Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வலியுறுத்தல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடுகள் நடப்பதால், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்  ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பேராசிரியர் பணியிட நியமனங்களில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், இப்பணியிடங்களுக்காக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இப்பல்கலைக்கழகத்தில் 54 உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், 2016 பிப்ரவரியில் துணை வேந்தராக பேரா. பாஸ்கர் பொறுப்பேற்றவுடன் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பும் நடைமுறை துவங்கியது. முதல் கட்ட நியமனங்களில் ஐ.ஐ.டி, எம்.ஐ.டி.எஸ். போன்ற பிற பல கல்வி நிலையங்களில் பயின்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக் குறைந்த நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்கட்ட நியமனங்களுக்கான நேர்காணல் முடிந்தவுடன் அவசரமாக 2.11.2016 ஆட்சிக்குழுவைக் கூட்டி அப்பணியிட நியமனங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நேர்காணலுக்குப் பிறகு அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக 11.11.2016 நடைபெறவிருந்த ஆட்சிக்குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்நிலையில், தகுதி குறைந்த ஆசிரியர்களை நியமிப்பது உயர்கல்வியின் தரத்தையும் சமூக நலனையும் பாதிக்கும். எனவே பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் இப்பிரச்னையில் தலையிட்டு முதல் கட்டமாக நடந்துள்ள நியமனங்களை ரத்து செய்வதோடு, அடுத்தடுத்து நடைபெற்றுள்ள நேர்காணல்களையும் ரத்து செய்து விட்டு ஊழல்மயமான மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இந்த நியமனங்களின் மீது பதவியிலிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ