Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூம்பு வடிவ ஒலி பெருக்கியும்... தொடரும் சர்ச்சையும்...

நெல்லை: கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்து உள்ள நிலையில், மீண்டும் இது தொடர்பான சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

மத ரீதியான திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் என அனைத்திலும் ஒலிபெருக்கி முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் பெரும்பாலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அளவுக்கு அதிகமான சத்தம் குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டதையடுத்து, கடந்த 2005-ம் ஆண்டு கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டன.

இன்றும் கிராமப்புறங்களில், மத வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அங்கொன்றும், இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதில் அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேபோல் கூடங்குளம் ஊராட்சித் தலைவராக இருந்த சாண்டல் முத்துராஜ் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்திய நாராயணன், நிஷாபானு ஆகியோர், ‘‘கோவில் விழாக்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட டெசிபல் ஒலிக்கு அதிகமாக ஒலி எழுப்பினால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கூடங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களில் காவல்துறை கறார் காட்டுவதால் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.
"காலம் காலமாக மசூதிகளில் வழிபாட்டுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்வுக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட டெசிபல் ஒலிக்கு குறைவாகவே இதில் இருந்து சத்தம் வருகிறது. எனவே இதை அகற்றக்கூடாது," என எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவரான தெகலான் பாகவி, "ஒலிபெருக்கியிலிருந்து வெளிவரும் ஒலி அளவு 70 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உள்ளேயே கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. இருந்தாலும் காவல்துறை ஒட்டுமொத்த ஒலிபெருக்கிகளையும் அகற்ற முனைவது கண்டனத்துக்கு உரியது. தினந்தோறும் குறிப்பிட்ட 5 வேளைகளில் வெறும் 2 நிமிடத்தில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் தொழுகைக்காக பள்ளிவாசல்களில் அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை.

2 நிமிடத்தில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதை மட்டுமே தடுக்க நினைப்பது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமல்லாமல் அவர்களின் வழிபாட்டுக்கு தடைபோடும் செயல். ஆகவே, தமிழக அரசும், காவல்துறையும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தேவையற்ற பதற்றம் உருவாவதைத் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி மத ரீதியான சர்ச்சையாக மாறி வருவது தான் வேதனை!

- ஆண்டனிராஜ்

படங்கள் : எல்.ராஜேந்திரன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ