Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது தமிழக அரசு: ராமதாஸ்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான மத்தியஅரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET)குறித்த மாணவர்களின் ஐயங்களும், குழப்பங்களும் இன்னும் தீரவில்லை. இக்குழப்பங்களைத்  தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவும் குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பார்த்தால், வரும் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இத்தேர்வு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய நிலைமை. அதை முறியடிக்க வேண்டும் என்பது தான் நமது தேவை. அதைவிடுத்து மாணவர்களுக்கு அச்சமூட்டும் செயல்களில் அமைச்சர் ஈடுபடக் கூடாது. மாறாக, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்ட வல்லுநரை அமர்த்தி வாதிட வேண்டும். தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீடிக்கலாம். எனினும், தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசே நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போலவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வகை செய்யப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியாக வலியுறுத்துவதுடன், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடர வேண்டும். இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தமிழக கட்சிகளும் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ