Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று தொகுதி இடைத்தேர்தல் முடிவு... ஓட்டுக்காக வாங்கிய பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்த பொதுமக்கள்!

மூன்று தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஓட்டுக்காக வாங்கிய பணத்தை மாற்றுவதற்காக இன்று ஒரே நாளில் வங்கிகளில் பொதுமக்கள் குவிந்ததால் ஊழியர்கள் திகைத்துப்போனார்கள்.

நடந்து முடிந்த தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக பொதுமக்களுக்குக் குறிப்பிட்ட சில கட்சிகள் ஆயிரக்கணக்கில் பணப் பட்டுவாடா செய்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. அத்துடன், பணப்பட்டுவாடா புகார் மட்டும் தினமும் அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன தேர்தல் ஆணையம், அனைத்துப் புகார்களையும் பதிவு மட்டும் செய்துகொண்டு இடைத்தேர்தல் நடந்தால் போதும் என்று நிலைக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு இந்த தொகுதிகளில் பண மழை, பேய் மழை பெய்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 592 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுக்காக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தலைக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 3 தொகுதிகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக சுமார் 120 கோடிக்கு மேல் பண விநியோகம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கடந்த 19 ம் தேதி நடந்த இந்த மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலிலும், கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தலின்போது விநியோகிக்கப்பட்ட பணத்தை விட, பல மடங்கு பணம் இந்த தேர்தலில் இரவோடு இரவாக விநியோகிக்கப்பட்டதாக பொதுமக்களே கூறுகின்றனர்.

இப்படி ஓட்டுக்காக வாங்கிய பணத்தை மாற்றுவதற்காக இன்று காலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு படையெடுத்ததால், வங்கி ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்தனர். இந்நிலையில், இதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட குறிப்பிட்ட தொகுதிகளின் ஆளும் கட்சியைச் சேர்ந்த வட்டம், மாவட்ட பிரமுகர்கள் சிலர், பொதுமக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் 1000 ரூபாய்க்கு இருநூறு ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு ரூபாய் நோட்டை மாற்றித் தந்துள்ளதாகவும் அதிரடியாகப் புகார் எழுந்தது. இந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், "தேர்தலின்போது, பணம் கொடுப்பது போல் கொடுத்த அதே நபர்கள், இப்போது அந்த பணத்தை மாற்றுவதற்கு அதிலிருந்தே கமிஷனும் பெற்றுகொள்வது அதிர்ச்சியாக இருக்கிறது" என்றும் வருத்தப்பட்டனர்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மூன்று தொகுதிகளை, மாநிலத்தின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில், இன்று மட்டும் இந்த பகுதிகளில் 3 மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 8-ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின், தமிழகம் எங்கும் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட இந்த மூன்று தொகுதிகளிலும் வங்கியில் பணம் மாற்ற வரும் கூட்டம் குறைவாகக் காணப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே, குறிப்பிட்ட தொகுதிகளின் வங்கிகளில் மட்டும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் அலைமோதியது அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கெனவே, ஓட்டுக்காக பண விநியோகம் நடைபெற்றதாகத்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அதையே பின்னுக்குத் தள்ளி முந்தும் அளவுக்கும், திருமங்கலம் தேர்தல் சாதனையை இந்த மூன்று தொகுதி தேர்தல்களும் முறியடித்துவிட்டதாகவும் பொதுமக்கள் முதல் இதர அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வாய்விட்டே புலம்புகிறார்கள்.

- ரா.வளன் 


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ