Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்று தொகுதிகளில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசார வியூகம்...!?

பிரசாரம்

மிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், ஆகிய மூன்று தொகுதிகளில் இறுதி பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றி சுழன்று வாக்குசேகரித்தனர்.  புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் இறுதிக்கட்ட பிரசாரம் விறுவிறுப்பாக இருந்தது. அ.தி.மு.க வில் ஜெயலலிதாவின் பிரசாரம் இல்லாமலேயே அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் பிரசாரத்தை நடத்தினார்கள். அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யாமல், ஸ்டாலின் மட்டுமே பிரசார களத்தில் நின்றார். இறுதி பிரசாரத்தில் தலைவர்கள் என்ன பேசினார்கள்  தெரியுமா? தலைவர்களின் பிரசாரம் வருமாறு:

திருநாவுக்கரசர்திமுக வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  இறுதிக் கட்ட பிரசாரத்தில், ‘‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமானால் நாம் எதை செய்தாலும் மக்கள் நமக்கு விசுவாசமாக ஓட்டு போடுவார்கள் என்ற மமதை ஏற்படும். சட்டசபையில் மேஜையை தட்ட கூடுதலாக ஒருவர் செல்வார். அதே நேரத்தில் தி.மு.க.  வெற்றி பெற்றால், தொகுதிக்காக குரல் கொடுப்பார். கடந்த 2 மாதமாக மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா முதலில் கைநாட்டு வைத்தார். இப்போது கையெழுத்து போடுகிறார் என்கின்றனர். அதற்கும் மேலாக தொலைபேசியில் துக்கம் விசாரித்தார் என்கின்றனர். இதெல்லாம் உண்மையில் நடந்திருந்தால் மகிழ்ச்சியே. இந்த அரசின் தலைமைச் செயலாளரோ, நிதி அமைச்சரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ கடந்த 2 மாதத்தில் முதல்வரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் மருத்துவமனை வாசல் வரை மட்டும் செல்லும் பலர், அவர் அப்படி இருக்கிறார், இப்படி இருக்கிறார் என்று பேட்டி கொடுக்கின்றனர். இதை மனதில் வைத்து தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்” என்று பிரசாரம் செய்தார்.
ராமதாஸ்

தி.மு.க -அ.தி.மு.கவிற்கு போட்டியாக நாங்களும் இருக்கிறோம் என்று களத்தில் நிற்கும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “பெண்கள், அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவும் திமுகவும் தெருவுக்கு, தெரு மதுபான கடைகளைத் திறந்து வைத்து அனைவரையும் குடிகாரர்களாக்கி வருகிறது. சட்டசபையில் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் பேசாமல் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகின்றனர். சட்டசபையில் வேண்டுமானால், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், வெளியில் பா.ம.க மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. கடந்த தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, அவர்கள் போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் தலா 20 கோடி ரூபாயை இரண்டு கட்சிகளும் செலவு செய்தன. குறிப்பாக அன்புமணியை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்தார்கள். ஓட்டுக்கு தரும் பணத்தை வைத்துக்கொண்டு 5 ஆண்டுகள் வாழ முடியுமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். பணத்திற்கு மயங்காமல் பா.ம.க-வுக்கு வாக்களியுங்கள்.’’ என்று வலியுறுத்தினார்.
தமிழிசை

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பி.ஜே.பி. இந்த தேர்தலில் வெற்றி பெற முடியா விட்டாலும் கணிசமான வாக்குகளைக் கைப்பற்ற வேண்டும் என்று களத்தில் நிற்கிறது. அந்த கட்சியின் மாநில தலைவர்  டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், ‘‘தமிழகத்தில் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்ற நோக்கத்தில் பிஜேபி களத்தில் நிற்கிறது. ஆனால், வாக்குகளை பெறுவதற்காக, 3 தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதைப்பற்றியெல்லாம், புகார் வரவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. நாங்கள், புகார் கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. இருப்பினும் மக்கள் மாற்றத்தை தரவேண்டும்’’ என்று பேசி ஓட்டு கேட்டார்.கடந்த முறை சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுஇருந்த தே.மு.தி.க சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாததால், இந்த மூன்று தொகுதியில் ஒரு இடத்திலாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ‘‘அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளும் ஓட்டுக்கு பணத்தை கொடுத்து விட்டனர்.

பின்னர் எதற்காக இந்த தேர்தலை நடத்த வேண்டும்? நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்தோம் என்று அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் சொல்லி வருகிறார்கள். கடந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களிடம் கேட்டுதான் முடிவு செய்தோம். நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். ஒரு இடத்தில் கூட நாங்கள் வெற்றி பெறவில்லை. அதனால், அந்த இரண்டு கட்சிகளும் எங்களுக்கு ஒன்றுதான். அதனால், தான் இந்த தேர்தலில் தனித்து நிற்கிறோம். நாங்கள் எப்போதும் மக்களுடன் தான் கூட்டணி” என்று பழைய பல்லவியை மீண்டும் பாடியுள்ளார்.

சீமான் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ‘‘மக்களிடம் நன்மதிப்பைப் பெறாத அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கின்றன. காவிரி நதி நீர் பிரச்சனையில் நாட்டை ஆண்ட, ஆளுகின்ற இரண்டு தேசியக் கட்சிளும் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அந்த கட்சிகளுக்கு கொள்கை, தத்துவம் எதுவும் கிடையாது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது குரல் கொடுக்காத இவர்கள், இப்போது ஓட்டுக்காக ஓடி வருகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க மீது குற்றம்சாட்டும் பிஜேபி, புதுச்சேரியில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது ஏன்? பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது தேச துரோகம்’’ என்று காட்டமாகப் பேசினார்.
    இவர்கள் களத்தில் நின்று பிராச்சாரம் செய்தார்கள் என்றால், சென்னையில் இருந்தபடியே இரண்டு தலைவர்கள் வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார்கள். ஒருவர் தமிழக ஜெயலலிதாமுதல்வர் ஜெயலலிதா.மற்றொருவர் கருணாநிதி. இருவரும் அறிக்கை வாயிலாக வாக்குகள் கேட்டுள்ளார்கள்.

ஜெயலலிதா  ‘‘உலகம் வியக்கும் உன்னதத் திட்டங்கள் பலவற்றை தமிழகத்தில் அறிமுகம் செய்து  மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடு பட்டு வரும் எனது தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு வாக்காள பெருமக்களாகிய நீங்கள் உங்களது அன்பையும் ஆதரவையும் தர வேண்டும். ஓய்வு நான் அறியாதது. உழைப்பு என்னை நீங்காதது. அ.தி.மு.க வெற்றியை நாளைய சரித்திரம் சொல்ல வேண்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என நமது வெற்றி எட்டுத்திக்கும் எதிரொலிக்க வேண்டும்.’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். அறிக்கைவிட்டு வாக்குள் கேட்டுள்ளார்.
 

தி.மு.க தலைவர் கருணாநிதியோ “‘இந்த தேர்தல் நேரம் பார்த்து மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள காரணத்தால், தேர்தல் பணியாற்றும் கழகத் தோழர்களுக்கு உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலையில் திண்டாடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க-வினர், அமைச்சர்களின் தலைமையில் தாங்கள் குவித்து வைத்துள்ள தொகையை ஆடம்பரமான முறையிலே செலவழித்து குதூகலம் கொண்டாடி வருகிறார்களாம்.

கருணாநிதிஎப்படியாவது வெற்றியை எட்டி விட வேண்டும் என்ற வெறி தலைக்கேறி ஒருவரையொருவர் தாக்கிப் பேசி தரக்குறைவான வார்த்தைகளை வீசிட நேரிட்டாலும், அதை சகோதரப் பாசத்துடன் சகித்துக் கொண்டு களத்தில் தோற்காமல் நிற்க வேண்டும். இந்த தேர்தல்கள் மூலம், செயல் திறனற்ற அ.தி.மு.க ஆட்சிக்கு நல்லதொரு பாடத்தைத் தந்து நல்வழிப்படுத்தப் பாடுபட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

புயலுக்கு பின் அமைதி என்பார்களே.. அதுபோல மூன்று தொகுதிகளிலும் பிராச்சாரம் ஓய்ந்து அமைதி நிலவுகிறது.

 

-எஸ்.முத்துகிருஷ்ணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close