Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஏன் இப்படியொரு நிலைமை வந்தது?!' -கோபத்தில் தகித்த விஜயகாந்த்

விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ' மூன்று தொகுதி தேர்தல் முடிவுகளும் இந்தளவுக்குச் சென்றதற்கு என்னதான் காரணம்?' எனக் கட்சியின் சீனியர்களிடம் கோபத்தைக் காட்டினார் என்கின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில். 

தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்களில் மிகச் சொற்பமான வாக்குகளை வாங்கியிருக்கிறது தே.மு.தி.க. கடந்த பத்து ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து இடைத் தேர்தல்களிலும் நல்ல வாக்குகளை வாங்கி வந்த தே.மு.தி.க, தற்போது மூன்று தொகுதி தேர்தலில் பா.ஜ.கவைவிடவும், குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பதை தே.மு.தி.க நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. " காலையில் இருந்தே விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் கேப்டன். தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிய நிமிடத்தில், முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டார். தொலைபேசியில் அழைத்த எந்த நிர்வாகிகளுக்கும் பதில் சொல்லவில்லை.

ஒருகட்டத்தில், ' இதற்குத்தான் போட்டியிட வேண்டாம்' என அப்போதே சொன்னேன் என கொந்தளிப்பைக் காட்டினார். தேர்தல் முடிவை அவர் எதிர்பார்க்கவில்லை" என நம்மிடம் விவரித்தார் தே.மு.தி.க நிர்வாகி ஒருவர்,  " கடந்த ஐந்து ஆண்டுகளாக, புதுக்கோட்டை இடைத் தேர்தலைத் தவிர, வேறு எந்த இடைத் தேர்தலிலும்  தே.மு.தி.க போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என பிரேமலதா ஆர்வம் காட்டினார். ' போட்டியிடக் கூடிய அளவுக்கு நல்ல வேட்பாளர்கள் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என சமாதானம் செய்தார் கேப்டன். எதையும் ஏற்கும் நிலையில் பிரேமலதா இல்லை. ஒருகட்டத்தில், தே.மு.தி.க சார்பில் போட்டியிடுவதற்கு எந்த மாவட்ட செயலாளரும் முன்வரவில்லை. ' தேர்தலுக்கு செலவு செய்ய பத்து பைசாகூட இல்லை' எனப் பலரும் ஒதுங்கிவிட, தொகுதிக்கு 25 லட்ச ரூபாய் என கைக்காசைக் கொடுக்க முன்வந்தார் விஜயகாந்த். 

அப்போதும் வேட்பாளர்கள் கிடைக்காமல், தஞ்சையில் போட்டியிட மலேசியாவைச் சேர்ந்த அப்துல்லா சேட்டை களமிறக்கினார். மற்ற இரண்டு தொகுதியிலும் வேட்பாளர்களை அறிவிப்பதற்குள் ஒருவழியாகிவிட்டார். ' எப்படியும் மூன்றாவது இடத்திற்கு வந்துவிடுவோம்' என நம்பிக்கையோடு இருந்தார். மக்கள் மத்தியில் கேப்டன் பிரசாரம் எடுபடவில்லை. ' மக்கள் ஏற்றுக் கொள்ளாததால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறினேன்' என்றார். இதற்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. ஒரு மேடையில், ' முதல்வரை மருத்துவமனைக்குச் சென்று நான் ஏன் பார்க்க வேண்டும்?' எனக் கேள்வி எழுப்பினார். கட்சி வித்தியாசம் பார்க்காமல், அனைத்து தலைவர்களும் முதல்வரின் உடல்நலத்தை விசாரிக்கச் சென்றனர். ஆனால், கேப்டனின் எதிர்மறையான பேச்சு, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பிரசாரம் தொடங்கியது முதல், தி.மு.கவை விமர்சிப்பதையே கொள்கையாக வைத்திருந்தார். குறிப்பாக, ஸ்டாலின் மீதுதான் அவருடைய தாக்குதல் அதிகப்படியாக இருந்தது. நேற்று சம்பந்தமில்லாமல், தி.மு.க தலைமையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எந்த ஒரு தேவையும் இல்லாத நேரத்தில் இப்படியொரு அறிக்கை வெளிவரக் காரணமே, எதையாவது சொல்லி மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த அறிக்கையும் பிரேமலதா சொல்லித்தான் வெளியானது. நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து இந்தத் தேர்தலில் களமிறங்கினார். அதுவும், எதிர்பாராத தோல்வியைக் கொடுத்துவிட்டது" என ஆதங்கப்பட்டார் அவர். 

" தே.மு.தி.கவின் முக்கிய சீனியர்கள் அனைவரும் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்பட வெகுசிலர் மட்டுமே அவருடன் உள்ளனர். பழைய நிர்வாகிகள் அவருடன் இருந்திருந்தால், வலுவாகவே இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருப்பார். கட்சியை உடைத்ததில் தி.மு.கவுக்குப் பெரும் பங்கு இருப்பதாக நினைக்கிறார். அதன் எதிரொலியாகவே நேற்று அப்படியொரு அறிக்கை வெளியானது. இந்தத் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பெறக் கூடிய வாக்குகளைக் கூட மூன்று தொகுதியிலும் தே.மு.தி.க வாங்கவில்லை. அடுத்து வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலிலாவது, கணிசமான வாக்குகளை வாங்க முடியுமா என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் கேப்டன். இன்று காலை முதலே, கோபத்தை அடக்க முடியாமல் குடும்ப உறுப்பினர்களிடம் கொட்டி வருகிறார் கேப்டன்" என்கிறார் தே.மு.தி.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

-ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close