Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாண்புமிகு மனிதர்களே.... நான் குரங்கு பேசுகிறேன்...!

குரங்கு

அன்பு மனிதா, 

நீ வாழும் பூமியில் எங்களையும் கடவுள் ஏன் படைத்தானோ தெரியவில்லை. காலம் காலமாக உனது இனத்துக்காக உழைத்து வரும் எங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் கொடுமை இழக்கிறாய். அந்த ராமரில் இருந்து தெருவில் வித்தைக் காட்டும் ராமன் குடும்பம் வரை உழைத்துக் கொட்டியிருக்கிறோம். எங்கள் உழைப்பினால்தான் ராமரும் சீதையை மீட்டார். ராமனின் குடும்பமும் குறைந்தபட்ச சுபிட்சமாவது வாழ்கிறது. எப்படிப் பார்த்தாலும் நாங்கள் உன்னை சார்ந்து இல்லை. காட்டில் எங்களுக்கு எல்லாவிதமான வாழ்க்கையும் இருக்கிறது. ஆனால், உனது சந்தோஷத்துக்காக எங்களை ஆட வைக்கிறாய், நடிக்க வைக்கிறாய் ,  பிச்சை எடுக்க வைக்கிறாய். நங்கள் சுயமரியாதையை இழந்து இதையெல்லாம் உனக்காகத்தானே செய்கிறோம். 

ஆனால், நீ என்ன செய்கிறாய்... எங்களுக்கு நன்மை கூட செய்ய வேண்டாம். குறைந்த பட்சம் தீமையாவது செய்யாமல் இருக்கலாமே. பாமாயில் வேண்டும் என்பதற்காக நாங்கள் விரும்பி வசிக்கும் மழைக்காடுகளை அழிக்கிறாய். சாலையோரத்தில் நாங்கள் நின்றால் எங்களுக்கு உணவு போட்டு சந்தோஷப்படுகிறாய். அதனால், நாங்கள் வழி தவறி வாழத் தொடங்கியிருக்கிறோம். உணவுக்காக உழைக்கும் தன்மை எங்களிடம் குறைந்தே போய் விட்டது. சாலையோரத்தில் உனது கார்களை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். உணவுக்காக உனது காருக்கு குறுக்கே பாய்ந்து எங்கள் குழந்தைகள் எத்தனை  பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? 

ஆனால், நாங்கள் உனது குழந்தையைக் கூட எங்கள் குழந்தையாக கருதுவோம். குழந்தை வளர்ப்புமுறை பற்றி உனக்கு தெரியுமா மனிதா?. எங்கள் கூட்டத்தில் ஒரு மடியில்தான் அவனோ அவளோ பிறப்பாள். ஆனால், ஊரே கூடி நின்று வளர்க்கும். எங்களிடம் இருந்துதானே நீயும் வந்தாய்?  குழந்தைகள் காருண்யம் கூட உன்னிடம் இருந்து அகன்று விட்டதே. பச்சிளம் குழந்தையை கூட வன்புணர்வு செய்யும் அளவுக்கு உனது உணர்வு சென்று விட்டது கண்டு வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். வேட்டையாடும் சிங்கம் கூட, காட்டெருமைக் கன்றுவை அன்புடன் பாதுகாக்கும் காட்சிகளை நீ பார்த்திருக்கிறாயா? 

உனது அற்ப சந்தோஷத்துக்காக எனக்கு சிகரெட் புகைக்கக் கற்றுக் கொடுத்து, அதனை போட்டோ எடுத்தும் அசிங்கப்படுத்துகிறாய். இன்னொரு முறை, ஒரு குழந்தை தவறி என்னிடம் விழுந்து விட்டது என்பதற்காக அடுத்த வினாடி என்னை சுட்டுக் கொன்றாய். மனித உயிர்களையே ஒரு கணத்தில் பறித்து விடும் நீ எனது உயிர் பற்றி எங்கே யோசிக்கப் போகிறாய். சிந்திக்கப் போகிறாய்? என்னை மட்டுமல்ல இந்த உலகில் உன்னை சார்ந்து வாழும் எந்த விலங்கினத்தையாவது நீ துன்புறுத்ததாமல் இருந்திருக்கிறாயா?

வீட்டில் பப்பி என்று அழைக்கிறாய். குப்பி என்று கொஞ்சுகிறாய். ஆனால், தெருநாய்கள் என்ற பெயரில் உலா வருபவற்றை இரக்கமே இல்லாமல் வேட்டையாடுகிறாய். அவற்றை எப்படியெல்லாம் கொல்லலாம் எனத் திட்டமிடுகிறாய்.  உனது வீட்டில் மிஞ்சும் உணவுகளை தெருவில் கொஞ்சம் எடுத்து வைத்தால், கூட அவற்றை தின்று விட்டு, அந்த நாய்கள் உனது காலை நன்றியுடன் சுற்றி வருமே. வீட்டில் வளர்வதை கொஞ்சும் நீ வெளியில் அலைவதை கொல்கிறாயே... உன்னிடம்தான் எத்தனை எத்தனை  முரண்பாடு? 

யனைகளை என்ன செய்தாய்... காட்டு விலங்குகளான அவற்றை சர்க்கஸ் கூடாரத்தில் அடைத்தாய். அதன் பெரிய உடலை வில் போல வளைக்கச் செய்தாய். எத்தனை கடினமான விஷயம். வீட்டில் உனது வருமானத்துக்காக அதனை வளர்க்கிறாய். தார் ரோட்டில் கால் கடுக்க நடக்க வைக்கிறாய். நீ மட்டும் செருப்பு போட்டுக்கொள்கிறாய். அதன் பாதங்கள் எவ்வளவு வலிக்கும்? அதையெல்லாம் விடு, நீ மட்டும் எல்லாவித சுகத்தையும் அனுபவிக்கிறாய். ஆனால்,  யானைகளின் இனவிருத்தி உரிமையை கூட பறிக்கிறாய். பின்னர் மதம் பிடித்து விட்டது என்று  பட்டினி போட்டு வதைக்கிறாய். இதுவெல்லாம் எந்தவிதத்தில் நியாயம்? உன் ஆண்மையை உன்னிடம் இருந்து பறித்தால்  நீ எப்படி கொதித்து எழுவாய்?

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒரு முறை ரயில் நிலையத்தில் எனது நண்பன் ஒருவன் மின்கம்பியில் அடிபட்டு விட்டான். உனது நண்பனுக்கு இந்த நிலை என்றால் கருகிய உடல் கண்டு அவனது அருகில் கூட சென்றிருக்க மாட்டாய். ஆனால், நான் உன்னைப் போல சுயநலவாதி அல்லவே... ஓடி போய் என் நண்பனைத் தூக்கினேன். அவனை சுயநினைவுக்கு கொண்டு வர போராடினேன். கடைசியில் அவனை சாக்கடைத் தண்ணீருக்குள் போட்டு  உயிர் பிழைக்க வைத்தேன். அப்போது கூட உன் கூட்டம் எனது உதவிக்கு வரவில்லை. போட்டோ பிடித்துக் கொண்டிருந்தது. ரயில் நிலையத்தில் உன்னைச் சேர்ந்த ஒரு உயிர் துடிக்க துடிக்க மரணிக்கும் தருணத்தை பார்த்துக் கொண்டு ரயில் பிடிக்கும் இனத்தைச் சேர்ந்தவன்தானே நீ. உன்னிடம் இருந்து இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இன்னொரு முறை, ஒரு நாய்குட்டியை சில பெரிய நாய்கள் தாக்க முயன்றன. அதனை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் பாய்ந்தேன். அந்த பெரிய நாய்களிடம்  சண்டையிட்டு நாய் குட்டியை காப்பாற்றினேன். அதனை என்னிடம் வைத்து பாதுகாத்தேன். அப்போது நாய் குட்டிக்கு நீ உணவு போட்டாய். அதனை நான் சாப்பிட்டால், நாய் குட்டிக்கு போட்ட உணவை நான் சாப்பிட்டு விட்டதாக அற்பத்தனமாக குற்றம் சாட்டினாய். 

நான் அதிகம் பேச விரும்பவில்லை. கடைசிச் சம்பவத்துக்கு வருகிறேன். உன்னுடன் ஒப்பிடும் போது வலிமையற்ற எனது கைகளை கட்டி அடித்து உதைத்து துன்புறுத்தினாய். என மனம் எத்தனை பாடு பட்டிருக்கும். எனது உடல் எத்தனை வேதனைப் பட்டிருக்கும். சுற்றியிருந்தவர்களுக்கு ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்க திராணி இல்லை. எனது கதறல் எவரது காதிலும் விழவில்லை. நான் எவ்வளவோ வேதனையில் துடித்தேன். அதனை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை. எனது சிறிய ஆசனத்துவாரத்தில் கூட குச்சியை நுழைக்கும் அளவுக்கு வக்கிரம் நிறைந்த உன்னை ஈனப்பிறவி என்று சொல்ல இப்போதும் என் மனம் வரவில்லை. ஏனென்றால் நெஞ்சில் ஈரமும் வீரமும் நிறைந்த உலகின் வலிமை மிக்க கடவுளின் வழி வந்தவர்கள் நாங்கள்!

-நான் குரங்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close