Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோயில் உண்டியலுக்கும் 'கணக்கு'! -  ஆணையர் அதிரடி


கோயில் உண்டியல் கணக்கு விபரங்களைத் தினமும் காலை 10.30 மணிக்குள் மின் அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று  அனைத்து கோயில்களுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு மத்திய அரசு அதிரடியாக அறிவித்ததைத் தொடர்ந்து பணம் புழக்கம் முடங்கியதுடன், சில்லறை தட்டுப்பாடுகளும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சில்லறை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சில கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள எல்லாக் கோயில்களிலும் உள்ள உண்டியல்களை அன்று இரவு எண்ணி, கணக்கு பார்க்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

"தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்கள் மற்றும் அதிகம் வருவாய் தரும் கோயில்களுக்குத் தேவைக்கு ஏற்ப கூடுதல் உண்டியல்களை நிறுவலாம். அதன்படி தினமும் எண்ணப்படும் கோயில் உண்டியல் காணிக்கை விபரங்கள் அனைத்தும், உடனுக்குடன் தெரியப்படுத்தி, சம்பந்தப்பட்ட ஆவணத்தில் பதிய வேண்டும். அதேபோல் கோயிலின் தினசரி வரவு செலவு கணக்குகளை தினமும் சரிபார்க்கப்பட்டு அனைத்தும், அதற்கான ஆவணத்தில் பதிய வேண்டும்.

இதில், தவறு மற்றும் குறைபாடுகள் நடந்தால், கடும் குற்றங்களாக கருதப்படும். இணை ஆணையர்கள் அனைவரும், தங்களுடைய மண்டலத்தில் உள்ள கோவில்களின் (பட்டியலில் சேர்ந்த, சேராத) உண்டியல் திறப்பு, வங்கியில் செலுத்திய தொகை விபரங்களைத் தொகுத்து, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து, மின் அஞ்சல் மூலம், தினமும் காலை, 10.30 மணிக்குள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அதிக வருவாய் இல்லாத குறிப்பிட்ட முதுநிலை கோயில்களின் உண்டியலைத் திறப்பதற்காக, அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்காமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை, உரிய அலுவலர் முன்னிலையில் திறந்து, வரவு இனங்களைக் கணக்கிட்டு, உடனடியாக, வங்கியில் முழுமையாகச் செலுத்த வேண்டும். மேலும், கோயில் சொத்துக்கள் மூலம் அன்றாடம் மற்றும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை பெறப்படும் வருவாய் கணக்குகளும் நாள்தோறும் முறையாக வரவு வைக்க வேண்டும்" என்றும் ஆணையர் வீரசண்முகமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அதிரடி உத்தரவால், கருப்பு பணம் பதுக்கியவர்கள், கோயில் உண்டியல் பணத்தின் மூலம் வெள்ளை பணமாக மாற்றுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும், தமிழகத்தில் நிலவும் சில்லறை தட்டுப்பாட்டையும் நாளுக்கு நாள் வெகுவாக குறைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-ரா.வளன் 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close