Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலைமறைவு மதன் சாமியாரான கதை:  காக்கிகள் மிரட்டலால் மனம் மாறினார் 


மருத்துவ மாணவர் சேர்க்கை பண மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்துக்கும் இடையே அக்கப்போர் நடந்துள்ளது. இதனால்தான் தலைமறைவாகி விட்டதாக மதன் போலீஸிடம் தெரிவித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் சாமியராகவே வாழ்ந்ததாக அவர் சொல்லியுள்ளார். ஐலசமாதிக்கு முயன்ற மதன், அதிலிருந்து பின்வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  

வேந்தர் மூவிஸ் மதன், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரைக் கடந்த 21-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், மதனை திருப்பூரில் கைது செய்தனர். தற்போது போலீஸார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மதன், தனக்கு உதவியவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதில் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மதனுக்குப் பல வகையில் மறைமுகமாக உதவியுள்ளனர். அதுபோல எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்துக்கு ஆதரவான இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள், மதனுக்கு 'குடைச்சல்' கொடுத்துள்ளனர். இத்தகைய டார்ச்சருக்குப் பயந்தே மதன், தலைமறைவானதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரை மிரட்டிய இரண்டு போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் உயர்பதவியில் இருக்கின்றனர்.


இதுகுறித்து மதன்தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "கங்கைக்குச் சென்று சமாதி அடைவதாக மதன், கடிதம் எழுதிய பிறகு நேரடியாக கங்கைக்குச் சென்றுள்ளார். இதற்கு முன்பு அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சாமியாரிடம் ஜலசமாதி அடைவது எப்படி என்ற பயிற்சியை பெற்றுள்ளார். இதன்பிறகு படகு மூலம் கங்கை ஆற்றுக்குள் சென்றுள்ளார். ஐலசமாதி அடைய அவர், முயற்சித்தபோது அதற்கான தைரியம் அவரிடம் இல்லை. இதனால் அந்த திட்டத்தை கைவிட்ட மதன், படகில் கங்கைக் கரைக்கு வந்துள்ளார். அதன்பிறகு வடமாநிலங்களில் பல பகுதிகளில் தலைமறைவாக இருந்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஆன்மிகத்தில் அதிக பற்றுக் கொண்ட அவர், வடமாநிலத்திலும் சாமியாராக வலம் வந்துள்ளார். காவி உடை அணிந்து சிவனுக்கு பூஜைகளை செய்துள்ளார். இதன்பிறகே தற்கொலை எண்ணத்தை முற்றிலும் அவர், கைவிட்டுள்ளார். பிறகு இந்த வழக்கை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நெருங்கியவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். 


 அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள மதனின் மனைவி சுமலதாவின் தூரத்து உறவினரான வர்ஷாவின் வீட்டுக்கு மதன் வந்துள்ளார். வர்ஷாவின் வீட்டிலிருந்தபடியே நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்துள்ளார். நவம்பர் 23-ம் தேதி தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் மதன், சரண் அடைய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து வந்துள்ளார். இந்தத் தகவல் போலீஸாருக்கு கிடைத்ததும் நவம்பர் 21-ம் தேதி அவரைக் கைது செய்து விட்டனர்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மதன், எங்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரிடம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களைத் தெரிவித்து இருக்கிறார். அதையெல்லாம் வீடியோவிலும், வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறோம். மதன், தலைமறைவாக இருந்த காலத்தில் அவருக்கு உதவியவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் சொல்லி உள்ளார். இதனால், மதனுக்கு உதவியதாக அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 
மதனுக்கு உதவியதில் அதிக பங்கு சென்னையைச் சேர்ந்த கீதாஞ்சலிக்கு உள்ளது. அடுத்து அவரின் நம்பிக்கைக்குரிய சேகர், அவரது பெண் தோழி மெர்ஷியா, மதனின் மனைவி சுமலதாவின் தூரத்து உறவினர் வர்ஷா ஆகியோருக்கும் உள்ளது. இதனால் அவர்களும் எங்களது விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றனர். 


மதன், தலைமறைவாக இருந்தபோது, அவர், வடமாநிலங்களில் உள்ள ஆசிரமங்களில் ஆன்மிக வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தாகவும் தெரியவந்துள்ளது. வடமாநிலத்தில் ஆசிரமம் ஒன்றை நடத்த அவர் ஏற்பாடும் செய்துள்ளார். இதற்காக அங்கு இடமும் வாங்கிய தகவலும் தெரியவந்துள்ளது. எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் குறித்து பல கேள்விகளை கேட்டுள்ளோம். அதற்கு பதில் அளித்த மதன், பல கோடி ரூபாயை அவர்களிடம் கொடுத்த தகவலையும் தெரிவித்துள்ளார்" என்றார்.

- எஸ்.மகேஷ்   
படம்:ஆ.முத்துக்குமார்,தே.அசோக்குமார்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ