Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இன்னும் எத்தனை பேர் சாகவேண்டும் பிரதமரே?' -கொதிக்கும் வங்கி ஊழியர்கள் 

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக ஏ.டி.எம் மையங்களிலும் வங்கி வாசல்களிலும் மக்கள் தவம் கிடக்கின்றனர். ' கடந்த பத்து நாட்களில் வங்கி ஊழியர்கள் உள்பட 40 பேர் இறந்துள்ளனர். டிசம்பர் இறுதிக்குள் இன்னும் எத்தனை சாவுகள் நிகழப் போகிறதோ?' என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் வங்கி ஊழியர்கள். 

மத்திய அரசு கடந்த 8-ம் தேதி, ' 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவித்தது. இதனால் அதிர்ந்து போன பொதுமக்கள் தங்கள் கையிருப்பில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்குப் படையெடுத்தனர். வங்கி ஊழியர்களுக்கும் விடுமுறையற்ற வேலைநாட்கள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பூட்டியே கிடக்கின்றன. அன்றாட செலவுகளுக்குப் பணமில்லாமல், பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பால், பெரும் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. மாறாக, வாராக்கடன்களை தள்ளுபடி செய்யும் அரசின் நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. "மருத்துவச் செலவு உள்பட அன்றாட குடும்பச் செலவுகளுக்குக்கூட பணத்தை மாற்ற முடியவில்லை. சில்லறை வர்த்தகம் முடங்கிக் கிடக்கிறது. தொடர் வேலைநாட்களால் வங்கி ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மனச் சோர்வு ஏற்பட்டுள்ளது" என ஆதங்கத்தோடு பேசினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். தொடர்ந்து நம்மிடம், 

"எது கறுப்புப் பணம் என்பதை எப்படி வரையறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வங்கிக் கணக்கில் சேரும் பணம் எல்லாம் கறுப்புப் பணம் என்று சொல்ல முடியாது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் சக்ரவர்த்தி சொல்வதைப் போல, 'அரிசியில் கல் இருந்தால், அதை எடுத்துவிட்டுத்தான் பயன்படுத்த முடியும். மாறாக, அரிசியைக் கொட்டிவிட முடியாது'. இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, பொதுமக்கள் மத்தியில் உயிர்ப்பலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது'"என வேதனைப்பட்டவர், "போபால், ஸ்டேட் வங்கிக் கிளையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தொடர்ந்து மூன்று நாட்களாக பணிக்கு வந்து கொண்டிருந்தார். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக, 13-ம் தேதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அதேபோல், பஞ்சாப்பில் மகள் திருமணத்துக்காக பணத்தை சேர்த்து வைத்திருந்த சுக்தேவ் சிங் என்பவர், பணத்தை மாற்ற முடியாத வேதனையில் இறந்துவிட்டார். ஒடிசா, சம்பல்பூரில் மருத்துவமனையில் பழைய ரூபாய்களை ஏற்காததால், இரண்டு வயது குழந்தை இறந்துவிட்டது. 

புனேவில், துக்காராம் என்ற வங்கி ஊழியர் 16-ம் தேதி மன அழுத்தத்தால் இறந்துவிட்டார். லக்னோவில் 10-ம் தேதி பழைய ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் இருந்து எடுப்பதற்காக விரைந்து சென்ற வாகனம், விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் இறந்தார்கள். மேலும், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பணத்தை எடுத்து வரத் தாமதம் செய்ததால், மது திவாரி என்ற பெண் கணவரால் கொல்லப்பட்டார். இப்படி நாடு முழுவதும் 40 பேர் வரையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். கறுப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல் என்று சொல்லிவிட்டு, அப்பாவி மக்கள் மீது அரசு துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நமது நாட்டில் 'ரா' உள்பட பல புலனாய்வு அமைப்புகள் உள்ளன. அவற்றின் உதவியோடு எங்கே கறுப்புப் பணம் அச்சடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

நாட்டின் மொத்தப் பணத்தில், '400 கோடி ரூபாய் அளவுக்கு போலியான ரூபாய்கள் இருக்கலாம்' என இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. இவ்வளவு குறைந்த தொகைக்காக, ஒட்டுமொத்த சாமானிய மக்களையும் வதைப்பது எந்த வகையில் நியாயமானது? இதுவரையில், வங்கி வாசல்களில் வரிசையில் நின்றதில் நமது மக்களின் நேரம் விரயமாகியிருக்கிறது. வங்கிகளின் அன்றாட பரிவர்த்தனைகள் அடியோடு முடங்கிப் போய்விட்டன. பொதுமக்களின் சேவைக்காகத்தான் வங்கி ஊழியர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களோடு சேர்ந்து அவர்களும் வதைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் வேதனையோடு. 

- ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close