Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி வரவேண்டிய நேரத்துக்கு மிகச்சரியாக வருவார்!' எதைக் குறிப்பிடுகிறார் தமிழிசை?

மோடி

பிரதமர் மோடியின் அறிவிப்பு வந்து இன்றோடு 15 நாட்கள் ஓடி விட்டன. சீர்குலைந்த நிலைமை இன்னமும் சரியாகவில்லை.காலை 7 மணிக்குக் கூட வங்கி வாயில்களில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக பெண்கள், முதியோர்கள் எனக் கூட்டம் வரிசைகட்டி நிற்கிறது.உத்தரப்பிரதேசத்தில் பணம் மாற்ற நின்ற பொதுமக்களை மாட்டையடிப்பது போல ஒரு காவலர் அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. மருத்துவம் பார்க்க கூட காசில்லாமல் இறந்ததவர்களும் உண்டு. மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவிடம் இறந்த  அவருடைய  தம்பியின்  உடலைப்பெற,  பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தபோது மருத்துவமனை நிர்வாகம் வாங்க மறுத்துள்ளது. மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமான்யர்களின் நிலை என்ன ? தனிமனிதனுக்கு உரிமைகள்  பறிக்கப்பட்டபோதுதான் பல நாடுகளில் புரட்சி வெடித்தாக வரலாறுகள் கூறுகின்றன. 

இவ்வளவுதான் நீ பணம் எடுக்க வேண்டும் என்பது எதை காட்டுகிறது. ஜனநாயகமா, சர்வதிகாரமா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். நாட்டில் அசாதரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல வேண்டிய பிரதமர் மோடி வராமல் இருப்பதும் கருத்துகள்  எதுவும் சொல்லாமல் இருப்பதும் சர்வாதிகாரத்தின் போக்கு  என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடுகிறார்கள்.

கச்சேரி மேடைகளில் மட்டுதான் பேசுவாரா ? 

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்காத மோடி கடந்த 19-ம் தேதி மும்பை பாந்த்ரா குர்லா அரங்கில் நடந்த பாப் பாடல் அரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றுப் பேசினார் . "பிரதமர் மோடியால் தொலைக்காட்சிகளில் பேச முடிகிறது.ரூபாய் நோட்டுகள்  மாற்றும் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்து பேச முடியாதது ஏன்?" என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

 "500, ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடி ஒளிகிறார்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

அரசியல் செய்கிறார்கள்  எதிர்கட்சிகள் !

இது குறித்து மத்திய அமைச்சர் பொன் .ராதகிருஷ்ணனிடம் கேட்டபோது, "பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக உள்ளோம் என்று கூறியதும், இல்லை இதனை வேறு வழியில் விவாதிப்போம் என்று கூறுகிறார்கள். எதைச் செய்தாலும் அதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் முட்டுகட்டை போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுக்கின்றனர். விவாதிக்கவேண்டும் என்ற நோக்கம் எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லை. அரசியல் செய்வதிலேதோன் அவர்களுடைய நோக்கம் உள்ளது. இது தொடர்பாக மூன்று நாட்கள் விவாதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்களுடைய நோக்கம் விவாதிக்க வேண்டும் என்பது அல்ல. நாடாளுமன்றத்தை நிலை குலைய செய்ய வேணடும் என்பது மட்டுமே அவர்கள் நோக்கமாக இருக்கிறது" என்றார் 

வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார் 

இது குறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் பேசினோம். "நாள்தோறும் நடைபெற்று வரும் மக்களின் பிரச்னைகளை மத்தியஅரசு  சரி செய்து வருகிறது. இந்த விவகாரம் நிதித்துறை தொடர்புடையது என்பதால் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.  கொள்கை ரீதியிலான பிரச்னைகளுக்குத்தான் பிரதமர் பதில் சொல்லவேண்டும். அதே போன்று நடைமுறை சிக்கல்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டுதான் வருகிறார். சுய லாபத்துக்காக இதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த அறிவிப்பு வந்து 15 நாட்கள் ஆகப் போகிறது. இந்தத் திட்டம் மிகச் சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நிலையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறன. இதற்கு பிரதமர் எப்படி பதில் சொல்ல வேண்டுமோ அவ்வாறு பதில் சொல்லுவார்" என்றார்.  

மண்டியிட்டு வணங்கிய மோடியை வரவிடாமல் தடுப்பது எது ? 

2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதும் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்த  நரேந்திர மோடி நாடாளுமன்ற அவைக்குள் நுழைவதற்கு முன்பாக அவையின் படிக்கட்டுகளுக்கு முன்பு மண்டியிட்டு  தொட்டு வணங்கிய சம்பவம் நாட்டு மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும்போது நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று குறிப்பிட்டுப் பேசினார் மோடி. நாட்டு மக்கள் அனைவரும் சில்லறைக்காக போராடி கொண்டிருக்கிற இந்த நேரத்தில் மோடி அவைக்கு வராமல் தடுப்பது எது? என்பது குறித்து  அரசியல் விமர்சகர் பாலுவிடம் பேசினோம்.

ஏகாதிபத்ய நாடாளுமன்றங்களில் தான் உரையாற்றுவாரா ?  

நாடாளுமன்றத்தை வணங்கியபின் அவருடைய பணி முடிந்து விட்டது. மிக முக்கியமாக ! யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது அவருடைய கொள்கையாக  உள்ளது. அந்தக் கட்சி அவரை அப்படித்தான் வடிவமைத்து உள்ளது. அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் நாசுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறார். இது சர்வாதிகாரத்தின் போக்கு. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் நான் பதில்சொல்லமாட்டேன் என்ற முடிவில் உள்ளார். இதுவரை நாடாளுமன்றத்தில் மிக முக்கிய தருணங்களில் கூட பிரதமர் பங்கேற்கவில்லை. அனைத்துக்கும் அருண்ஜெட்லி  பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் அறிவிப்பை வெளியிடுவதும், அது தொடர்பாக பிரச்னை ஏற்படும்போது அமைச்சர்  அருண் ஜெட்லி அதற்காகப் பதில் சொல்வதும் தான் பி.ஜே.பி-யின்  தந்திரம். அறிவித்தவர் தானே அதற்கான பதிலைச் சொல்லவேண்டும். மக்கள் அவருக்கு வாக்கு அளித்துள்ளார்கள். எனவே நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. மக்கள்தான் தேர்தெடுத்தார்கள் என்று எத்தனை முறை கூறிக்கொள்கிறீர்கள். தற்போது மக்கள் படுகிற இன்னல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்ய நாடாளுமன்றங்களிலும் பிரதமர்  உரையாற்றுகிறார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அவர் தயங்குவது ஏன் ?  

- கே.புவனேஸ்வரி 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close