Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் காணிக்கைகளுக்கும் அதிரடி கட்டுப்பாடு! - அரசின் கெடுபிடி

சில்லறை தட்டுப்பாட்டை போக்க தமிழக கோயில்களில் வசூலாகும் காணிக்கை பணம் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு இந்து சமய அறநிலையைத் துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

கடந்த 8-ம் தேதி இரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து  கடந்த 11 நாட்களாக நாடெங்கிலும் பணப்பரிவர்த்தனை பெரியளவில் முட‌ங்கியதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பழைய  ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு பெரும்பாலும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளையே வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன. இதனால், இதுவரை சந்திக்காத சில்லறை தட்டுப்பாட்டை, நம் தேசம்  சந்தித்து வருகிறது.

இந்தியா முழுவதும் சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க, மத்திய அரசால் மாநிலத்துக்குத் தகுந்தார்போல் மாற்று யோசனைகள் வழங்கப்பட்டது.  அதன்படி, தமிழ்நாட்டில் சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க தற்காலிகமாக மாற்று வழி முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையைத் துறை கட்டுபாட்டில் உள்ள சுமார் 38,630 கோயில்களுக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  சென்னை கபாலீஸ்வரர் கோயில், பழனி முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் என இருபதுக்கும் மேற்பட்ட‌ கோயில்கள் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றன.  தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கக்கூடிய கோயில்கள் என சுமார் 320 கோயில்களும், 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 662 கோயில்களும் உள்ளன. சரியாக 3,571 கோயில்களுக்கு, ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை வருமானம் வருகின்றன. அதேபோல், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் தரக்கூடிய கோயில்கள் என 34,077 கோயில்கள் உள்ளன.

இந்த கோயில்களில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மற்றும் இதர வருமானத்தின் அடிப்படையில் வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வங்கியில் செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மத்திய அரசின் புதிய அறிவிப்பால், இதுவரை இல்லாத வகையில் தற்போது சில்லறை தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. அதனால், தமிழகத்தில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க புது நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும், தினந்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு, சில்லறை காசுகள் வரை வங்கியில் செலுத்த வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் வாரம் ஒரு முறைக்கும், 10 நாட்களுக்கு ஒரு முறைக்கும் பணம் எண்ணப்பட்டு வங்கியில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்துக் கோயில்களிலும் உள்ள எல்லா உண்டியல் பணங்களும் எண்ணப்பட்டு வங்கியில் செலுத்தியதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையைத் துறை அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை மூலம் சில்லறை தட்டுப்பாட்டை கணிசமான அளவில் குறைக்க முடியும் என்று வங்கி அதிகாரிகளும், இந்து சமய அறநிலையைத் துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்து சமய அறநிலையைத் துறையின் இந்த அதிரடி அறிவிப்பால், அரசுக்கு இதுவரை தெரியாமல் திரை மறைவில் நடந்த சில பண பரிவர்த்தனைகளும் தற்போது முடங்கும் நிலையில் உள்ளன. முக்கியமாக, குறிப்பிட்ட சில கோயில்களில், கோயில் பணம் மறைமுகமாக ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல வழிகளில் ரொட்டேசனுக்கு விடப்பட்டு வந்தன. அதேபோல், கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் சில்லறை காசுகளை, உள்ளூர் சிறு வணிகர்களிடம் தினந்தோறும் கணிசமான தொகை கமிஷனாக பெற்றுக்கொண்டு இதுவரை மாற்றப்பட்டு வந்தன. இதுபோன்ற திரைமறை பண பரிவர்த்தனைகள் தற்போது முற்றிலுமாக முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் உண்டியல் பணம் எண்ணும்போது சி.சி.டி.வி கேமரா மூலமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

- ரா.அருள் வளன் அரசு 

எடிட்டர் சாய்ஸ்