Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எஸ்.ஆர்.எம். குழுமத்தைக் காப்பாற்ற என்னைப் பலிகடா ஆக்குகின்றனர்!' மதன் பரபரப்பு பேட்டி


எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்திடம் 90 கோடி ரூபாய் கொடுத்தேன் என்று மதன், பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே 28-ம் தேதி மாயமானார். எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 84 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக மதன் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் இருக்கிறார். 6 மாதங்களாக தேடப்பட்ட மதனை, கடந்த 21-ம் தேதி திருப்பூரில் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது மதனின் தாயார் தங்கத்தின் வழக்கறிஞர் இன்பெஃன்ட் தினேஷ், மதனை சிறையில் சந்தித்து பேசினார். அவரிடம் சில கேள்விகளை மதனிடம் கேட்க சொன்னோம். அதற்கு மதன், அளித்த பதில்கள். 

எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?

கடந்த 9 ஆண்டுகளாக  எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் பெரும்பாலான மாணவர் சேர்க்கை என் மூலம் நடந்து வந்தது. இதில் எங்களுக்குள் எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. சில ஆண்டுகளாக எனக்கு பச்சமுத்து, முக்கியத்துவம் கொடுப்பது எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தகராறு இன்று வீதிவரை வந்துள்ளது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 உங்களை தற்கொலை செய்யுமளவுக்கு தூண்டியது எது?

 பத்துமுத்து மீது அளவுக்கு கடந்த மரியாதையும், பக்தியும் வைத்து இருக்கிறேன். அவருக்கும், எனக்கும் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டதில்லை. 9 ஆண்டுகளாக அவருக்கு நம்பிக்கைகுரியவனாகவே இருந்தேன். இதனால்தான் இந்திய ஜனநாயக கட்சி தொடங்கிய போது எனக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டது. சினிமா பட தயாரிப்பில் நான் ஈடுபட்டபோது கூட வேந்தர் என்ற பெயரை வைத்ததற்கும் பச்சமுத்து மீதுள்ள மரியாதையே காரணம். அதில் நஷ்டம் ஏற்பட்டது உண்மைதான். அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நான் வாங்கிய 90 கோடி ரூபாயை எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர். நான் கொடுத்த பணத்துக்கு ஆவணங்கள் இருக்கின்றன. ஏன், வீடியோ ஆதாரம் கூட இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்தாலே என்தரப்பு நியாயம் தெரிந்து விடும். 

ஜலசமாதி செய்யப்போவதாக சொல்லி விட்டு 6 மாதங்கள் தலைமறைவாக இருந்ததற்கு என்ன காரணம்?

வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருந்தாலும் விரக்தி, நம்பிக்கை துரோகம் ஏற்படும்போது அதை ஏற்றுக் கொள்ள மனதில் தைரியம் வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தையே நம்பி இருந்தேன். அங்கு எனக்கு துரோகம் நடந்தபோது என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் கங்கையில் சென்று ஜலசமாதி அடையத் திட்டமிட்டு தற்கொலை கடிதம் எழுதினேன். அதற்காக படகில் கங்கை நதியிலும் சென்றேன். ஆனால் அந்தளவுக்கு எனக்கு தைரியமில்லை. ஏதோ ஒரு சக்தி என்னை தடுத்து விட்டது. இதனால் ஜலசமாதி திட்டத்தை கைவிட்டு சரண் அடைய முடிவு செய்தேன். ஆனால், எஸ்.ஆர்.எம் கல்வி தரப்பிலிருந்து எனக்கு பலவகையில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நவம்பர் 23-ம் தேதி சரண் அடைய முடிவு செய்து திருப்பூர் வந்தேன். ஆனால் அதற்குள் என்னை கைது செய்து விட்டனர். தலைமறைவாக இருந்த காலகட்டத்திலும் என் மனம், ஆன்மிகத்தையே தேடியது. 

தோழிகள் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறதே?

பண மோசடி வழக்கில் என்னுடன் பெண்களை சம்பந்தப்படுத்தி பேசுவதற்கு உள்நோக்கம் இருக்கிறது.  எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தை காப்பாற்ற என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன.அவசர காலத்தில் எனக்கு உதவி செய்த பெண்களுடன் என்னை சேர்த்து கொச்சைப்படுத்துகின்றனர். என்னுடைய மனைவிகளுக்கு இடையே தகராறு என்றும் சொல்லி செய்திகள் வெளியிடப்படுகின்றன. வர்ஷாவை  திருமணம் செய்ததாகவும் தவறான தகவல்கள் பரபரப்படுகின்றன. எனக்கு உதவி செய்த பெண்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரிடமும் அண்ணன், தங்கையாகவே பழகி உள்ளேன். 
தேவையில்லாமல் என்னுடைய பெயரை இழிவுப்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். 

இவ்வாறு மதன், பதில் அளித்தாக வழக்கறிஞர் இன்பென்ஃட் தினேஷ் தெரிவித்தார். 

- எஸ்.மகேஷ்


 

எடிட்டர் சாய்ஸ்