Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்லகண்ணு முதல் குஷ்பு வரை...!  - எவ்வளவு பணத்தை எப்படி மாற்றினார்கள்? #VikatanExclusive

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அன்றாட செலவுகளைச் சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பது ஒருபுறம் இருந்தாலும், முழுவதுமாக சில்லறை வர்த்தகம் முடங்கிப் போய் கிடக்கிறது. ' ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால், அன்றாட செலவுகளுக்கே சிரமப்படுகிறோம்' என்ற குரல்களும் அரசியல்வாதிகள் மட்டத்தில் இருந்து வருகிறது. 

தமிழக அரசியலை பரபரப்பாக நகர்த்திக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களிடம், ' உங்களிடம் இருந்த செல்லாத நோட்டுகளை எப்படி மாற்றினீர்கள்?' என ஒற்றைக் கேள்வியை முன்வைத்தோம். 

நல்ல கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): தினந்தோறும் வீட்டுக்கு வரும் செய்தித்தாள்களுக்கு சந்தா செலுத்துவது, கட்சி அலுவலகம் செல்வது ஆகியவற்றுக்கு மட்டுமே பணம் தேவைப்படுகிறது. என்னிடம் ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் பழைய நோட்டு இருந்தது. அதை தோழர் ஒருவரிடம் கொடுத்து, பத்து 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றிவிட்டேன். மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. சின்னச் சின்ன ஓட்டல்களில் கூட்டமே இல்லை. பணப் புழக்கமே இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். 

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி): மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட மறுநாளில், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சிலர். புதிய தாள்களை எனக்குக் கொடுத்தார்கள். அந்த வகையில் எட்டாயிரம் ரூபாய்கள் கிடைத்தன. மொத்தம் 12,500 ரூபாய் என்னிடம் இருந்தது. வங்கிக்குச் சென்று 4,500 ரூபாய் வரையில் மாற்றினேன். இனி வங்கிகளில் காசோலை கொடுத்து மாற்றலாம் எனச் சொல்கிறார்கள். இனி வரும் நாட்களை அப்படித்தான் ஈடுகட்ட வேண்டும். 

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி):  என் பையன் ஊரில் இருந்து வந்து, நான்காயிரம் ரூபாய் மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த ஒரு வாரத்தைக் கடத்திவிட்டோம். காலையில் வாக்கிங் போகும்போது செய்தித்தாள், காய்கறிகள், பால் வாங்குவது வழக்கம். இதற்குத்தான் பணம் தேவைப்படுகிறது. நான்காயிரம் ரூபாய் இருந்ததால், நிலைமைகளை ஓரளவு சமாளிக்க முடிந்தது. இன்று வங்கியில் இருந்து பணத்தை எடுப்பதற்காக என்னுடைய மனைவி செல்கிறார். பணத்தை எடுத்துவிட்டால், அடுத்த வாரம் எளிதாக இருக்கும். இல்லாவிட்டால், நிலைமை கொஞ்சம் சிக்கல்தான். 

குஷ்பு (அகில இந்திய செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்):  வங்கிக்குச் சென்றால் 2 ஆயிரம் ரூபாய்தான் தருகிறார்கள். இதுவரையில் எட்டாயிரம் ரூபாய்தான் கைக்கு வந்திருக்கிறது. என்னால் சமாளிக்கவே முடியலை. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. வங்கியில் செக் வாங்க மறுக்கிறார்கள். காய்கறி வாங்கப் போனால், 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைப்பதில்லை. பெட்ரோல் போடப் போனால்கூட இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டை முழுக்க செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு சிரமம் வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. 

தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கம்): என்னுடைய கையிருப்பில் எந்தப் பணமும் இல்லை. தேவைகள் மிகவும் குறைவு என்பதால், சிரமத்துக்கு ஆளாகவில்லை. என் மனைவியிடம் எட்டு 500 ரூபாய் தாள்கள் இருந்தன. அதில், இரண்டு நோட்டுகளை பெட்ரோல் போடுவதற்குக் கொடுத்துவிட்டேன். மீதமிருந்த நோட்டுகளில் 4 நோட்டுகளை என்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டேன். இன்னும் இரண்டு நோட்டுகள் இருக்கின்றன. மருந்து உள்பட அத்தியாவசியத் தேவைகளுக்கு வங்கி கார்டைப் பயன்படுத்துகிறேன். ஏ.டிஎம் சென்று 1,700 ரூபாய் எடுப்பதற்காக பட்டனை அழுத்தினேன். 'இரண்டாயிரம் மட்டும்தான் வரும்' என்றார்கள். இப்போது அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு, அழகு பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (செய்தித் தொடர்பாளர், தி.மு.க): என்னிடம் பழைய 500, 1000 ரூபாய் என 25 ஆயிரம் ரூபாய் வரையில் இருந்தது. அதை அப்படியே வங்கிக் கணக்கில் போட்டுவிட்டேன். வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு முதலான பொருட்கள் கிராமத்தில் இருந்து வருகின்றன. காய்கறி, பால் போன்றவை வாங்குவதற்குத்தான் பணம் தேவைப்படுகிறது. காருக்கு டீசல் உள்ளிட்ட தேவைகளுக்கு வங்கிக் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்து கொண்டிருக்கிறேன். புத்தகங்களை வாங்குவதற்குத்தான் போதிய பணம் இல்லை.

நாஞ்சில் சம்பத் (அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர்): தஞ்சையில் இருந்தபோதுதான் இப்படியொரு அறிவிப்பு வந்தது. அப்போது என்னிடம் ஒரு ரூபாயும் இல்லை. அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, 500, 1000 என 25 ஆயிரம் ரூபாய் தந்தார்கள். அதைக் கையில் வைத்துக் கொண்டு அரவக்குறிச்சி வந்தேன். நேற்று வங்கிக்குச் சென்று வரிசையில் நின்றேன். என் கணக்கில் பணத்தைப் போட்டுவிட்டேன். அதன்பிறகு, என் மகனுக்கு தேர்வுக் கட்டணம் கட்ட 5 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்ற தகவல் வந்தது. உடனே வங்கியில், ' 5 ஆயிரம் கொடுங்கள்' என்றேன். '2 ஆயிரம்தான் தர முடியும்' என்றார்கள். 'இல்லாவிட்டால், உங்கள் மகனின் வங்கி புத்தகத்தை எடுத்துக் கொண்டு நேரில் வரச் சொல்லுங்கள்' என்றார்கள்.

அதற்கு அவகாசம் இல்லாததால், சென்னைக்கு வந்து நண்பர் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். நீதி, நியாயம்கூட இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 400 கோடி கள்ளப் பணத்துக்காக, 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதுப் பணம் அச்சடித்தவர்களைப் பற்றி என்ன சொல்வது? என்னுடைய பணத்தை நான் எடுப்பதற்கு என் கையிலேயே புள்ளி வைக்கின்றனர். இந்தப் பெரும் புள்ளிகளைக் காலம் சும்மா விடாது. திறக்கப்படாத ஏ.டி.எம் வாசலில், அது திறக்கும் என்ற நம்பிக்கையோடு ஏழை, எளியவர்கள் காத்து நிற்கும் கொடுமை கண்டு என்னுடைய குருதி சூடாகிறது. 

வழக்கறிஞர்.பாலு (பா.ம.க செய்தித் தொடர்பாளர்): கட்சிப் பணி, நீதிமன்றப் பணி, ஊழியர்களின் அன்றாட தேவைகள், டீசல், சாப்பாடு செலவு என நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படும். தொடக்கத்தில் கையில் இருந்த ரூபாய்களை வைத்துக் கொண்டு சமாளித்துவிட்டேன். வங்கிகளில் பணத்தைப் போட மட்டுமே முடிகிறது. பணத்தை எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ