Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அனைவரையும் அரவணைக்கிறாரா ஸ்டாலின்?!’ - கலங்கிய கருணாநிதி 

தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஜெயலலிதா இல்லாமலேயே, மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டது. 'தேர்தல் பிரசாரங்களில் அனைவரையும் அரவணைத்துச் சென்றிருக்கலாம்' என தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் ஆதங்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார் கருணாநிதி. 

அ.தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்கள் உள்பட அனைத்து மாவட்டச் செயலாளர்களும் களமிறங்கி, மூன்று தொகுதி தேர்தலையும் கலகலக்க வைத்துவிட்டார்கள். தி.மு.க.வைக் காட்டிலும் பல மடங்கு பணபலத்தோடு ஆளுங்கட்சி களமிறங்கியது. 'தோற்றுவிட்டால் அமைச்சர் பதவி பறிபோகும்' என்ற அச்சத்திலேயே அமைச்சர்கள் பணத்தை வாரியிறைத்தார்கள். அதேநேரம், தி.மு.க தரப்பில் புதிதாக எந்த உற்சாகமும் இல்லை. தி.மு.க தரப்பில் களமிறங்கிய வேட்பாளர்களில் அரவக்குறிச்சி கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டவர்கள், பெரிதாக செலவு செய்யவில்லை என்ற வருத்தம் உடன்பிறப்புகள் மத்தியில் உலா வருகிறது. திருப்பரங்குன்றத்தில் டாக்டர்.சரவணனிடம் கட்சிக்காரர்கள் பணம் கேட்டு நெருக்கடி தருவதாகக் கிடைத்த தகவலால், கட்சிக்காரர்களைக் கடிந்து கொண்டார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். ' மூன்று தொகுதிகளிலும் கடந்தமுறை வாங்கியதைவிட, வாக்கு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டால் மாவட்டம், நகரம், ஒன்றியம் என அனைவரும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' எனவும் கட்சிக்காரர்களை எச்சரித்தார் அவர். 

"மூன்று தொகுதி தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடியலாம் என்ற தகவலால், கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார் தலைவர். உடல்நிலையில் பூரண குணம் அடைந்துவிட்டாலும், மனதளவில் சற்று சோர்வாக இருக்கிறார். குறிப்பாக, கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் இருக்கிறது" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர், அவர் நம்மிடம், "கடந்த சில நாட்களாக தன்னை சந்திக்க வருபவர்களிடம், 'கட்சி நிர்வாகிகளுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் தலைமையோடு சிலர் முரண்பட்டாலும் அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் அண்ணா தனிச் சிறப்போடு விளங்கினார். அதே பாணியைத்தான் இத்தனை ஆண்டுகாலம் நான் பின்பற்றி வருகிறேன்.

இந்தத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் பழனிமாணிக்கம் போன்றோரை, தேர்தல் பணியில் ஈடுபடுத்தியிருக்கலாம். அதேபோல், திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு தேர்தல் பணி வாய்ப்பை வழங்கியிருக்கலாம். முன்பு சாத்தான்குளம் இடைத் தேர்தலில் சமுதாய வாக்குகளை நோக்கி சிலரைக் களம் இறக்கியிருந்தால், டெபாசிட் பறிபோகும் அளவுக்கு நிலை கைமீறிப் போயிருக்காது. அதேநிலை, இந்தத் தேர்தலில் வந்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் சிலரை அரவணைத்துப் பிரசார வியூகம் வகுத்திருக்கலாம். ஸ்டாலின் அப்படிச் செயல்படவில்லை. அவர் அண்ணாவின் பாணியையும் பின்பற்றவில்லை. என்னுடைய பாணியையும் பின்பற்றவில்லை' எனக் கலங்கியிருக்கிறார் " என்றார். 

"தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதி தேர்தல்களும் ஸ்டாலினை முன்னிறுத்தியே நடந்தன. தலைவரை எந்த இடத்திலும் முன்னிறுத்தவில்லை. எப்போதும் போல் அவரிடம் இருந்து அறிக்கைகள் மட்டுமே வந்தன. எனவே, தேர்தல் முடிவின் சாதக, பாதகங்கள் அனைத்தும் பொருளாளரைச் சேர்ந்தது. அதேநேரம், ' கட்சியின் சீனியர்களை அரவணைத்துச் செல்வது, கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது' என கலைஞர் நினைக்கிறார். ஆனால், ' சிலரை அரவணைப்பதன் மூலம், மீண்டும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது' என்ற எண்ணத்தில் கண்டிப்பாக இருக்கிறார் ஸ்டாலின். அதை நோக்கியே அவருடைய பயணமும் அமைந்திருக்கிறது. இதனால் ஏற்படும் சில முரண்பாடுகளையும் அவர் பெரிதாக பொருட்படுத்துவதில்லை" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ