பதால் அதுவும் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் கேட்டுப் பெறப்படுகிறது.

               

திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு நகைகள் வாங்குவது சுத்தமாக நின்றுபோயுள்ளது.நகைச் சீட்டுப் போட்டு அதில் பணம் கட்டியிருந்தவர்கள் மட்டுமே குறைந்த அளவுக்கு நகைகள் வாங்குகின்றனர். இதனால் வியாபாரம் 'டல்' அடிக்கிறது.இப்போது தங்க நாணயங்கள் விற்பனையும் சுத்தமாக இல்லை. பொதுமக்களுக்கு பண நெருக்கடி நீடிப்பதால் விற்பனையில்லாத நகைக்கடைகள் அவ்வப்போது மூடியும் வைக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மதியத்திற்கு மேல்தான் கடைகளையே திறக்கிறார்கள்.மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரைதான் வியாபாரம் நடக்கிறது.மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இதுதான் நிலைமை.சென்னையில் காலை 9 மணிக்குத் திறக்கவேண்டிய கடைகள் ஷோரூம்கள் 11 மணிக்குத்தான் திறக்கப்படுகின்றன.இரவு 9.30 மணிக்கு மூடவேண்டிய நகைக்கடைகள் 7 மணிக்கே மூடப்படுகின்றன.

சேலம்,கோயமுத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளின் விற்பனை நேரத்தில் மூன்று முதல் 5 மணிநேரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.இன்னும் வியாபாரம் டல் அடித்தது என்றால் சுத்தமாக விற்பனையே நடக்காத சூழல் வந்துவிடும்." என்று தெரிவித்தார்.

தங்கம் இல்லாத திருமணம்,விசேஷங்கள் நடக்கும் காலம் வந்துவிடும் போல இருக்கிறது.

- சி.தேவராஜன்

                                   

               

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close