Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் இல்லாமல் திண்டாடப் போகிறதா வங்கிகள்?

த்திய  அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு, கிழிந்த 100 ரூபாய் நோட்டுகளுக்குக் கூட இப்போது மவுசு அதிகம் இருந்து வருகிறது. நாட்டின் பணப்புழக்கத்தில் சுமார் 85 சதவீதம் அளவு 500, 1000 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே இருந்தது. மீதம் இருந்த 15 சதவீதம் மட்டுமே 100 மற்றும் அதற்கும் குறைவான மதிப்பிலான நோட்டுகள். இந்த பதினைந்து சதவீத நோட்டுகளோடு, மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளும் தான் இப்போது மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் வங்கிகளிடம் 100 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளில் இருப்பு குறைந்து வருவதாக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு தகவல்கள் சென்றுள்ளன. நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் மட்டும் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கலாம் என்று சொல்லிருந்தாலும் வங்கிகள் கணக்கிட்டதை விட கூடுதலாக இப்போது  ரூபாய் நோட்டுகள் தேவைப்படுகிறது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் இன்று ஒரு நாள் மட்டுமே விநியோகம் செய்ய பணம் உள்ளது. நாளைக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் வந்தால் மட்டுமே மக்களுக்கு விநியோகம் செய்யலாம். குறிப்பிட்ட சில வங்கிகளில் 100 ரூபாய் நோட்டுகள் இப்போதே இல்லாமல் உள்ளது. சில இடங்களில், மிக மோசமான நிலையில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை எரிப்பதற்காக வைத்திருந்தார்கள். தற்போது அந்த நோட்டுகளையும் இப்போது விநியோகம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 2,000 ரூபாய் நோட்டுகள் தேவையான அளவுக்கு இன்னும் அடிக்கவில்லை. 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு இன்னும் வந்தே சேரவில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், இருப்பதை வைத்து இத்தனை நாட்களும் சமாளித்து வந்தோம். ஆனால் இப்போது நெருக்கடி அதிகரித்து விட்டதால், புதிதாக கரன்சி நோட்டுகள்  அதிகம் வராவிட்டால் நாளைக்கே, தமிழகத்தில் இருக்கும் பல வங்கிகள் பணம் இல்லை என்று சொல்லும் நிலை வரலாம்” என்கிறார்கள்.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, “ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை இன்னும் ஐம்பது நாட்களுக்குள் தீர்ந்து விடும்” என்றார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மத்திய அரசு திட்டமிடாமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரச்னை இப்போதைக்கு தீராது. அடுத்தாண்டு வரை தொடரும். இந்திய அளவில் இது பொருளாதாரப் பிரச்னையாக உருவாகும்” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இப்போது அவர் சொல்லியது போலவே வங்கி ஊழியர்கள் மத்தியில் பணத்தட்டுபாடு அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் தலைவர் தாமஸ் பிராங்கோவிடம் இது குறித்து கேட்டோம்.
“ இப்போது பாரத ஸ்டேட் வங்கியில் 100 ரூபாய்  80 கோடி அளவுக்கு தரப்பட்டு, அவை தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  ஆனால்  இது மக்களின் தேவைக்கு மிகக் குறைவாக இருக்கிறது. வரும் 25-ம் தேதி தான், புதிய  500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு வர உள்ளது. அதுவரை 100 , 2,000 ரூபாய்  நோட்டுகளை வைத்தே சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.  இது சிக்கலான நிலை தான்” என்கிறார் அவர்.

மக்களிடம் பணம் இல்லை என்று தான் வங்கிகளிடம் செல்கிறார்கள். அந்த வங்கிகளிடமே பணம் இல்லை என்றால் யாரிடம் செல்வது?

- அ.சையது அபுதாஹிர்.    

எடிட்டர் சாய்ஸ்