Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை பெருவெள்ளம்... எப்படி இருக்கிறது மக்கள் மனநிலை...? #OneYearOfChennaiFloods

.வெள்ளம்

சென்னை வெள்ளம் 2015-ம் ஆண்டில் மக்களை புரட்டிப் போட்டு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் மன நிலை எப்படி இருக்கிறது?
சென்னை நகருக்குள் அடையாறு ஆறு ஓடும் கரையில் உள்ள ஜாபர்கான் பேட்டை, மேற்கு சைதாபேட்டை, கோட்டூர்புரம் ஆகிய 3 பகுதிகள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஒரு ஆண்டு கடந்த நிலையில்  இந்த 3 பகுதிகளில் உள்ள மக்களின் மனதில் சென்ற ஆண்டின் மழை, வெள்ள பாதிப்பின் தாக்கம் எப்படி இருக்கிறது? அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.

வேறு கதி இல்லை

ஜாபர்கான் பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையை ஒட்டி  வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். பலர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட ஒரே ஒரு அறை மட்டும் உள்ள சின்ன வீடுகளில் வசிப்பவர்கள்தான். அடையாறு ஆற்றில் கடந்த ஆண்டு வந்த பெரு வெள்ளம் ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை வீடுகளையும் மூழ்கடித்துச் சென்றது. முதலில் வீடுகளைத் தொட்டு விட்டு வெள்ளம் ஓடியபோது இவர்கள் யாரும் அச்சப்படவில்லை. வீடுகளுக்குள்  இடுப்பளவு தண்ணீர் வந்த போதுதான் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அப்படியே போட்டு விட்டு சமுதாயக் கூடங்களில் தஞ்சம் புகுந்தனர். வெள்ளம் வடிந்த பின்னர், மீண்டும் வீடுகளுக்கு  வந்து பார்த்தபோது பொருட்கள் எல்லாம் வெள்ள நீரில் ஊறிப் போய் பயன்படுத்த முடியாமல் போய்விட்டன. மீண்டும் எந்த தைரியத்தில் இங்கே குடியிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது, "இங்கதான் 40 வருஷமா இருக்கோம். ஆற்றுல வெள்ளம் போறதை அடிக்கடி பார்த்திருக்கோம். ஆனா, போன வருடம் போல அதிகமாக வெள்ளம் வந்ததில்ல. இந்த முறை ஆற்றில் வெள்ளம் வருவது மாதிரி இருந்தால், பொருட்களையும் எங்களுடன் எடுத்துக் கொண்டு போய்விடுவோம். வெள்ளம் வடிந்ததும் வீட்டுக்குத் திரும்புவோம். எங்களுக்கு இந்த வீட்டை விட்டால் வேற கதி இல்லை" என்றனர்.

குறைவான வாடகை

மேற்கு சைதாபேட்டையில் சென்னை வெள்ளம் 2015-ன் போது அடையாறு ஆற்றின் கரையில் இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களில் பலர் சென்ற ஆண்டு மழை, வெள்ளத்துக்குப் பின்னர்  வீடுகளைக் காலி செய்து விட்டனர்.  தங்கள் வீடுகளை பெரும்பாலும் வாடகைக்குத்தான் விட்டிருக்கிறார்கள். மேற்கு சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தரைத்தளத்தில் ஒரு பெட்ரூம்  5 ஆயிரம் ரூபாய் வாடகைக்குக் கூட கிடைக்கிறது. குறைவான சம்பளத்தில் பணியாற்றுபவர்கள், சிறுதொழில் செய்பவர்கள் ஆகியோர்தான் குறைந்த வாடகைக்கு இடம் கிடைக்கிறது என்பதால் மேற்கு சைதாப் பேட்டையில் ஆற்றின் கரையோரத்தில் துணிச்சலாக குடியிருக்கின்றனர். ஆற்றின் கரையில் இருந்து தூரமாக இருக்கும் வீடுகளில் தரைத்தளத்தில் ஒரு பெட்ரூம் வாடகை  7 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளில்  தரை தளத்தில் தங்குவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்கிறார்கள்.

காலியாக இருக்கும் தரைதளங்கள்

கோட்டூர்புரத்தில் சென்னை வெள்ளம் 2015-ல் அடையாறு ஆற்றின் கரையோரம் வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் குடியிருந்த வீடுகளின் உரிமையாளர்கள், நகரின் வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டனர். தரைத்தளத்தில் உள்ள சில வீடுகள் வெறுமனே பூட்டிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு வெள்ளம் எவ்வளவு உயரத்துக்கு நின்றது என்பதைக் கூட சுவரில் அடையாளம் போட்டு வைத்திருக்கின்றனர். தண்ணீர் இன்றி, உணவு இன்றி, உடைகள் இன்றி மொட்டை மாடியில் தவித்ததை கண்ணீருடன் நினைவு கூறுகின்றனர். இந்த ஆண்டு அப்படி ஒரு மழை வர வாய்ப்பில்லை என்று நம்புகின்றனர்.


அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் சென்ற மழை, வெள்ளத்தின் துயரங்களால் பாதிக்கப்பட்டாலும், மழை குறித்து அவர்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை. இன்னும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டதாக நம்மிடம் தெரிவித்தனர்.

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்; தி.குமரகுருபரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ